search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தலைவராக தேர்வு - மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
    X

    தி.மு.க. தலைவராக தேர்வு - மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin
    சென்னை:

    அகில இந்திய இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியலில் நீங்கள் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

    தி.மு.க கழகத்தின் தலைவராக எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அமைத்துக் கொடுத்திருக்கிற அரசியல் பாதையில் மு.க.ஸ்டாலின் பீடுநடை போட்டு தி.மு.க. கழகத்தை வளர்ச்சிப் பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்வார்.

    திராவிட கழக தலைவர் கி.வீரமணி 1944 ஆகஸ்ட் 27-ந்தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே காலகட்ட நாளில் தி.மு.க.வின் தலைவராக பாசமிகு மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது, எத்தகைய வரலாற்று பொருத்தம்.

    களத்தில் 14 வயது முதலே இளைஞர் அணியிலிருந்து செதுக்கப்பட்டவரும், சிறை வாழ்க்கை, தியாகத் தழும்புகளோடு, பல பதவிகளையும் பொறுப்புகளாகப் பார்த்து ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வாழ்ந்துகாட்டி வருபவருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் வகித்த பொறுப்புக்கு ஒரு மனதாக தி.மு.க. கழகத்தின் தலைவராக அடலேறுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதுபோலவே அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு அக்கட்சியில் 40 ஆண்டுகளாக கலைஞரின் நிழல் போல திகழ்ந்த அவரது அரசியல் மாணவர் துரைமுருகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உலக வரலாற்றில் எங்கும் காணமுடியாத வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திராவிட இயக்கத்தை பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், பாட்டாளிகளின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதிக்காகவும் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகிறோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. தலைவராக இருந்து அரை நூற்றாண்டு காலம் அந்தக் கட்சியை வழிநடத்திய சமத்துவப் பெரியாரால் கலைஞர் அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டவர். இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாக திகழும் தி.மு.க.வின் மரபுப்படி இன்று தேர்தல் மூலம் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

    தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழிநடத்த வாழ்த்துகிறோம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- இளம்வயது முதல் கடின உழைப்பால், தொடர் பணியால், விடா முயற்சியால் 50 வருடங்களுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க.வின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகனுக்கு த.மா.கா.சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசர நிலைக்காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர். சிறை சென்றவர். சித்ரவதைக்கு உள்ளானவர். கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக கடுமையாக உழைத்துப் பணி ஆற்றியவர். என்கின்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வில் அடிமட்ட தொண்டனாக தமது அரசியல் பயணத்தை துவங்கி படிப்படியாக முன்னேறி செயல் தலைவர் பொறுப்பினை ஏற்று மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

    எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பாளர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டு தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கழகத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி சென்று மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    சமத்துவ மக்கள் கழக நிறுவனர், தலைவர் நாராயணன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆசியுடன் தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்று தொண்டர்களை அரவணைத்து பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin

    Next Story
    ×