search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்"

    • பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
    • குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப் பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்திற்கு இடம் அளித்ததற்காக 2009-ம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில் நிரந்தர பணி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்பவர் உள்பட 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளனர்.

    இதற்கிடையே நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நித்யாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். அவரை தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டு துறைமுக நுழைவாயில் அருகே ஊராட்சித் தலைவர் சேதுராமன் தலைமையில் திரண்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்யாவின் பணிநீக்கத்துக்கு காரணமான துறைமுக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆவடி காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான நித்யாவை படகுகள் மூலம் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கதி என்ன ஆனது? என்பது தெரியாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்தார்.
    • அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த நாட்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவோடு நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகினர்.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் (நேற்று முன்தினம்) 18-ந் தேதி வரை மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்று 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 61 நாட்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மீனவர்கள் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மீண்டும் மீன்பிடிக்க புறப்பட இருந்த நிலையில் இந்த அறிவிப்பால் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த காலங்களில் நாட்டுப்படகு என்ற பெயரில் விசைபடகுகளில் சிலர் மீன்பிடிக்க சென்றதாக மீனவர்கள் புகார் கூறினர்.

    இந்நிலையில் ராமநாத புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தூத்துக்குடி மீனவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிகாலை வானிலை மாற்றம் எச்சரிக்கை அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    • சின்னமுட்டத்தில் வலைகளை மீனவர்கள் சீர் செய்தனர்
    • தடைக்காலம் முடிய 4 நாட்களே உள்ளன

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்க ளில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெ ருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தடை அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை யிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்சந்தைகளும் வெறிச் சோடி கிடக்கின்றன.

    இதற்கிடையில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் தடை காலம் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் படகுகளை கரையேற்றி உடைந்த பகுதியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டி ருக்கிறார்கள். வருகிற 15-ந்தேதி அதி காலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்பட குகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.

    • குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
    • ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடக்கம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் இன்று காலை கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து காலை 10மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்

    கன்னியாகுமரி :

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில்நேற்று மாலைநடந்தது. மாலை 5.30மணிக்கு பஜனையுடன் நிகழ்ச்சிதொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. தொடர்ந்து சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.

    அதையடுத்து சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர்முன்னிலை வகித்தார்கள். இதில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கன்னியா குமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜா மணி அய்யர்தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×