என் மலர்
உள்ளூர் செய்திகள்

துபாயில் இருந்து நூதன முறையில் 128 கிராம் தங்கத்தை சாயம்போல் லுங்கியில் பூசி கடத்தியவர் கைது
- முத்துலிங்கம் என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.
- அதிகாரிகள் லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் முத்துலிங்கம் (வயது 46) என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பயணி கொண்டு வந்த லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அதனை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதில் தங்கத்தை சாயம் போல் மாற்றி நவீன உத்தியை கையாண்டு நூதன முறையில் பூசப்பட்டு இருந்தது உறுதியானது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது.
தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த விமான பயணி முத்துலிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






