search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "paramathi velur"

  பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவடைந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
  பரமத்தி வேலூர்:

  பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

  இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, தரத்திற்கு தகுந்தார்போல் ஏலம் விடப்படுகிறது.

  கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை. அதற்கு முந்தைய வாரம் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,803 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 119 ரூபாய் 12 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 90 பைசாவுக்கும், சராசரியாக 117 ரூபாய் 12 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 178-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,752 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 112 ரூபாய் 65 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 85 பைசாவுக்கும், சராசரியாக 110 ரூபாய் 85 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 756-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று தேங்காய் பருப்பு வரத்து குறைந்ததோடு, அதன் விலையும் சரிவடைந்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
  குட்கா வழக்கில் சிக்கிய பாத்திர வியாபாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. #gutka

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருவள்ளுவர் நகரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் விஜய் (எ) ராமலிங்கம்(வயது 35). இவர் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். விஜய் பாண்டமங்கலத்திலும், இவரது பெற்றோர் கந்தசாமி கண்டர் கல்லூரி சாலையில் கண்டர் நகரிலும் வசித்து வருகின்றனர்.

  இவரது உறவினர் ஒருவர் மோகனூரில் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனுக்கு கடந்த மாதம் விஜய் சென்றார். அப்போது அந்த குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1 மாதம் கழித்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதன்பிறகு உறவினர்களுக்கும் விஜய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் விஜய் பாத்திரக்கடையில் இருந்து நேற்று இரவு கண்டர் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விஜய் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் சிக்கிய விஜய் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விஜய்க்கு மனைவி புனிதா(30), 1 மகன், 1 மகள் உள்ளனர். #gutka

  பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
  பரமத்தி வேலூர்:

  பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் நகர வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் பரமத்தியில் உள்ள மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி ஹசின்பானு ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது:- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள், கால்நடைகள், வனவிலங்குகள் என அனைத்து தரப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாக்கும் கடமை உள்ளது. பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கிடைப்பதால் கண்ட இடங்களில் வீசுகின்றனர். அதனை கால்நடைகள் சாப்பிட்டவுடன் பிளாஸ்டிக் பொருட்கள் மூச்சுக்குழாயில் அடைத்து மூச்சுவிட முடியாமல் இறக்கின்றன. எனவே பிற்கால தலைமுறைகளுக்காக பிளாஸ்டிக்கை ஒழிக்க வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

  இதில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், பரமத்தி அரசு வக்கீல் கேசவன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், படைவீடு செயல் அலுவலர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் வக்கீல்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  பாண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஹசின்பானு, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியன், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.

  பரமத்திவேலூர் அருகே ராஜவாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  கரூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் யோகேஸ் (வயது 19).

  இவர் திருச்சியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  இந்த நிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி யோகேஸ் நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜோடர்பாளையம் தடுப்பணையில் உள்ள ராஜவாய்க்காலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

  அப்போது யோகேஸ் ஆழமான பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் தண்ணீரின் வேகமாக அதிகமாக இருந்தால் யோகேசை இழுத்துச் சென்றது. அவருடன் ராஜவாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யோகேசை வெகு நேரமாக தேடினர். ஆனால் இருட்டாக இருந்ததால் யோகேசை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதையடுத்து அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஜோடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், அப்பகுதி மீனவர்களும் அங்கு வந்து ராஜவாய்க்காலில் இறங்கி பரிசல்கள் மூலமாக தேடினார்கள்.

  அப்போது யோகேஸ் பிணமாக மிதந்ததை கண்டுபிடித்தனர். உடலை மீட்டு மீனவர்கள் பரிசல் மூலமாக கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்தி அருகே விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

  பரமத்திவேலூர்:

  கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவர் தனியார் கூரியர் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

  இதே வேனில் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த சிவபெருமாள் மகன் சந்தோஷ்குமார் (21) கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சரவணன் (22) என்பவரை உதவிக்கு உடன் அழைத்து வந்தார்.

  நள்ளிரவு சேலத்தில் இருந்து கூரியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. வேனை ராமலிங்கம் ஓட்டினார். அருகில் உள்ள இருக்கையில் கிளீனர் சந்தோஷ்குமார், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர்.

  கூரியர் வேன் போகும் வழியில் ஒவ்வொரு இடங்களாக நிறுத்தி, பார்சல்களை கூரியர் அலுவலகங்களில் ஒப்படைத்தப்படி சென்று கொண்டிருந்தது.

  கூரியர்வேன் இன்று அதிகாலை 6.25 மணிக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றது.

  அப்பேது பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரைக்கு 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

  இந்த லாரியின் பின்பக்கத்தில் கூரியர் வேன் எதிர்பாராதவிதமாக டமார் என பயங்கரமாக மோதியது. இதில் வேன் டிரைவர் ராமலிங்கம், கிளீனர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலை, முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிப்பட்டு இருக்கையிலேயே பலியாகினர். சரவணன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

  வேன் கண்ணாடிகள் உடைந்து சிதறி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரியை நிறுத்தி வைக்கக்கூடாது என நாமக்கல் போக்குவரத்து போலீசார் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதையும் மீறி டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். மேலும் அவர் அந்த லாரியில் தூங்கிக் கொண்டும் இருந்துள்ளார். விபத்து ஏற்பட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

  விபத்து குறித்து போலீசார் கூறுகையில், வேன் டிரைவர் ராமலிங்கம் சரியாக தூங்கி ஓய்வு எடுக்காமல் இரவு வேனை ஓட்டி இருக்கலாம். அதனால் தூக்க கலக்கத்தில் இன்று அதிகாலை லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார் என சந்தேகப்படுகிறோம் என்றனர்.

  விபத்தில் ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் பலியான தகவல் அறிந்து உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சோகத்துடன் கூடியுள்ளனர். #accident

  பரமத்திவேலூர் அருகே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னிப்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணிதுறை சார்பில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதி பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றுப்பகுதியில் வந்து ஜே.சி.பி மற்றும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  உடனே ஊழியர்கள் மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கும் மற்றும் நாமக்கல் மாவட்ட உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் உத்தரவில்தான் இங்கு மணல் குவாரி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரவு நகலை காண்பித்தார். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கூறுகையில் 10 ஊர்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் செல்கிறது.

  இங்கு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிடும். நாங்கள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் விவசாயம் செய்யமுடியாமல் நாங்கள் ஊரை காலி செய்து விட்டுதான் போகவேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும், முற்றுகையிலும், ஈடுபட்டனர்.

  பின்னர் மாவட்ட கலெக்டர் பேசிவிட்டு, அதிகாரிகள் பேசுகையில் 3 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நீதிமன்றத்திற்கு சென்று இங்கு மணல் குவாரி அமைக்காமல் இருக்கு உத்தரவு நகலை பெற்று வருமாறு கூறினார். அதுவரை இங்குவேலை நடைபெறாது என்று உறுதியளித்த பின்பு திங்கள் கிழமை அன்று நீங்கள் உத்தரவு நகல் வாங்கிவரவில்லை என்றால் அன்று முதல் மீண்டும் மணல் குவாரி அமைக்க எல்லா வேலைகளும் நடைபெறும்.

  அதற்கு நீங்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார். உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

  ×