என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்: அரசியல் கட்சிகளுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
    X

    சிவசேனாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்: அரசியல் கட்சிகளுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

    • மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை.
    • பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது.

    மும்பை :

    சிவசேனா கட்சி முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் உடைந்தது. இந்தநிலையில் 2 அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்காக உரிமை கோரி வந்தன.

    இந்தநிலையில் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி உள்ளது. இது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்தநிலையில் மும்பையில் வடஇந்தியர்கள் சமுதாய கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சிவசேனாவுக்கு என்ன நடந்தது, நாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை பார்த்திருப்பீர்கள். இது உங்களுக்கும் நடக்கலாம். அனைத்து கட்சிகளும் கண்களைத் திறந்து கவனமாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு(பா.ஜனதா) எனது தந்தையின் முகம் வேண்டும். ஆனால் அவருடைய மகன் வேண்டாம். நான் உங்களுடன் வர தயாராக இருந்தேன். ஆனால் எனது தந்தைக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற நினைத்தபோது நீங்கள் என்னை ஏமாற்றினீர்கள். நான் பின்னர் என்ன செய்ய வேண்டும்.

    நான் ஒருபோதும் முதல்-மந்திரியாக விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். பா.ஜனதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், சிவசேனா மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்திருப்பார்கள். கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் போகலாம். அவர்கள் வேறு கட்சியில் இணையலாம். ஆனால் என்னை என்னுடைய வீட்டில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, வீட்டை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

    என் தந்தை தான் அவர்களை வளர்த்தார். சிவசேனா தொண்டர்கள் அவர்களை ஆதரித்தனர். ஆனால் இப்போது அவர்கள் வீட்டின் உரிமையாளராக விரும்புகிறார்கள்.

    நமது அரசு நிறுவனங்கள் ஒரு திருடனை வீட்டின் உரிமையாளராக மாற்றிவிட்டன. நமது நாட்டில் என்ன நடக்கிறது.

    ஆனால் நடந்தது நல்லது தான். ஏனென்றால் மக்கள் கோபமடைந்துள்ளனர். நடந்தவை அனைத்தும் தவறு என்பதை உணர்ந்துள்ளனர்.

    காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு பா.ஜனதா தான் எங்களை தள்ளியது. ஏனெனில் அது எங்களுக்கு கொடுத்த உறுதியை மதிக்கவில்லை.

    நான் பா.ஜனதாவை விட்டு தான் விலகி உள்ளேன். இந்துத்வாவை விட்டு அல்ல. மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை. ஹிஜாப், பசு கொலை போன்ற பிரச்சினைகளை வைத்து பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது. சமீபத்தில் மும்பையில் இந்து ஆக்ரோஷ் பேரணி நடைபெற்றது. சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் நாட்டை ஆளும்போது இந்துக்கள் ஏன் ஆக்ரோஷமாக வேண்டும்.

    பலமான இந்தியாவை உருவாக்க நாம் வாக்களித்த தலைவர் தற்போது பலமானவராக மாறிவிட்டார். ஆனால் நாடு பலவீனமடைந்துவிட்டது.

    ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது அநீதி ஆகும். இது கேவலமான அரசியல். சிவசேனாவுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால் தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் முன்பு எங்களை சந்தித்திருக்க வேண்டும்.

    சிவசேனா ஒருபோதும் முஸ்லிம்களுக்கும், வட இந்தியர்களுக்கும் எதிரானது இல்லை. இந்தியாவை தாய் நாடாக கருதுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

    Next Story
    ×