search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blocked"

    கொடைரோடு அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள கவுண்டன்பட்டி, ராமன் செட்டிபட்டி, கவுண்டன் பட்டி கிழக்கு தெரு ஆகிய ஊர்களுக்காக மயானம் அகரன்குளம் கண்மாய் அருகில் இருக்கிறது. இந்த மயானத்தின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இது குறித்து தமிழக முதல்அமைச்சர், மாவட்ட கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தார், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். மயானம் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற் கொண்டார். மயானம் இடத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் மயான இடத்தை அளவிட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு மதுரை- வத்தலக்குண்டு செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மயான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்க கோரி 10 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் கந்தர்வக்கோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நிவாரண பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரிய கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வக் கோட்டை நகரத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில்தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந்துள்ளன. சீரமைக்கும் பணியில் மின்சாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந்தாங்கி அடுத்துள்ள கூத்தங்குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினியோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். கஜாபுயலின் தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஜெனரேட்டர் மூலமும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தனி தீவாக உள்ள இந்த கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரும்பிவயல் பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்டக்குளம் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் கஜா புயலால் மரங்கள், மின் மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு கொப்பம்பட்டி-செங்கிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் சந்தைமேடு, லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி - காந்திபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    1 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனயாக குடிநீர் கிடைக்க நடவடடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கொடைரோடு அருகே கிராம மக்கள் திடீர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் உள்ள பூதிப்புரம் கிராமத்தில் ஒரு தனியார் வீடு கட்ட பணி செய்ய முயன்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடம் பொதுவானது என்றும், தனியாருக்கு சொந்தமானது அல்ல என்றும் மதுரை- செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

    தகவல் கிடைத்தவுடன் அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியாருக்கு சொந்தமானதா? பொதுவான இடமா? என வருவாய்த்துறை மூலம் தீர்வு காண வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.இதனால் ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம் அருகே வைகை நீரை பங்கிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சில ஆண்டுகளாக வற்றிக்கிடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் கம்பிக்குடி கால்வாய் மூலமாக திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு வந்தடையும்.

    இந்த கண்மாய் நிரம்பிய பின் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி, சின்னஉலகாணி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண் மாய்களுக்கு செல்லும்.

    இதன்மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி, பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. அந்த கண்மாயும் தற்போது நிரம்பியதால் உபரி நீர் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது.

    ஆனால் இந்த கிராமங்களுக்கு தண்ணீரை சமமாக பங்கீடு செய்யவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். நேற்று ஓ.ஆலங்குளத்துக்கு மட்டும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், விருசங்குளத்துக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி, அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.ஆலங்குளத்துக்கு செல்லும் தண்ணீரை பெரிய ஆலங்குளம் கிராம மக்கள் இன்று மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் ஓ.ஆலங்குளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது.

    இதை கண்டித்து இன்று காலை ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த 100-க்கும மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரிய ஆலங்குளத்தில் இருந்து சரிசமமாக மற்ற ஊர்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    கம்பிக்குடி கால்வாய் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக கிராம மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில்தான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சிலர் தன்னிச்சையாகவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து கண்டுகொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் உள்ள வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சார்க்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் தேங்கியது. மேலும் கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் இல்லாததால் பல வீடுகளில் கழிவுநீர் புகுந்து. அந்த பகுதி சேறும், சகதியாக காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கழிவு நீரை அகற்றி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இன்று காலை வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்கள் விமான நிலைய ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மறியல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை அதிகாரிகள் யாரும் வரவில்லை. மறியல் காரணமாக ஒரு மணி நேரத் துக்கு மேலாக போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
    கீழ்வேளூர்:

    கீழ்வேளூரை அடுத்த சிக்கல் மெயின் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல், ஒன்றிய தலைவர் முருகையன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவா ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்துகொண்டு பேசினார்.

    விவசாயிகளுக்கு தாமதமின்றி உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். பழுதடைந்த ரெகுலேட்டர் மற்றும் மதகுகளை புதுப்பிக்க வேண்டும். அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் தேவூர் கடைத்தெரு, கொளப்பாடு ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 
    உசிலம்பட்டியில் இன்று கிராம மக்கள் திடீர் சாலை மறியல் கண்மாயில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தில் கண்மாய் உள்ளது. மழை பொய்த்து போனதால் இந்த கண்மாய் சில ஆண்டுகளாக வறண்டு உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் மாதரை கண்மாயை ஆழப்படுத்தும் நோக்கில் மண் எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் மாதரை கண்மாயில் மணல் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு மாதரை கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மணல் அள்ளுவதை உடனே நிறுத்தவேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனாலும் மணல் எடுப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதனை கண்டித்து இன்று அந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுரை- தேனி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    போலீசாரை கண்டித்து திருவாரூரில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இந்த ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் பெயரை சங்கத்திற்கு தொடர்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்தியதுடன், மற்றொரு ஆட்டோ நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தினர். இதுபற்றி சி.ஐ.டி.யூ. ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று கொரடாச்சேரி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப் பட்டு பஸ் நிலையம் ரவுண்டானாவை அடைந்தனர். அங்கு ஆட்டோ தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் குணசீலி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    திண்டுக்கல் அருகே இலவச அரிசி குறைத்து வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச அரிசி ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அருகே கொம்பேறிபட்டியில் ரேசன் கடை உள்ளது. இங்கு அம்மானியூர் கொம்பேறிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு புழுங்கல் மற்றும் பச்சரிசி வழங்குவது வழக்கம்.

    இந்த மாதம் குறைந்த அளவே ஸ்டாக் வந்ததால் பொதுமக்களுக்கும் பச்சரிசி மட்டும் குறைந்த அளவு வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் ரேசன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் ஊழியர்கள் குறைந்த அளவே ஸ்டாக் வந்துள்ளதால் வேறு வழியில்லை. இந்த மாதம் அரிசி குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது என கூறி உள்ளனர்.

    இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் திடீரென அய்யலூர்-வேடசந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த வடமதுரை போலீசார் கிராம மக்களிடம் சமரசம் பேசினர். அரிசி வழக்கமான அளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×