search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இன்று தந்தையர் தினம்: தந்தையர் கடவுளுக்கு நிகரானவர்கள்...
    X

    இன்று தந்தையர் தினம்: தந்தையர் கடவுளுக்கு நிகரானவர்கள்...

    • ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
    • தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    தந்தை...! இந்த ஒற்றை வார்த்தைக்கு உரியவரிடம் இருந்துதான் ஒவ்வொருவருக்கும் அன்பு, அறிவு, ஒழுக்கம், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க பெறுகின்றன. ஆம்... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகேற்ப அவரது அறிவுரை, கண்டிப்பும்தான் ஒவ்வொருவருக்கும் நல்ஒழுக்கம், சிறப்பான வாழ்க்கையை பெற்றுத்தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்தாலும் அந்த தாயையும், பிள்ளையையும் சேர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் சுமந்து செல்லக்கூடியவர்கள்தான் தந்தையர்கள்.

    பிள்ளைகளின் பார்வைக்கு வேண்டுமானால் தங்களது தந்தை ராஜாவாக இல்லாமல் போகலாம். ஆனால் தந்தையானவர்களுக்கு தங்களது பிள்ளைகள் என்பவர்கள் இளவரசியாகவும், இளவரசனாகதான் தெரிவார்கள். அதனால்தான் ஒவ்வொரு தந்தையும் தான் கஷ்டப்பட்டதுபோல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது வலி, சோகத்தையும் மறந்து பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.

    இப்படி தன் பிள்ளைக்காக எது நல்லது, கெட்டது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் தந்தையர் கடவுளுக்கும் நிகரானவர்கள் என்றே வர்ணிக்கப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்-தந்தையருக்கு பிறகுதான் கடவுளும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதனால் தாய்-தந்தையரை மதித்து நடக்காமல், முதுமையில் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு நீங்கள் எவ்வளவு நல்லகாரியங்கள் செய்தாலும் அது பிரயோஜனம் அற்றவைதான். தாய்-தந்தையர் இருக்கும்போது அவர்களை கவனிக்காமல் பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.

    அந்த வகையில்அன்னையர்களுக்கு போல் தந்தையருக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன்னை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்ஸ் என்பவர் 1910-ம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இதைதொடர்ந்து அமெரிக்க அரசு ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்து கொண்டாடியது.

    இதுவே பின்னாளில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பரவி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாட்டம் நாள் வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஜூன் மாத 3-வது ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    Next Story
    ×