search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushma Swaraj"

    வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக உக்ரைனில் கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்கப்பட்டார். #sushmaswaraj #AnujGoel
    புதுடெல்லி:

    இந்தியாவை சேர்ந்தவர் அனுஷ் கோயல். இவர் உக்ரைன் நாட்டில் தங்கி பணிபுரிகிறார். சமீபத்தில் அங்கு இவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். எனவே அவரது உறவினர்கள் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மோடியின் உதவியுடன் அனுப் கோயலை மீட்போம் என்று நேற்று முன்தினம் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்து இருந்தார். அது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் உள்ள இந்திய தூதருடன் பேசினேன். உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு அவரை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். இத்தகவலை அனுஷ் கோயலின் சகோதரர் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கடத்தப்பட்ட எனது சகோதரர் அனுஷ் கோயல் உக்ரைனில் உள்ள வீட்டுக்கு பத்திரமாக திரும்பிவிட்டார். சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என கூறப்பட்டுள்ளது. #sushmaswaraj #AnujGoel
    வாரணாசியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை இன்று துவக்கி வைத்தனர். #YogiAdityanath #SushmaSwaraj #YouthPravasiBharatiyaDiwas
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. வாரணாசில் இந்த மாநாடு முதல் முறையாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரவேச பாரதி திவாஸின் கருப்பொருள் "புதிய இந்தியாவை உருவாக்க இந்திய புலம்பெயர்ந்தோர்களின் பங்கு" ஆகும்.

    மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    இன்று முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காஷ்மீர், சாரநாத் மற்றும் கங்கா காட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    அடுத்த மூன்று நாட்களில் கலந்துரையாடல்களின் போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல உலகத் தலைவர்கள்,  புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கினைக் குறித்து கலந்துரையாடுவார்கள்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

    இன்று நடைபெறும் நிகழ்வில் அடுத்த தலைமுறை மீது, குறிப்பாக உத்திரபிரதேச இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான இளம் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். துவக்க விழாவில் உ.பி முதல்வருடன் மத்திய மந்திரிகள் சுஷ்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கன்வல் ஜீத் சிங் பக்ஷி, நார்வே எம்.பி.  ஹிமான்ஷு குலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளை நடைபெற உள்ள நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுக்நாத் ஆகியோர் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரவசி பாரதிய பிரதிநிதிகளுக்கும், மாநில தலைவர்களுக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தினை வழங்க உள்ளார்.

    புதன்கிழமை  நடைபெற உள்ள விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ.க்கள் மற்றும் என்ஆர்ஐக்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் விருது (பிபிபிஏ), வழங்கப்படும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் கணிசமான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

    மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை உற்சாகமூட்டவும், ஓர் அற்புத அனுபவத்தை வழங்கவும் கங்கை மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. #YogiAdityanath  #SushmaSwaraj  #YouthPravasiBharatiyaDiwas

    உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    சமர்கன்ட்: 

    மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருநாள் பயணமாக நேற்று அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை சென்றடைந்தார். 

    சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்ற மத்திய ஆசிய நாடுகளின் மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

    சமர்கன்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானும் பங்கு பெற்றிருப்பது அளவிலா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த உஸ்பெகிஸ்தான் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சமர்கன்ட் நகரை வந்தடைந்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    சமர்கன்ட்:

    மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 நாள் பயணமாக இந்நாடுகளுக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்து நாடுகளின் தலைவர்களும் நாளை முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  இருநாள் பயணமாக இன்றிரவு அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை வந்தடைந்தார்.



    சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #SushmaSwaraj  #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Javad Zarif
    புதுடெல்லி:

    ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் மூன்றாவது நாடாக ஈரான் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஈரான் சுமார் 2 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

    ஈரானுடன் எந்த நாடும் வர்த்தக தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா உதவிகரமாக உள்ளது.



    இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் விவகாரம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SushmaSwaraj  #Javad Zarif

    ‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். #Hindi #IndiaCulture #SushmaSwaraj
    சென்னை:

    தென்னிந்திய இந்தி பிரசார சபையின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சபை வளாகத்தில் நேற்று நடந்தது. சபை தலைவரும், வேந்தருமான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பட்டங்களை வழங்கி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

    தென்னிந்திய இந்தி பிரசார சபை நூறு ஆண்டுகள் சேவை செய்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மொழி என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். மொழி மூலம் தான் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். மொழியின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியால் கலாசார வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சிகள் அடங்கி உள்ளன.

    வடஇந்தியாவில் பல பகுதிகளில் பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்தி மொழி உதவுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இந்தி மொழி பேசப்படுவதில்லை. 1918-ம் ஆண்டு தென்னிந்திய இந்தி பிரசார சபை ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 1964-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தென்னிந்திய இந்தி பிரசார சபை நாட்டு நலன் கருதி தேசிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

    நாட்டுக்கு சேவையாற்றி வரும் சபை இந்தி மட்டும் அல்லாது பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதுடன், பிராந்திய மொழி நூல்களையும் வெளியிட்டு வருகிறது.

    இதுவரை 32 ஆயிரத்து 199 பேர் விஷாரத் பட்டமும், 22 ஆயிரத்து 6 பேர் பிரவின் பட்டமும் பெற்றுள்ளனர். குறிப்பாக தற்போது 4 ஆயிரத்து 112 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர கல்வி பயின்ற 2 ஆயிரத்து 337 பேருக்கும், ரெகுலர் படிப்பு மூலம் பயின்ற 1,799 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 26 பேர் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசி உள்ளார். நானும் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியில் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களிடமும் இந்தியில் தான் பேசுகிறோம். இதன் மூலம் உலகளவில் இந்தி மொழிக்கு நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி பல வெளிநாட்டினர் தாங்களும் இந்தி படிப்பதற்காக தங்கள் நாடுகளில் இந்தி அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்காது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஊடகங்கள் மற்றும் விளம்பரத்துறைகளில் இந்தி படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. டுவிட்டர், பேஸ் புக் ஆகியவற்றிலும் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவிலும் பிராந்திய மொழிக்கு நிகராக இந்தி மொழியும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டம் பெற்றவர்கள் இந்தி மொழியை பரப்புவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் ‘சுப பிரபாத்’ (‘குட்மார்னிங்-365’) என்ற நூலை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டார். தொடர்ந்து பிராந்திய மொழி இலக்கியவாதிகள் மாலன் நாராயண் (தமிழ்), வேம்பள்ளி ரெட்டி நாகராஜலு (தெலுங்கு), சின்னப்பா அங்காடி (கன்னடம்), மாலூர் ஸ்ரீதரன் (மலையாளம்) ஆகியோருக்கு விருதும், சான்றிதழும் மந்திரி சுஷ்மா சுவராஜ் வழங்கினார்.

    தொடர்ந்து மூத்த இந்தி ஆசிரியர்கள் பி.வத்சலா, ஆர்.பாலமீனாட்சி, ஜி.விஜயலட்சுமி, எம்.எல்.கீதா, மகேஷ்வரி ரெங்கநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    முன்னதாக துணைவேந்தர் அனுமந்தப்பா வரவேற்றார். பொதுசெயலாளர் எஸ்.ஜெயராஜ், பொருளாளர் சி.என்.வி. அண்ணாமலை, பதிவாளர் பிரதீப் கே.சர்மா, கல்விக்குழு தலைவர் எஸ்.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனி அதிகாரி கே.தீனபந்து நன்றி கூறினார்.  #Hindi #IndiaCulture #SushmaSwaraj 
    பஹ்ரைன் நாட்டில் அராபிய செல்வந்தர் வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்ட அதிகாரிகளை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராட்டியுள்ளார்.
    மனாமா:

    இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முறையான சம்பளம், சரியான உணவு மற்றும் தங்கும் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு அவதிப்படுவதாக தெரிகிறது. இதில் ஆண்களின் நிலை சற்று சுமாராக இருந்தாலும் வீட்டு வேலை செய்வதற்காக இங்கிருந்து செல்லும் பல பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

    இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண்ணை அராபிய செல்வந்தர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது.

    அந்த தகவலை அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் துரிதமாக களமிறங்கினர்.

    இதற்கிடையில், தன்னிடம் சிக்கிய பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அந்த அராபிய செல்வந்தர், அந்த பெண்ணுக்காக நான் ஏகப்பட்ட பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று சவால் விட்டார்.

    இதுதொடர்பாக, பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் போலீசார் துணையுடன் அந்த அராபிய செல்வந்தரின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கு கொத்தடிமை போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்டனர்.


    விரைவாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியாக இருந்த பஹ்ரைன் அரசு அதிகாரிகளுக்கு தனது சார்பில் நன்றி தெரிவிக்குமாறும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சுஷ்மா சுவராஜ்  குறிப்பிட்டுள்ளார்.

    மீட்கப்பட்ட இந்திய பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Indianwomanlocked #IndianwomanBahrain #Sushma
    இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj #WangYi
    புதுடெல்லி:

    சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சீனா வெளியுறவு துறை மந்திரி வாங் யி இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்வா சுவராஜை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து வாங் யி கூறுகையில், சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என தெரிவித்தார்.



    இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், சீன வெளியுறவு துறை மந்திரியுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. இரு நாட்டு மக்களிடையேயான கலாசார உறவை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WangYi
    பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஹமீத் நிகல் அன்சாரி தனது குடும்பத்தினருடன் மத்திய மந்திரி சு‌ஷ்மாவை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். #HamidNehalAnsari #SushmaSwaraj
    புதுடெல்லி :

    பாகிஸ்தானில் உள்ள தனது சமூக வலைத்தள தோழியை 2012-ம் ஆண்டில் சந்திக்க சென்றிருந்த மும்பை சாப்ட்வேர் என்ஜினீயர் ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33), சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு சென்றதாக கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி சு‌ஷ்மா சுவராஜை அவர் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்வுமயமாக இருந்தது.

    சு‌ஷ்மா சுவராஜ், அன்சாரியை தாய் போல தழுவி, தட்டிக் கொடுத்தார். அப்போது அவர், ‘‘என்னை மன்னித்து விடுங்கள். நன்றி அம்மா’’ என்று கூறினார்.

    தனது பாகிஸ்தான் அனுபவங்களை சு‌ஷ்மா சுவராஜிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின.

    அப்போது சு‌ஷ்மா சுவராஜ், ‘‘உங்களிடம் நிறைய துணிச்சல் இருக்கிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது’’ என குறிப்பிட்டார்.

    அன்சாரி விவகாரத்தில் சு‌ஷ்மா சுவராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இதற்காக அன்சாரியின் தாயார் பாஜியாவும் சு‌ஷ்மா சுவராஜூக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். #HamidNehalAnsari #SushmaSwaraj
    பாகிஸ்தானில் வரும் 28-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு மந்திரி விடுத்திருந்த அழைப்பை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நிராகரித்து விட்டார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும்.

    பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
     
    இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை தனிவழி அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய வசதிகளுடன் தனிவழியை ஏற்படுத்துமாறு வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.



    இதையேற்று, இந்த பாதைக்கான பணிகளின் தொடக்க விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார்.

    தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள சில நிகழ்ச்சிகளை காரணம்காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்து விட்டார். அதே நாளில் (28-ம் தேதி) தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் வசதியாகவும் விரைவாகவும் பாகிஸ்தானுக்கு சென்று குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப் ஆலயத்தை தரிசிக்க வழி வகிக்கும் இந்த பாதையின் தொடக்க விழாவுக்கு எங்கள் நாட்டின் சார்பில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அரசின் அழைப்பையேற்று அங்கு செல்ல அனுமதிகோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடிதம் அளித்துள்ளார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
    மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறியுள்ளார். #SushmaSwaraj
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.

    ‘தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டுமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால், நான் அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன்’ என்றார் சுஷ்மா.

    உடல்நலக் குறைவு காரணமாக சுஷ்மா தேர்தல் அரசியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தொகுதிப்பக்கம் வரவில்லை எனக் கூறி சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பியதால், அவர் தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

    சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சுஷ்மாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து, அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj
    இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று ஆக்ரா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை கண்டு களித்தார். #KimJungSook #TajMahal ##KimJungSookinTajMahal
    லக்னோ:

    இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் நேற்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி  கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.


    பின்னர், அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவ நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

    இன்று ஆக்ரா நகருக்கு வந்த கிம் ஜங்-சூக், மொகலாய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கப்பட்ட பளிங்குக்கல் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலை கண்டு களித்தார்.

    தென்கொரியாவில் இருந்து தன்னுடன் இந்தியா வந்துள்ள அதிகாரிகள் மற்றும் உ.பி. மந்திரிகளுடன் தாஜ் மஹால் எதிரே அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். #KimJungSook #TajMahal #KimJungSookinTajMahal
    ×