search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political leaders"

    இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

    காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin
    சென்னை:

    அகில இந்திய இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியலில் நீங்கள் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

    தி.மு.க கழகத்தின் தலைவராக எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அமைத்துக் கொடுத்திருக்கிற அரசியல் பாதையில் மு.க.ஸ்டாலின் பீடுநடை போட்டு தி.மு.க. கழகத்தை வளர்ச்சிப் பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்வார்.

    திராவிட கழக தலைவர் கி.வீரமணி 1944 ஆகஸ்ட் 27-ந்தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே காலகட்ட நாளில் தி.மு.க.வின் தலைவராக பாசமிகு மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது, எத்தகைய வரலாற்று பொருத்தம்.

    களத்தில் 14 வயது முதலே இளைஞர் அணியிலிருந்து செதுக்கப்பட்டவரும், சிறை வாழ்க்கை, தியாகத் தழும்புகளோடு, பல பதவிகளையும் பொறுப்புகளாகப் பார்த்து ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வாழ்ந்துகாட்டி வருபவருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் வகித்த பொறுப்புக்கு ஒரு மனதாக தி.மு.க. கழகத்தின் தலைவராக அடலேறுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதுபோலவே அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு அக்கட்சியில் 40 ஆண்டுகளாக கலைஞரின் நிழல் போல திகழ்ந்த அவரது அரசியல் மாணவர் துரைமுருகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உலக வரலாற்றில் எங்கும் காணமுடியாத வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திராவிட இயக்கத்தை பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், பாட்டாளிகளின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதிக்காகவும் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகிறோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. தலைவராக இருந்து அரை நூற்றாண்டு காலம் அந்தக் கட்சியை வழிநடத்திய சமத்துவப் பெரியாரால் கலைஞர் அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டவர். இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாக திகழும் தி.மு.க.வின் மரபுப்படி இன்று தேர்தல் மூலம் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

    தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழிநடத்த வாழ்த்துகிறோம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- இளம்வயது முதல் கடின உழைப்பால், தொடர் பணியால், விடா முயற்சியால் 50 வருடங்களுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க.வின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகனுக்கு த.மா.கா.சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசர நிலைக்காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர். சிறை சென்றவர். சித்ரவதைக்கு உள்ளானவர். கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக கடுமையாக உழைத்துப் பணி ஆற்றியவர். என்கின்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வில் அடிமட்ட தொண்டனாக தமது அரசியல் பயணத்தை துவங்கி படிப்படியாக முன்னேறி செயல் தலைவர் பொறுப்பினை ஏற்று மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

    எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பாளர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டு தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கழகத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி சென்று மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    சமத்துவ மக்கள் கழக நிறுவனர், தலைவர் நாராயணன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆசியுடன் தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்று தொண்டர்களை அரவணைத்து பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin

    காவேரி மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சபாநாயகர் தனபால், தி.க தலைவர் வீரமணி, மற்றும் பா.மா.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இன்று விசாரித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சபாநாயகர் தனபால் வந்தார். இதனை அடுத்து காவேரி மருத்துவமனைக்கு தி.க தலைவர் வீரமணி வந்தார். இருவரும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.



    இதனை அடுத்து காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திமுக., தலைவரும் எனது நண்பருமான கருணாநிதி விரைவில் குணமடைந்து வருவார். இது எனது விருப்பம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமும் இதுதான். அனைவரின் ஆசையும் நிறைவேறும் ’ என தெரிவித்தார். #Karunanidhi #DMK
    தி.மு.க. தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DMK #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்):- தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். மருத்துவர்கள் கூறிய அனைத்தையும் விளக்கினார். கருணாநிதி முன்பு இருந்ததைவிட இப்போது நன்றாக இருக்கிறார். பூரணமாக குணமடைந்து மீண்டும் பேசும் நிலைக்கு வருவார்.

    ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்):- முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் விரைவில் பரிபூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். திராவிட சூரியன் மென்மேலும் தனது பிரகாரத்தை வெளிப்படுத்த இறைவன் கிருபை செய்யட்டும்.


    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):- தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராக இருந்து வருகிறார்.

    ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், ஜாதி மதக்கொடுமையை தரை மட்டம் ஆக்கிடுவோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி போன்ற லட்சியங்களோடு ஆட்சி செய்தவர். தமிழ்மொழியை செம்மொழியாக்கி சாதனை படைத்த அவர் நூற்றாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    வி.ஜி.சந்தோ‌ஷம்:- உலகம் போற்றும் முத்தமிழ் அறிஞர், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி, தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ஆடிட்டர் குருமூர்த்தி:- அரசியல் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும், தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. தமிழகத்துக்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். #DMK #Karunanidhi
    கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

    இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

    மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    ‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு.

    வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

    1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

    மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

    அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

    ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்:-


    அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநிலங்களின் உரிமைகளிலும், மக்களின் உரிமைகளிலும் தலையிடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, என் வீட்டிற்குள் நுழைந்து நான் என்ன சமைக்கிறேன்? என் குழந்தைக்கு என்ன சட்டை வாங்கி கொடுக்கிறேன்? என்ன மொழியில் பாடம் கற்பிக்கிறேன்? என்பதையெல்லாம், எனக்கு உரிமை இருக்கிறது நான் கட்டாயம் கேட்பேன் என்று ஆளுநர் வருவாரேயானால், என் வீட்டு வாசலில் அவரை நிறுத்துவதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது.

    இதை ஆளுநரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியும் புரிந்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் தலைமை அதிகாரியும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதுபோல, குடிமக்களுக்கும் தங்களை தனி உரிமையில் பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தை விட அதிக பலம் பெற்றது.

    1947-ம் ஆண்டு முதல் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதும் இல்லாத அளவிற்கு இவர் சுற்றிச் சுற்றி சடுகுடு ஆடுவது போல வலம் வருகிறார், ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு காரணம், எங்களை அத்தனை பேருமே திருடர்கள் என்றும், நீங்கள்தான் காவலாளர் என்றும் வருகிறீர்களா? தமிழகம் ஒன்றும் டெல்லிக்கு அடிமைப்பட்டு இல்லை. நீங்கள் நுழைவதும் இந்த கேள்விகளை கேட்பதற்கே அதிகாரம் இருக்கிறது என்று வருவதால், உங்களால் தமிழகம் தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமை இழந்திருக்கிறது. இதனால் டெல்லிக்கு தமிகம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாகத் தான் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

    எங்களை பொறுத்த வரையில் ஆளுநர் என்ற ஒரு பதவி அவசியம் தானா என்று நாங்கள் நெடுநாட்களுக்கு முன்பே எழுப்பிய கேள்வி. இதனை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பில் வைத்திருக்கிறது. அது மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் இருக்க வேண்டுமே அன்றி, அதனை அசிங்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுமே ஆனால், டெல்லி அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரியை கட்டாயம் நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-


    மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஆளுநராக தொடர்வதற்கே தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    எந்த வகையிலும் சட்ட வரம்பிற்குள் உட்படாத ஒருவர் ஆளுநராக நீடிப்பது நியாயமா? என்ற ஒரு கேள்வி தமிழகத்தில் நீடிக்கும்போது, அவர் நான் சட்டப்படி மாவட்டங்களுக்குப் போய் ஆய்வு செய்கிறேன் என்கிற போது, மாநில அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

    ஒரு ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். அதுதான் ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரம்.

    மாநில அமைச்சர்-அதிகாரிகளின் செயல்பாட்டில் இவர் சென்று ஆய்வு செய்தால், தமிழகத்தில் ஒரு இரட்டை அரசாங்கம் செயல்படுகிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-


    தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாக போராடுவோம். ‘‘ஆளுநர் சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றன’’ என்கிற முறையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

    ஆளுநர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை எதிர்த்து தீவிரமாக போராடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:-

    தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    கர்நாடக தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.#KarnatakaElection2018
    எப்போதுமே பொறுமை வேண்டும். முந்திரிக்கொட்டை மாதிரி முந்தக்கூடாது என்பதற்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளே மிகச்சிறந்த உதாரணமாகும்.

    காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரியனை ஏறுவதற்கு காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அக்கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார். அதே நேரத்தில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற கோ‌ஷத்துடன் களம் இறங்கிய பாரதிய ஜனதா கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடித்தது.

    பா.ஜனதாவின் இந்த எண்ணம் எளிதாக ஈடேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நேற்று காலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் 121 தொகுதிகளையும் தாண்டி பா.ஜனதா முன்னிலையில் இருந்தது. காலையில் இருந்த இந்த ஏற்றம் மாலையில் இறங்கு முகமாக மாறியது. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவால் அரிதி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை கைப்பற்ற முடியாமல் போய் விட்டது.

    ஆனால் தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதா எளிதாக ஆட்சியை பிடித்து விடும் என்று எண்ணி முன்கூட்டியே வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர உள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீரை திறக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தியையே அனுப்பி விட்டார். அதில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததுடன் சுறுசுறுப்பான, மனசாட்சியோடு நேர்மையான உழைப்பால் பெற்ற இந்த வெற்றி உங்களின் புகழ் வெற்றிக்கு மேலும் ஒரு மணிமகுடம் என்றும் கூறியிருந்தார்.



    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா பெற்ற வெற்றியை தமிழக பா.ஜனதா கட்சியினரும் கொண்டாடினர். அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    பா.ஜனதா கட்சியினரின் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மாலையில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜனதா கட்சியினர் விரக்தியில் மூழ்கியுள்ளனர். #KarnatakaElection2018
    சென்னையில் பா.ஜனதா தலைவர்களுடன் விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SVeShekher #BJP
    சென்னை:

    காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 24 நாட்களாக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதனால் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கான எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் சர்வ சாதாரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலை தளங்களிலும் கண்டன குரல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு அதிகாரத்தில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரே காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #SVeShekher #BJP
    ×