search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்தி அருகே விபத்தில் டிரைவர்-கிளீனர்  பலி
    X

    பரமத்தி அருகே விபத்தில் டிரைவர்-கிளீனர் பலி

    பரமத்தி அருகே விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவர் தனியார் கூரியர் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இதே வேனில் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த சிவபெருமாள் மகன் சந்தோஷ்குமார் (21) கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சரவணன் (22) என்பவரை உதவிக்கு உடன் அழைத்து வந்தார்.

    நள்ளிரவு சேலத்தில் இருந்து கூரியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. வேனை ராமலிங்கம் ஓட்டினார். அருகில் உள்ள இருக்கையில் கிளீனர் சந்தோஷ்குமார், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர்.

    கூரியர் வேன் போகும் வழியில் ஒவ்வொரு இடங்களாக நிறுத்தி, பார்சல்களை கூரியர் அலுவலகங்களில் ஒப்படைத்தப்படி சென்று கொண்டிருந்தது.

    கூரியர்வேன் இன்று அதிகாலை 6.25 மணிக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றது.

    அப்பேது பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரைக்கு 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த லாரியின் பின்பக்கத்தில் கூரியர் வேன் எதிர்பாராதவிதமாக டமார் என பயங்கரமாக மோதியது. இதில் வேன் டிரைவர் ராமலிங்கம், கிளீனர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலை, முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிப்பட்டு இருக்கையிலேயே பலியாகினர். சரவணன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    வேன் கண்ணாடிகள் உடைந்து சிதறி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரியை நிறுத்தி வைக்கக்கூடாது என நாமக்கல் போக்குவரத்து போலீசார் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதையும் மீறி டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். மேலும் அவர் அந்த லாரியில் தூங்கிக் கொண்டும் இருந்துள்ளார். விபத்து ஏற்பட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விபத்து குறித்து போலீசார் கூறுகையில், வேன் டிரைவர் ராமலிங்கம் சரியாக தூங்கி ஓய்வு எடுக்காமல் இரவு வேனை ஓட்டி இருக்கலாம். அதனால் தூக்க கலக்கத்தில் இன்று அதிகாலை லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார் என சந்தேகப்படுகிறோம் என்றனர்.

    விபத்தில் ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் பலியான தகவல் அறிந்து உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சோகத்துடன் கூடியுள்ளனர். #accident

    Next Story
    ×