search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடலில் விழுந்து மாயமான வாலிபரின் கதி என்ன? பொதுமக்கள் போராட்டம்
    X

    கடலில் விழுந்து மாயமான வாலிபரின் கதி என்ன? பொதுமக்கள் போராட்டம்

    • பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
    • குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப் பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்திற்கு இடம் அளித்ததற்காக 2009-ம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில் நிரந்தர பணி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்பவர் உள்பட 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளனர்.

    இதற்கிடையே நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நித்யாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். அவரை தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டு துறைமுக நுழைவாயில் அருகே ஊராட்சித் தலைவர் சேதுராமன் தலைமையில் திரண்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்யாவின் பணிநீக்கத்துக்கு காரணமான துறைமுக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆவடி காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான நித்யாவை படகுகள் மூலம் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கதி என்ன ஆனது? என்பது தெரியாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×