search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public siege"

    பெரியபாளையம் அருகே கொட்டும் மழையில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்லும் போது அலுவலகத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று தெரிகிறது. 

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொட்டும் மழையில் ஆரணி- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்டது.

    ஆனால் பூமி பூஜை செய்த இடம் இல்லாமல் தேக்கு மரம், வாகை மரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த மரம் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக அந்தவிலை உயர்ந்த மரத்தை எல்லாம் பள்ளி நிர்வாகம் வெட்டியது. பின்னர் பள்ளி நிர்வாகம் தேர்வு செய்த வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலை இன்று நடந்தது.

    இது குறித்து அறிந்த ஊர் பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மரத்தை வெட்டுவதற்கு சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டுவதற்கு எ.இ.ஓ-விடம் (வட்டார கல்வி அலுவலர்) அனுமதி வாங்க வேண்டும். நீங்கள் யாரிடம் கேட்டு இந்த இடத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி வேறு இடத்தில் கட்டிடம் கட்டுகின்றீர்கள் என்று தலைமையாசிரியர் சங்கமித்ராவிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    அன்னவாசல் அருகே தனியார் நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே ஆரீயூரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகைகள் மற்றும் தூசிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது எனவும், சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

    இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் மாதா கோவில் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக செல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதி மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்று நோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் டவர் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளிக் கூடம், அங்கன்வாடி உள்ளதால் இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்ககூடாது என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர்.

    மேலும் செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தில் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 2014-ம் ஆண்டு வளர்புறம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்ககூடாது என ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வளர்புரம் ஊராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
    திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போது 2 வாலிபர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்தியது குறித்து கிராம மக்கள் கும்மிடிபூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதய பிரகாஷ்.

    நேற்று இரவு அவர் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த திவாகரன், விஜய் ஆகியோருடன் சாமிரெட்டி கண்டிகை கிராமத்திற்கு ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க சென்றார்.

    அப்போது அனைவரும் சாதாரண உடையில் இருந்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதே பகுதியை சேர்ந்த கணபதி, நந்தகுமார் ஆகியோருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் உதய பிரகாஷ் தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணபதி, நந்தகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் கும்மிடிபூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்துபோக செய்தனர்.

    காயமடைந்த கணபதி, நந்தகுமாருக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் தாக்குதல் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் மீதும் புகார் தெரிவித்து உள்ளனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாசும் பொதுமக்கள் தங்களை தாக்கியதாக புகார் தெரிவித்து உள்ளார். #tamilnews
    திருவளக்குறிச்சி கிராமத்தில் கிரஷர் தொடங்கப்பட உள்ளதால் இதனை கண்டித்து ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    பாடாலூர்: 

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அடுத்து திருவளக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருவளக்குறிச்சி கிராமத்தின் அருகே வீடு உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கல் குவாரி ஏலம் விடப்பட்டு கல் உடைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக கிரஷர் தொடங்கப்பட உள்ளது. இதனையறிந்த திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிரஷர் தொடங்க உள்ள பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவர்களுக்கு சரிவர பதில் அளிக்க வில்லை. இதையடுத்து அவர்கள் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த தாசில்தார் ஷாஜகான், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- 

    கல் குவாரியில் அதிகளவு பள்ளம் வெட்டி கல் எடுப்பதால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. விவசாயத்திற்கும் தண்ணீர் நீர்மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏலம் விடப்பட்ட பட்டா குவாரியில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கல் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

    இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலியான 10 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.



    அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். ஏற்கனவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்து பூர்வமாக அரசு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்”என்றனர். தொடர்ந்து அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #SterliteProtest

    பரமத்திவேலூர் அருகே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னிப்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணிதுறை சார்பில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதி பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றுப்பகுதியில் வந்து ஜே.சி.பி மற்றும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    உடனே ஊழியர்கள் மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கும் மற்றும் நாமக்கல் மாவட்ட உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் உத்தரவில்தான் இங்கு மணல் குவாரி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரவு நகலை காண்பித்தார். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கூறுகையில் 10 ஊர்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் செல்கிறது.

    இங்கு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிடும். நாங்கள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் விவசாயம் செய்யமுடியாமல் நாங்கள் ஊரை காலி செய்து விட்டுதான் போகவேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும், முற்றுகையிலும், ஈடுபட்டனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பேசிவிட்டு, அதிகாரிகள் பேசுகையில் 3 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நீதிமன்றத்திற்கு சென்று இங்கு மணல் குவாரி அமைக்காமல் இருக்கு உத்தரவு நகலை பெற்று வருமாறு கூறினார். அதுவரை இங்குவேலை நடைபெறாது என்று உறுதியளித்த பின்பு திங்கள் கிழமை அன்று நீங்கள் உத்தரவு நகல் வாங்கிவரவில்லை என்றால் அன்று முதல் மீண்டும் மணல் குவாரி அமைக்க எல்லா வேலைகளும் நடைபெறும்.

    அதற்கு நீங்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார். உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    ×