search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revenue department"

    • நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரையிலுள்ள நவ கைலாயத்தில் 7-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.25 ஏக்கர் நஞ்சை நிலம் குருகாட்டூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

    அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அந்த நிலத்தை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், அறநிலையத்துறை தனி தாசில்தார் ஈஸ்வர நாதன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டு நிலத்தை மீட்டனர்.

    அந்த நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.

    • சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.

    சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள குமுழி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

    இதனை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சீனிவாச ஐயங்கார், மாநில பொருளாளர் செல்வி கிருஷ்ண முர்த்தி, தொகுதி செயலாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கணபதி, ஒண்டிவீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.


    பழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    பழனி:

    பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வள்ளி நகர்பகுதியின் தாளமடை ஓடை என்னும் ஓடை உள்ளது. இங்குள்ள மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டிக் கடத்துவதாக வருவாய்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேற்றிரவு இப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே வந்த மரக்கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை நடத்தினர். சோதனையில் எவ்வித அனுமதியின்றி தாளமடை ஓடையில் மரங்களை வெட்டி டிராக்டரில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமார் 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் பழனி தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சப்கலெக்டர் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
    ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #RKNagar #RKNagarelection

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு சசிகலா தலைமை தாங்கி இருந்தார். இந்த அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் களத்தில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்களும் செயல்பட்டனர்.

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி மாநிலம் முழுவதும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ரூ.89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்திருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.


    பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மதுசூதனன் தோல்வியை தழுவினார்.

    வருமான வரி துறையினர் சோதனை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த பிரச்சினை அப்படியே அடங்கிப் போனது.

    இந்த நிலையில் வருமான வரி துறையினர் தற்போது அது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமி‌ஷனிடமும், தமிழக அரசிடமும் தாக்கல் செய்துள்ளனர். அதில் வருமான வரி சோதனையின் போது திரட்டப்பட்ட தகவல்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவை முழுமையாக இடம் பெற்றுள்ளன. வருமானவரி சோதனையில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் அறிக்கையில் உள்ளது.

    இது தொடர்பாக மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வருமான வரி சோதனையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார். #RKNagar #RKNagarelection

    ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தனலிங்கம் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். #healerbaskar
    கோவை:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (வயது 42). இவர் கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல் பயிற்சி மையம்’ நடத்தி வந்தார்.

    இம்மையத்தில் சுகப்பிரசவத்துக்கு இலவசப்பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மையத்தில் போலீசார் சோதனை நடத்திய போது ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, சிரஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    ஹீலர் பாஸ்கர் கடந்த 8 ஆண்டுகளாக நேச்சுரோபதி என்ற இயற்கை வழி மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான முறையான மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ்கள் எதுவும் அவரிடம் இல்லை.

    இவர் இயற்கை மருத்துவம் குறித்து யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் ஆங்கில மருத்துவ முறைகள் தவறு என்பது போல பேசி உள்ளார். இவரது பயிற்சி மையத்தில் கர்ப்பிணிகளும் ஆலோசனைகள் பெற்று வந்துள்ளனர்.

    இவர் பயிற்சியில் பங்கேற்பவர்களிடம் கட்டணம் வாங்குவது இல்லை என்றாலும் தனது அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யுமாறு லட்சக்கணக்கில் வசூலித்ததாக கூறப்படுகிறது. கோவை திருப்பூர், சேலம், ஈரோடு என கொங்கு மண்டலம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் பல பயிற்சி முகாம்களை நடத்தி உள்ளார். இலங்கை, சிங்கப்பூர், குவைத் என வெளிநாடுகளிலும் பயிற்சி முகாம்களை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

    இவரது வெப்சைட்டில் வருகிற டிசம்பர் மாதம் வரை இவர் பயிற்சி நடத்த உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. தொடர்ந்து இம்மையம் இயங்கினால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    எனவே இம்மையத்தை மூட போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்பேரில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தனலிங்கம் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவினர் இன்று இம்மையத்தில் ஆய்வு நடத்த உள்ளனர். #healerbaskar
     

    ×