search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunder"

    எடப்பாடி பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர், சேலம் கோரி மேடு உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளான நேற்று எடப்பாடி, பூலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. 

    பூலாம்பட்டி பகுதியில் பெய்த கன மழையால் சித்தனூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எடப்பாடி-பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலையும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    எடப்பாடி உழவர் சந்தையின் முகப்பு வாசலில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பலத்த மழையின்போது செல்போன் டவர் மீது இடி விழுந்ததில் டவர் தீப்பிடித்து எரிந்தது.
    புஞ்சை புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக தொடர்ந்து மழை கொட்டியது. ஈரோடு நகரை தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    புஞ்சை புளியம்பட்டியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இடியும்-மின்னலும் அதிகமாக இருந்தது. இதில் புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் மீது ‘இடி’ விழுந்தது.

    இதில் அந்த செல்போன் டவர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிகாலை 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது மழையும் பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    தக்க சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
    கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்ததில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, துடியலூர், பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

    கிக்கானி பள்ளி அருகே மற்றும் லங்கா கார்னர், சிவானந்தா காலனியில் பாலங் களின் கீழ் பகுதியில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மீண்டும் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கணபதி சங்கனூர் சாலையில் உள்ள காமராஜபுரத்தில் நேற்று பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

    இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இன்று காலை வரை யாரும் வந்து மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்து வதற்காக சங்கனூர் சாலையில் திரண்டனர். தகவல் அறிந்து சரவணம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

    பெரியநாயக்கன்பாளையம்-40, சூலூர்-2.20, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழக பகுதி-34, கோவை தெற்கு-5, பீளமேடு-0.20

    பேரூர் காந்தி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 22). இவர் பேரூர் படித் துறை அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். நேற்றுமாலை மழை பெய்த போது அருகே விக்னேஷ் படித் துறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவி தமாக மின்னல் தாக்கியதில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    காட்டுமன்னார்கோவிலில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று வீசியதால் காட்டு மன்னார் கோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து நுழைவு வாயிலில் உள்ள கதவின் மீது விழுந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளேரி என்ற இடத்தில் புளிய மரமும், காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலை ஓரம் இருந்த வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

    இதேபோல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு போக்குவரத்து சீரானது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஒருசில கிராமங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, தொழுதூர், ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. மேலும் பெண்ணாடம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள கடைவீதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.

    இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.

    நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.

    இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுவையில் நேற்று இரவு 9 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு மாதம் முடியும் தருவாயிலும் காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலின் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தென் தமிழகம் வழியாக வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு புதுவையில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் சாலையோர சிற்றுண்டி மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    வேலூரில் பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூரில் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

    அதன்பின் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை இரவு 10.30 மணி முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12.30 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. பல்வேறு பகுதியில் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    புதிய பஸ் நிலையம் கிரீன் சிக்னல் பகுதி, சர்வீஸ்ரோடு, ஆரணி ரோடு, நேதாஜி மைதானம், கோட்டை மைதானம், ஆற்காடு ரோடு கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானம் போன்ற இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேலூரில் 89.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அதேபோல் மாவட்டத்தில் ஆற்காடு குடியாத்தம், மேல் ஆலத்தூர், வாலாஜா, அரக்கோணம் காவேரிப்பாக்கம், சோளிங்கர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியது.

    கோடை மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திண்டுக்கல் அருகே நேற்று இரவு மழை பெய்தபோது இடி விழுந்து 2 வீடுகள் சேதமானது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மழை பெய்யும் சமயங்களில் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுகின்றனர்.

    மழை பெய்ய ஆரம்பித்தவுடன் மின் இணைப்பும் துண்டிக்கபடுவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். நேற்று மாலை சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அம்பாத்துரையில் ஜவுளி வியாபாரி மோகன்ராஜ், அருகில் வசிக்கும் கோழிக்கடை மாணிக்கம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் இடி விழுந்தது. அந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது இருவரது வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    மேலும் மின் இணைப்புகள் அனைத்தும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. கட்டில்கள் மற்றும் ஆடைகளில் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டில் உள்ள பொருட்களும் சிதறி ஓடியதுடன் மிகப்பெரிய பள்ளம் உண்டானது. இடி விழுந்தால் என்ன ஆகும் என்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு நேற்று கண்கூடாக தெரியவந்தது. மழை பெய்த நேரத்தில் மின்சாரம் இருந்ததால்தான் மின் சாதனங்கள் எரிந்துள்ளதாக மின்வாரிய ஊயர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை பெய்யும் போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
    அரியலூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்தது.

    இந்நிலையில், கடந்த 18–ந்தேதி அரியலூரில் திடீரென்று பலத்த காற்று வீசி இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அரியலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின. மழை பெய்யும் போது பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் அரியலூர்–செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் சாலையோரத்தில் 50 ஆண்டு பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

    இதேபோல் கல்லூரி சாலை, அரியலூர் அரசு கலை கல்லூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நின்ற சில மரங்கள் வேரோடு சாய்ந்தும், சில மரங்களில் கிளைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின்சார கம்பிகள் மீது பட்டதால் மின்சாரம் கம்பிகளும் தாழ்வாக தொங்கின. இதனால் நிறைய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மழை பெய்யும் போது மின் தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை. சுமார் அரை மணிநேரம் மழை நீடித்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மாலை பெய்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
    குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு அனைத்து மாவட்டங் களிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இது புயலாக மாறியது. இதற்கு சாகர் என்று பெயரிட்டு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையங்கொண்டிருப்பதாக கூறியது. இது தென்மேற்கு திசையில் நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தது.

    வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குருந்தன்கோடு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அங்க அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, ஆரல்வாய் மொழி, மயிலாடி, கொட்டாரம், இரணியல், குளச்சல், அடையாமடை, கோழிப் போர்விளை பகுதி களிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    இடி-மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து ராஜாக் கமங்கலம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், குலசேகரம், திருவட்டார், நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு ரோட்டில் சாய்ந்தது. மரக்கிளைகள் மின் கம்பம் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் அறுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன. மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி அளவு கொள்ளளவு கொண்ட பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.10 அடியாக இருந்தது. அணைக்கு 286 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.75 அடியாக இருந்தது.

    சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கு மேற்பட்ட குளங்களில் 250-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    திருவட்டார், குலசேகரம், ஈத்தாமொழி பகுதிகளில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.6, பெருஞ்சாணி - 38.8, சிற்றாறு 1-31.6, சிற்றாறு 2-30.4, மாம்பழத்துறையாறு-112, நாகர்கோவில்-96, பூதப்பாண்டி - 54, சுருளோடு- 60, கன்னிமார் - 11, முள்ளங்கினாவிளை - 54, புத்தன் அணை- 41, திற்பரப்பு -72, ஆரல்வாய்மொழி- 13, குருந்தன்கோடு - 154, பாலமோர் - 22, மயிலாடி -63, கொட்டாரம் - 44, இரணியல் -47, ஆணைக்கிடங்கு - 112, குளச்சல் - 64, அடையாமடை - 48, கோழிப்போர்விளை - 52.

    ×