search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents"

    • குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
    • பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

    குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:

    இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    காது கொடுத்து கேளுங்கள்:

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:

    குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    தினமும் நேரம் ஒதுக்குங்கள்:

    குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.

    கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:

    பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.

    • ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
    • தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    தந்தை...! இந்த ஒற்றை வார்த்தைக்கு உரியவரிடம் இருந்துதான் ஒவ்வொருவருக்கும் அன்பு, அறிவு, ஒழுக்கம், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க பெறுகின்றன. ஆம்... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகேற்ப அவரது அறிவுரை, கண்டிப்பும்தான் ஒவ்வொருவருக்கும் நல்ஒழுக்கம், சிறப்பான வாழ்க்கையை பெற்றுத்தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்தாலும் அந்த தாயையும், பிள்ளையையும் சேர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் சுமந்து செல்லக்கூடியவர்கள்தான் தந்தையர்கள்.

    பிள்ளைகளின் பார்வைக்கு வேண்டுமானால் தங்களது தந்தை ராஜாவாக இல்லாமல் போகலாம். ஆனால் தந்தையானவர்களுக்கு தங்களது பிள்ளைகள் என்பவர்கள் இளவரசியாகவும், இளவரசனாகதான் தெரிவார்கள். அதனால்தான் ஒவ்வொரு தந்தையும் தான் கஷ்டப்பட்டதுபோல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது வலி, சோகத்தையும் மறந்து பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.

    இப்படி தன் பிள்ளைக்காக எது நல்லது, கெட்டது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் தந்தையர் கடவுளுக்கும் நிகரானவர்கள் என்றே வர்ணிக்கப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்-தந்தையருக்கு பிறகுதான் கடவுளும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதனால் தாய்-தந்தையரை மதித்து நடக்காமல், முதுமையில் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு நீங்கள் எவ்வளவு நல்லகாரியங்கள் செய்தாலும் அது பிரயோஜனம் அற்றவைதான். தாய்-தந்தையர் இருக்கும்போது அவர்களை கவனிக்காமல் பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.

    அந்த வகையில்அன்னையர்களுக்கு போல் தந்தையருக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன்னை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்ஸ் என்பவர் 1910-ம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இதைதொடர்ந்து அமெரிக்க அரசு ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்து கொண்டாடியது.

    இதுவே பின்னாளில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பரவி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாட்டம் நாள் வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஜூன் மாத 3-வது ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    • பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:-

    பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும்.

    தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் .

    பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர்.

    இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.

    • மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற னர்.

    கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வியில் 630 மாணவ-மாணவிகளும், தமிழ் வழி கல்வியில் 130 மாணவ-மாணவிகளும் படித்தனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆங்கில வழி மாணவர்கள் சேர்க்கையும், தமிழ் வழி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இதில் ஆங்கில வழி கல்வியில் படிக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி புத்தகங்களும், தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு ஆங்கில வழி கல்வி புத்தகமும் வழங்கப்பட்டதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து இன்று காலை மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரம் குறித்து கேட்டனர். அப்போது அரசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சார்பில் ஒரு உத்தரவு பிறக்க பிறப்பிக்க ப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்வி இரண்டும் சமமாக கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களில் ஒரு சிலரை தமிழ் வழி கல்வியிலும், அதேப்போல் தமிழ் வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களை ஆங்கில வழி கல்வியிலும் சேர்த்ததாக தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்பதற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.
    • அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    பெற்றெடுத்தது முதல் குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி நல்ல பணியில் அமரச் செய்து திருமணமும் செய்து வைத்து தனது குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்த எத்தனையோ பெற்றோர் இன்று மகனிடமும், மருமகளிடமும் ஒரு ஊதியமில்லாத ஊழியராக வாழ்ந்து வருகின்றனர்.

    மனைவியின் சொல்லை கேட்டு அப்பா வெளியே போய் வரலாம் என்று கூட்டிக்கொண்டு போய் ரெயில் நிலையத்திலோ, கோவில் அருகிலோ நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என்று சொல்லி சென்று விடுகின்றனர். இப்படி சென்றுவிட்ட தனது மகனை நினைத்து முதியோர்கள் அலைந்து திரிகின்றனர். அப்பா, அம்மா என்று பின்னாலேயே அலைந்த மகன் இன்று மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்ப தற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.

    ஆட்டை விற்று, மாட்டை விற்று, நகைகளை நிலங்களை பிள்ளைக்காக விற்று படிக்க வைத்து உயரச் செய்து எனது மகன் இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று கர்வம் கொண்டு பெருமையடையும் பெற்றோர்கள் பலர் தற்போது முதியோர் இல்லத்தில் உள்ளனர். உணவிலிருந்து உறக்கம் வரை குழந்தைகளுக்காகவே வாழ்பவர்கள் பெற்றோர்கள்.

    தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்மானத்தைகூட தூக்கி எறிபவர்கள்தான் பெற்றோர்கள். அப்படிப்பட்ட பெற்றோர் இன்று வீட்டிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.

    அவ்வாறு அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    1 மாதத்திற்கு குறைந்தது 30 பேர் அனாதையாக விடப்பட்டு மீட்கப்பட்டு காப்பகத்தில் அரவணைக்கப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்படுவது விதவை பெண்கள்தான். கணவன் இருக்கும்வரை அவர் ஆதரவுடன் இருந்த பல பெண்கள் கணவன் இறந்த பின்னர் நிர்கதியாக நிற்பது அதிகமாகி வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த கமலேஷ் குமாரி (75), சமீரா அப்ரோஜ் (70), புஷ்பா (60), சுரேந்தர் சவுத்ரி (57), சவ்ஹான் (50) ஆகிய 5 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்ட சீனியர் கமாண்டர் முத்துக்கும் ரேசன் மற்றும் அதிகாரிகள் ரோகித்குமார், சைனி, போலீஸ் ஏட்டு பாண்டி தலைமையில் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு இவர்கள் முதியோர் காப்பகத்தில் விடப்பட்டுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தவர்களில் எண்ணூரை சேர்ந்த 75 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை கமலேஷ் குமாரியும் ஒருவர். இவர் இரண்டு முதுகலை பட்டங்களை படித்தவர். 7 மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர். சென்னையில் உள்ள இவரது சொத்தை யாரோ ஏமாற்றி அபகரித்துவிட்டதாலும், உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளாததாலும் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்தார். அவர் மீட்கப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊருக்கு சென்று வருவோம் என தந்தையையோ, தாயையோ ரெயிலில் கூட்டி வந்து ரெயில் நிலையங்களில் விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பெண் ஒருவர் 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் ஒரு ஓரத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை அறிந்து மீட்க சென்றோம்.

    எங்களை கண்டதும் கதறி அழுத மூதாட்டி ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் என் மகன்... அவனை ஒன்னும் செஞ்சிடாதீங்க என்று கெஞ்சி கேட்டு கதறினார்.

    அவரை சமாதானப்படுத்தி வாருங்கள், நாங்கள் அழைத்து செல்கிறோம் என்று அழைத்து சென்று அவருக்கு உணவளித்து உடைகளை வழங்கி அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். நன்றாக வாழ்ந்தவர். அவர் முகவரியை கூட சொல்ல மறுத்துவிட்டார் என்றார்.

    வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் அனாதையாக ஆதரவின்றி தவிக்கவிடப்படுகின்றனர்.

    தள்ளாத சூழ்நிலையில் விடப்பட்ட முதியோர்களை காப்பகங்கள் அரவணைத்து பாதுகாக்கின்றன. பெரிய மேட்டில் சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய சமுதாய நிறுவனம் இணைந்து ஆதரவற்ற வர்களை பாதுகாத்து வருகிறது. இங்குள்ள காப்பக நிர்வாகி கிருத்திகா கூறியதாவது:-

    உறவுகளால் அதிகம் கைவிடப்படுபவர்களில் 55 வயதில் இருந்து 85 வயதானவர்களே அதிகம். குடும்பத்தினரின் கடும்சொல் தாங்காமல் கண்ணீர் ததும்ப வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கியிருந்தோரை மீட்டு எங்கள் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம். உணவு, உடை வழங்கி மருத்துவ வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை மறந்து காப்ப கத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்கிறோம்.

    முடிந்தளவு அவர்களின் உறவுகளுடன் பேசி கவுன்சிலிங் கொடுத்து சேர்த்தும் வைக்கிறோம்.

    பெரியமேடு ஸ்டிரிஸ்கர்ஸ் தெரு காப்பகத்தில் 25 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவின்றி வந்தவர்கள் தான் என்றார்.

    தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமாக ஆதரவற்றோர் விடப்படுகின்றனர். அதிகமாக சென்னையில் வருடத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோர் ஆதரவின்றி கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் காணப்பட்டு மீட்கப்படுவதாக முதியோர் காப்பகங்கள் தெரிவிக்கின்றன.

    கண் விழித்து இரவு பகலாக நமக்காக உழைத்த பெற்றோரை கண் கலங்க வைத்து ஏதோ அறியாத புது இடத்தில் தவிக்கவிட்டு செல்லும் இவர்களை கல் நெஞ்சம் கொண்டவர் என்பதா? இல்லை பிறர் கண் கலங்குவதை வேடிக்கை பார்க்கும் நன்றி கெட்ட மனிதர் என்பதா? காலமே பதில் சொல்லும்.

    • குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
    • பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம்.

    எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

    இதுபோல பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது சற்று சிரமமான ஒன்று. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கூட பாதிக்கப்படலாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கலாம், குழந்தைகள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள், அதை எப்படிச் சரிசெய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

    புதிதாகப் பள்ளியில் சேரும்போது, சில குழந்தைகள் அந்தப் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது அடம்பிடிப்பார்கள். என்றாலும், தொடர்ச்சியாக 20 நாள்கள் பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கு அந்தச் சூழல் பழகிவிடும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு சூழலில் பள்ளி செல்ல மீண்டும் அடம்பிடிக்கலாம். சமாதானம் செய்து அனுப்பிவைத்தால் சூழலை ஏற்றுக்கொள்வார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால், ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுத்து, சில உடல்நிலைக் காரணங்களைச் சொல்லி, தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முயல்வார்கள். ஏதோ உடல்நல பாதிப்பு என நினைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால், எல்லாம் நார்மலாக இருக்கும். இதுவே குழந்தைகளின் அன்றாட நிகழ்வாகும்போது பெற்றோர் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளை அவசியம் ஆராய வேண்டும்.

    * பள்ளிக்குச் செல்வதால் அம்மாவைப் பிரியவேண்டியிருக்கும், இதனால் தனக்கோ, தன் அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயத்துக்கு ஆளாகலாம். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனவே, இது 'ஸ்கூல் போபியா' கிடையாது; பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கான பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    * சில குழந்தைகள் மென்மையான மனம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் பிற குழந்தைகளின், ஆசிரியர்களின், ஸ்கூல் வேன் டிரைவர், ஆயா ஆகியோரின் கேலி, கிண்டல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ ஆளாகியிருக்கலாம். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.

    * தான் பள்ளி சென்றவுடன் தன் தம்பி அல்லது தங்கை மட்டும் அம்மாவுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல், தானும் வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர்.

    * சில குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் கற்றல் குறைபாடு ஏற்படலாம். இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளைக் கண்டிக்கும்போது பள்ளிக்குச் செல்ல அவர்கள் நிச்சயம் மறுப்பார்கள்.

    * உடல்நிலை பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நீண்ட நாள்கள் விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு, மீண்டும் பள்ளிச் சூழலை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள்.

    * குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் `வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, தலை வலிக்கிறது' போன்ற உடல்ரீதியான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க முயல்வார்கள். 'சரி லீவ் எடுத்துக்கோ' என பெற்றோர் சொன்ன சில மணி நேரத்தில் இயல்பான சூழலுக்கு வந்துவிடுவார்கள்.

    * மனரீதியான பாதிப்பு ஏதேனும் அடைந்திருந்தால், தூக்கத்தில் அது அலறல்களாக வெளிப்படும்.

    * ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களைப் பற்றி வீட்டில் அடிக்கடி குறை கூறலாம்.

    * பள்ளி சார்ந்த செயல்பாடுகளான வீட்டுப்பாடம் எழுதுவது, பாடம் படிப்பது போன்றவற்றை வீட்டிலிருந்தே தான் செய்துகொள்வதாகச் சொல்வார்கள்; கெஞ்சுவார்கள்.

    குழந்தைகள் இது போன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் உடனே இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

    தீர்வுகள்!

    பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'நீ ஸ்கூலுக்கு கண்டிப்பாகப் போகணும்' என வற்புறுத்தாமல், அவர்கள் ஏன் அடம்பிடிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் அடிக்கடி பள்ளி செல்ல மறுக்கிறார்கள் என்றால், முதலில் உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா எனக் குழந்தைகள்நல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை வழங்கி, முழுமையாகக் குணப்படுத்தி, அதன் பிறகு பள்ளிக்கு அனுப்பலாம்.

    சில குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாலியாக விளையாடலாம்; டி.வி பார்க்கலாம் என்றும்கூட பள்ளி செல்ல மறுப்பது உண்டு. எனவே, அவர்கள் விடுப்பு எடுக்கும் நாள்களில் டி.வி பார்க்கவும், விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தான் நினைத்தது நடக்கவில்லை எனும் பட்சத்தில் மறுநாள் அவர்களே ஸ்கூலுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

    `ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே மிரட்சியுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் வகுப்பு ஆசிரியரை அணுகி உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல், மிரட்டல்களுக்கு ஆளாகிறதா என்பதை விசாரித்துத் தீர்வு காணுங்கள்.

    பெற்றோரைப் பிரிய இயலாமல் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் எனில், பெற்றோரிடமிருந்து குழந்தை விலகியிருக்கச் சிறிது சிறிதாக எப்படிப் பழக்கப்படுத்தலாம் என ஆசிரியர்களுடன் கலந்து பேசலாம். பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம். அதன் பின்னர் சில தினங்கள் குழந்தையை வகுப்பறையில் அமரச் சொல்லி, 'அம்மா ஸ்கூல்லதான் இருப்பேன், லஞ்ச் டைம்ல பார்க்கலாம்' எனச் சொல்லி பள்ளியில் காத்திருக்கலாம். இப்படிப் படிப்படியாக பள்ளியின் சூழலையும் பெற்றோரின் பிரிவையும் குழந்தையை மனதளவில் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம்.

    பள்ளி செல்ல குழந்தை மறுப்பதற்கு என்ன காரணம் என்றே பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாத சூழலில், குழந்தைகள் உளவியல் அல்லது மனநல மருத்துவரை அணுகித் தீர்வு காண வேண்டும்.

    • இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
    • பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

    இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்குகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அப்படி கடுமையாக கண்டிப்பது உளவியல் ரீதியாக அவர்களை காயப்படுத்தும்.

    எப்போதும் அன்பாக நடத்தும் பெற்றோர் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கத்தை அவர்கள் மனதில் விதைக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் தவறு செய்யும்போது குரலை உயர்த்தி கடுமையாக பேசுவது மனதளவில் காயப்படுத்திவிடும்.

    அதன் அதிர்வு ஆழ் மனதில் பதிவாகிவிடும். அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும். உளவியல் ரீதியாக பலவீனமாகிவிடுவார்கள். பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது.

    ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.

    • ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
    • கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

    பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.

    குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.

    கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.

    அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.

    எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.

    திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.

    வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.

    • படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள்.
    • குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

    படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:

    5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.

    நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள்.

    படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும்.

    குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

    ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:
    வாழ்க்கையில் அழகிய தருணங்களை உருவாக்கும் உறவு ‘நட்பு’. ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:

    சோகமும் தேவையே:

    இளம் வயதில், நட்பின் இழப்பால் ஏற்படும் துக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நட்பின் இழப்பினால், அவர்கள் அழுவதற்கு விரும்பினாலும், பழைய விஷயங்களை அசை போட விரும்பினாலும் அதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எந்த இழப்பையும் உடனடியாக சமாளித்து வெளி வருவது கடினமானது. எனவே, அதற்கான நேரத்தை ஒதுக்கி, காத்திருங்கள். இது எதிர்காலத்தில், அடுத்த அடியை நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதை எளிதாக்கும்.

    மாற்றுப் பாதையில் மனதைத் திருப்புங்கள்:

    நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும். எதிர்மறையான எந்தக் கருத்தையும் இந்த நேரத்தில் உருவாக்காமல், அவர்களுடனே பயணிக்க முயலுங்கள்.

    அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் வகையில், சிறுசிறு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். வீட்டில், உங்களுக்குத் தேவையான தகவலை, பிள்ளைகளின் மூலம் பெறுதல், காலண்டரில் தேதி சரி செய்தல், போனில், எண்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வைப்பதன் மூலம் மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் அவர்களின் மனம் தடம் மாறாமல் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கச் செய்யலாம்.

    பேச அனுமதியுங்கள்:

    மனம் துவண்டு இருக்கும் நேரத்தில், நம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த தயக்கத்தைக் குடும்ப உறுப்பினர்கள்தான் தகர்த்தெறிய வேண்டும். நீங்களே சென்று முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். இதில், பிள்ளைகளுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், மன எண்ணங்கள் வெளிப்படுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதுடன், சரியான தீர்வு காணவும் முடியும்.

    புதிய நட்புக்கு உதவுங்கள்:

    ஒரு நட்பை இழந்துவிட்டோம் என்றால் அதனுடன் இந்தப் பயணம் முடிந்துவிடுவதில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நட்பு முறிந்தாலும், நட்புடனான பழைய நினைவுகள் என்பது என்றும் நம் மனதில் நீங்காது இருக்கும்.

    அதனுடன், நிற்காமல் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல புதிய நட்பு தேவைப்படும். இதுபோன்று புதிய நட்பை அமைக்கும்போது, பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நட்பைத் தேர்வு செய்ய உதவுங்கள். எதிர்காலத்தில், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கான சிறந்த வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
    பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கமும், தொடர்பும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளி, கணவன்-மனைவி உறவை மட்டுமில்லாமல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவையும் பாதிக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதை அதிகரிப் பதற்கான சில எளிய வழிகள் இதோ...

    முன்னுதாரணம்: குழந்தைகள் பெற்றோரின் பிம்பங்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் செயல் எப்படி உள்ளதோ, அதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடுகளும் வெளிப்படும். பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குழந்தைகள் முன்னால் காண்பிக்கக்கூடாது. நமக்கு இருக்கும் வேலைப்பளுவை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடலாம். இது அவர்களின் மனநிலையைச் சீராக்கும்.

    மனம்விட்டு பேசுதல்: பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே, தகவல் பரிமாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் விட்டுப் பேசுதல் முக்கியமானது. குழந்தைகள் நமது பேச்சை கவனிப்பதற்கு ஏற்றவாறு, நாம் பேசும் முறையைச் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் வார்த்தையை விட, உடல் மொழியைத்தான் குழந்தைகள் அதிகமாக கவனிப்பார்கள். உளவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பேசும்போது வார்த்தை 7 சதவீதமும், உடல்மொழி 55 சதவீதமும், குரலின் சத்தம் 38 சதவீதமும் இருக்க வேண்டும்.

    குழந்தைகளை பேச வைத்தல்: பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி.

    நேரத்தைத் திட்டமிடுதல்:  ஒரு நாளில், சில மணி நேரத்தைக் குடும்பத்திற்காக மட்டும் ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், வெளி வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். குழந்தைகளும் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்ப்பார்கள். தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். இந்த நேரத்தை அனைவரும் வெளிப்படையாகவும், தெளிவாகவும், மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக மாற்றுங்கள்.

    நடைமுறையை உருவாக்குதல்: அலுவலக பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதுபோல், குடும்பத்தின் நடைமுறைக்கும் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும். படுக்கைக்கு செல்வது, உணவுக்கான நேரம், விளையாட்டு நேரம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது என, முறைப்படுத்த வேண்டும்.

    பாராட்டுங்கள்: குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான தொடர்பை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் உதவும் ஒரே வழி ஒருவருக்கொருவர் தொடர்ந்து பாராட்டி ஆதரவளிப்பதுதான். குழந்தைகள் சவாலான விஷயங்களைச் சந்திக்கும்போது, இந்த பழக்கம் அவர்களை ஊக்குவிக்க உதவும்.
    குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
    5 வயதில் குழந்தைகள் அதிகப்படியான ஆற்றலோடு இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் செயல்களின் வேகம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்களால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தவறு உங்கள் பக்கமும் இருக்கலாம். இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம்.

    அதிகப்படியான செல்லம் கொடுத்து, அவனது எந்த செயலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருப்பதன் காரணமாகக்கூட, அவனது சுட்டித்தனங்கள் அதிகமாகி இருக்கலாம். அவன் கேட்டதை எல்லாம் ‘இல்லை’ என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பது, விரும்பிய செயல்களை தாமதிக்காமல் நிறைவேற்றுவது போன்றவற்றை செய்தீர்களென்றால், இனி அவ்வாறு நடப்பதை தவிர்க்கவும்.

    குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

    அவனது செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும். இவை அனைத்தும் சரி செய்யப்பட்டாலும் பிரச்சினை தொடர்ந்தால், குழந்தையை உளவியல் நிபுணரிடம் மதிப்பீட்டுக்கு அழைத்துச் செல்வது சிறந்தது. ஒரு வேளை உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்டிவாக இருந்தால், அதற்குரிய பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அவனது செயல்களை நெறிப்படுத்த முடியும்.
    ×