search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.
    • மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது.

    மணிலா:

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.

    நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வினாடிகள் லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கணிசமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரி யவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர்.நேற்று முதல் சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வெளியில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.
    • தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம்.

    பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு "வாட்டர் பெல்" என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அமலானது.

    இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும். 

    அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த வாட்டர் பெல் முறையின் மூலம், வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் காத்துக் கொள்ள முடியும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட இன்னும் ஆரம்பிக்காத நிலையில், வெயில் இப்போதே ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

    இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.

    அதனால், கேரளாவின் "வாட்டர் பெல்" நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
    • அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.

    காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.


    கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.

    தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.

    இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    • பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்
    • பறவைகள் தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் சிறு தண்ணீர் தொட்டியும் விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்

    அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜ், அமைப்பாளர்ஜி.ஹரிராஜ் ஆகியோர் விடுத்து உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு உங்கள் பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்கும்படியும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    அதே போல பறவைகளினுடைய தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் சிறு தண்ணீர் தொட்டியும் விலங்குகளுக்கும் தாகம் தீர்ப்பதற்காக ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றையும் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

    தண்ணீர் பந்தல்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் உரிய அனுமதி பெற்றும் அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.38 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் (104.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்து உள்ளனர். இதேபோல் நீர்ச்சத்து ஆகாரங்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானம், எலுமிச்சை சாறு, கரும்புசாறு குடித்தும் தர்பூசணி உள்ளிட்ட நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டும் வருகின்றனர்.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150 வரை விற்பனை ஆகிறது. மேலும் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எலுமிச்சை அதிகளவில் உற்பத்தி நடந்து வரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலை மேலும் உயரும் என்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தன. இதனால் பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து இன்று கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, அவரைக்காய்-ரூ.10, வரி கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.20 க்கு விற்பனை ஆனது.

    • பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது. இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில், 7 ஏக்கர் மதிப்புள்ள செடி, தேயிலை, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது,

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
    • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

    ×