search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiv Sena"

    • தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது
    • உத்தவ் தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு

    புதுடெல்லி:

    மகாராஷ்ராவில் ஆளுங்கட்சியான சிவ சேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது. சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு வழங்கியது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

    அதன்படி, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அதேசமயம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேணடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
    • ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியது.

    மும்பை:

    சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், பாராளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

    • பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.
    • தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    சிவசேனா கட்சி மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி கூட்டணி வைத்து இருந்தது.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து மாநிலத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி உடைந்தது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மலைப்போல் நம்பி மாறுபட்ட கொள்கை கொண்ட கட்சிகளுடன் மகாவிகாஸ் அகாடி கூட்டணி என்ற விஷப்பரீட்சையில் உத்தவ் தாக்கரே இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சரத்பவார் அரசியல் சாணக்கியராக கருதப்பட்டார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் சரத்பவார் தான் இருந்தார். அவரின் கட்சிக்கு தான் நிதி, உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய அரசியலில் பூகம்பம் வெடித்தது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே அரசு பதவி விலகியது. பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.

    தற்போது ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 7 மாத இழுபறிக்கு பின் இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனா என அங்கீகரித்ததை உத்தவ் தாக்கரே தரப்பு கடுமையாக விமர்சித்து உள்ளது. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படுகிறது என விமர்சித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தண்ணீரும், தாமரை இலையும் போல செயல்படுகின்றன.

    குறிப்பாக உத்தவ் தாக்கரே யாரை பெரிய அளவில் நம்பி கொள்கை மாறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாரோ, அதே சரத்பவாரே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கடும் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. அவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கி உள்ளாரே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து எந்த கருத்துகளையும் கூறவில்லை.

    ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் கட்சி பெயர், சின்னத்தை வழங்கியது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:- தேர்தல் ஆணையம் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை பற்றி ஆலோசிக்க முடியாது. தேர்தல் ஆணைய முடிவை ஏற்று கொள்ள வேண்டும். புதிய சின்னத்தை தேர்ந்தெடுங்கள். பழைய சின்னத்தை இழப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்திக்கும் இதே நிலை ஏற்பட்டது. காங்கிரசின் சின்னம் 'இரட்டை காளையாக' இருந்தது. அந்த சின்னத்தை அவர்கள் இழந்தனர். அதன்பிறகு 'கை' சின்னத்துக்கு மாறினர். மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அதுபோல உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதேபோல நேற்று முன்தினம் அவர் தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னம், கட்சியை வழங்கிய விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவாரும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனை தான் கூறியுள்ளார்.

    எனவே தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டேக்கு வில், அம்பு, கட்சியின் பெயரை வழங்கிய விவகாரத்தில் சரத்பவார் விலகி இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் சரத்பவார் நடைமுறைக்கு எது சாத்தியமோ அது பற்றி பேசியிருக்கிறார் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

    2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது பற்றி தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த போது, சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார், தேவேந்திர பட்னாவிசுடன் சேர்ந்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அஜித்பவார், சரத்பவார் ஒப்புதலுடன் தான் எங்களுக்கு ஆதரவாக பதவிஏற்றார் என சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேசியவாத காங்கிரஸ் போல, காங்கிரஸ் கட்சியும் சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. மாநில தலைவர் நானா படோலே தவிர மற்ற தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    இது கூட்டணி கட்சிகளின் உறுதித்தன்மை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

    • மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை.
    • பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது.

    மும்பை :

    சிவசேனா கட்சி முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் உடைந்தது. இந்தநிலையில் 2 அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்காக உரிமை கோரி வந்தன.

    இந்தநிலையில் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி உள்ளது. இது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்தநிலையில் மும்பையில் வடஇந்தியர்கள் சமுதாய கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சிவசேனாவுக்கு என்ன நடந்தது, நாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை பார்த்திருப்பீர்கள். இது உங்களுக்கும் நடக்கலாம். அனைத்து கட்சிகளும் கண்களைத் திறந்து கவனமாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு(பா.ஜனதா) எனது தந்தையின் முகம் வேண்டும். ஆனால் அவருடைய மகன் வேண்டாம். நான் உங்களுடன் வர தயாராக இருந்தேன். ஆனால் எனது தந்தைக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற நினைத்தபோது நீங்கள் என்னை ஏமாற்றினீர்கள். நான் பின்னர் என்ன செய்ய வேண்டும்.

    நான் ஒருபோதும் முதல்-மந்திரியாக விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். பா.ஜனதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், சிவசேனா மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்திருப்பார்கள். கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் போகலாம். அவர்கள் வேறு கட்சியில் இணையலாம். ஆனால் என்னை என்னுடைய வீட்டில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, வீட்டை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

    என் தந்தை தான் அவர்களை வளர்த்தார். சிவசேனா தொண்டர்கள் அவர்களை ஆதரித்தனர். ஆனால் இப்போது அவர்கள் வீட்டின் உரிமையாளராக விரும்புகிறார்கள்.

    நமது அரசு நிறுவனங்கள் ஒரு திருடனை வீட்டின் உரிமையாளராக மாற்றிவிட்டன. நமது நாட்டில் என்ன நடக்கிறது.

    ஆனால் நடந்தது நல்லது தான். ஏனென்றால் மக்கள் கோபமடைந்துள்ளனர். நடந்தவை அனைத்தும் தவறு என்பதை உணர்ந்துள்ளனர்.

    காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு பா.ஜனதா தான் எங்களை தள்ளியது. ஏனெனில் அது எங்களுக்கு கொடுத்த உறுதியை மதிக்கவில்லை.

    நான் பா.ஜனதாவை விட்டு தான் விலகி உள்ளேன். இந்துத்வாவை விட்டு அல்ல. மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை. ஹிஜாப், பசு கொலை போன்ற பிரச்சினைகளை வைத்து பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது. சமீபத்தில் மும்பையில் இந்து ஆக்ரோஷ் பேரணி நடைபெற்றது. சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் நாட்டை ஆளும்போது இந்துக்கள் ஏன் ஆக்ரோஷமாக வேண்டும்.

    பலமான இந்தியாவை உருவாக்க நாம் வாக்களித்த தலைவர் தற்போது பலமானவராக மாறிவிட்டார். ஆனால் நாடு பலவீனமடைந்துவிட்டது.

    ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது அநீதி ஆகும். இது கேவலமான அரசியல். சிவசேனாவுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால் தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் முன்பு எங்களை சந்தித்திருக்க வேண்டும்.

    சிவசேனா ஒருபோதும் முஸ்லிம்களுக்கும், வட இந்தியர்களுக்கும் எதிரானது இல்லை. இந்தியாவை தாய் நாடாக கருதுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

    • வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
    • 2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இருவரும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் வில், அம்பு சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

    வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அவரது புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏக்நாத் ஷிண்டேக்கு கட்சி, சின்னம் வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் தலையிட நான் விரும்பவில்லை.

    2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.
    • தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது.

    கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    அதே சமயம் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது.

    சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

    • சிவ சேனா கட்சி மற்றும் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
    • உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதவாளர்கள் மத்தியில் பேசினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே அணிதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று கூறிய தேர்தல் ஆணையம், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    இதற்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்யாததை செய்துள்ளது. ஆதரவாளர்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்' என்றார்.

    உத்தவ் தாக்கரே அணியினர் 'சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார்.
    • ஷிண்டே அணியினர் தாங்களாகவே விலகிச் சென்தால் உரிமை கோர முடியாது என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    அதன்பின்னர் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

    இதேபோல் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். 'ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,' என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    இரு தரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இன்று உத்தரவு பிறப்பித்தது. உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமான சிவ சேனா என்று கூறியது. அத்துடன், சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உத்தவ் தரப்பு முடிவு செய்துள்ளது.

    • தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
    • இது ஒரு சட்டவிரோத அரசாங்கம்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது. அதன்பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் தீப்பந்தம் சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தலைமையிலும், பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரில் வாள், கேடயம் சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. தற்போது யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.

    தங்கள் பக்கம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே தரப்பு கூறுகிறது. இதேபோல மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் அதிகம் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே தரப்பு வாதித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன.

    ஜனவரி 30-ந் தேதி வரை எழுத்து பூர்வமான வாதங்களை வைக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

    இந்தநிலையில் சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளையுடன் (திங்கட்கிழமை) முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் தலைவராக 5 ஆண்டு காலத்துக்கு பொதுக்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். எனவே கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள எங்களுக்கு சட்ட அனுமதி எதுவும் தேவையில்லை. உண்மையான சிவசேனா யார் என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தவுடன் சட்டரீதியாகவும் அவர் தலைவராவார்" என்றார்.

    தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், " ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிற்கும் யார் சிவசேனா என்பது தெரியும். சிவசேனா கட்சி பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, அனைத்து தொண்டர்களுக்கும் சொந்தமானது. தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உண்மை வெல்லும். ஆனால் எவ்வளவு காலம் இந்த சட்டவிரோத அரசு தொடரும்?. ஒருவரின் பேராசையால் இதுவெல்லாம் நடந்து இருக்கிறது. இது ஒரு சட்டவிரோத அரசாங்கம் " என்றார்.

    • மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.
    • மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

    புதுடெல்லி :

    சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

    உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

    • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

    அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.

    • கோவில் அருகே கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்திய போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து காவல்துறை விசாரணை.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக  போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. 


    அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து குண்டு காயத்துடன மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

    குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×