search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா குண்டுவெடிப்பு"

    • களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    திருவனந்தபுரம்:

    எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்கள் எதுவும் வெளியிடக்கூ டாது என்று அரசு எச்சரித்திருந்தது.

    களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் கேரள அரசு ஹமாசுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டிய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், குண்டு வெடிப்புகளை மாநிலத்தின் அரசியலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டார்.

    அவரது கருத்துக்கு கேரள அரசு மற்றும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது 153(கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்), 153ஏ(பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மட்டுமின்றி இதே போன்று 18 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார்.
    • ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது.

    கொச்சி:

    கேரள மாநிலம் கொச்சி அருகே ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கம் உள்ளது.

    அந்த மாநாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் யெகோவாவின் சாட்சிகள் என்னும் கிறிஸ்தவ மத பிரிவின் 3 நாள் பிரார்த்தனை கூட்டம் நடந்து வந்தது.

    இறுதி நாளான நேற்று காலை பிரார்த்தனை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். மாநாட்டு அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த நிலையில் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் இருந்தனர். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கின் மையப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.

    அதில் ஏராளமானோர் காயமடைந்து அலறினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் இரு பக்கங்களிலும் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    மாநாட்டு அரங்கில் குண்டு வெடித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பெண் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கேரள குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை காப்பாற்ற கூடுதல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க நிபுணர்களை கொண்ட போலீஸ் சிறப்பு குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அவர்கள் விசாரணை தொடங்கிய நிலையில் டோமினிக் மார்ட்டின் என்பவர் தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்து உள்ளார்.

    கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டுகள் வைத்தது நான் தான் என்று அவர் பொறுப்பேற்று இருக்கிறார். போலீசாரிடம் நேற்று அவர் பரபரப்பு வாக்குமூலமும் அளித்து உள்ளார். அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே டோமினிக் மார்ட்டினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சிறப்பு குழு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் கொச்சியில் சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார். அந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை முடிந்த நிலையில் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் இன்று டோமினிக் மார்ட்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கொச்சியில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது பற்றிய தகவல்களை வெளியிட என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    சரணடைந்த டோமினிக் மார்ட்டினுக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று விசாரணை குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யார்? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பலத்த பாதுகாப்புடன் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    விசாரணை முடிந்த பிறகு இறுதி தகவல்களை வெளியிடுவோம் என்று கேரள மாநில போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான மர்மம் நீடித்தபடி உள்ளது.

    ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது. அந்த காரில் சென்றவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த நீல நிற காரின் பதிவு எண்ணை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நீல நிற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

    அந்த காரில் தான் டிபன் பாக்சில் ஐஇடி வெடிகுண்டுகள் எடுத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வெடிகுண்டுகளை டோமினிக் மார்ட்டினிடம் கொடுத்த பிறகு காரில் வந்தவர்கள் வேகமாக தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் பினராயி விஜயன் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    • கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
    • தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை வழங்கினார்.

    • விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    • ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    • கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது.
    • காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்

    கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

    கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். விரைவாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வன்முறையால் வன்முறையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×