search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani"

    • ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • தங்கரத புறப்பாடு நடந்தது.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான (வைகாசி) கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

    பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 115 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

    • பழனிக்கு வையாபுரி என்ற பெயரும் உண்டு.
    • பேகனின் குலதெய்வம் முருகன்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடு பழனி என்பதை நாம் அறிவோம். ஆனால் சங்க நூல்கள் திருஆவினன்குடி என்பதையே 3-ம் படைவீடாக குறிப்பிடுகிறது. மேலும் இது பொதினி என்ற இலக்கிய பெயரையும் கொண்டது. அதோடு ஆவிகுடியை சேர்ந்த மன்னன் அரசாட்சி செய்து வந்ததால் திருஆவினன்குடி என பெயர் பெற்றது. பழனிக்கு வையாபுரி என்ற பெயரும் உண்டு. அதாவது கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் குலதெய்வம் முருகன். அவனை 'வையாவிக் கோப்பெரும் பேகன்' என கூறுவார்கள். எனவே பேகன் ஆட்சி செய்த பகுதியாக பழனி விளங்கி இருக்கிறது.

    இவ்வளவு சிறப்பு பெற்ற திருஆவினன்குடி முருகனை முப்பத்து முக்கோடி தேவர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் வணங்கி உள்ளனர் என்பது தனிச்சிறப்பு. அதாவது பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால், உலகை ஆளும் ஈசன், செல்வத்தை அருளும் லட்சுமி தேவி மற்றும் தேவலோக அரசன் இந்திரன் முதலான தேவர்கள், முனிவர்கள், இசைவாணர்கள் ஆகியோர் முருகனை கண்டு வழிபட்ட இடமானது திருஆவினன்குடி என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். நாமும் பழனி முருகனை வழிபட்டு அவன் அருளை பெறுவோம்.

    • திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது.

    அப்போது திருமணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மணமேடை முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
    • திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.

    அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவிலின் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே நேற்று கேரள மாநில பக்தர்கள் 10 பேர், 12 அடி நீள அலகு குத்தி வந்து கிரிவீதிகளில் வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பழனிக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதேபோல் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள், தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • 1-ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கொடிப்பட பூஜை நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளிகாமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவாக வருகிற ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் , அதனைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    7-ம் நாள் விழாவாக ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாகத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரியதந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமயசொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த திட்டம் முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.
    • இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கு படிப்பாதையை தவிர ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. அதேபோல் கோவிலில் பொது தரிசனம் மட்டுமல்லாது விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகள் உள்ளன. இதன் வழியே முதியோர்கள், குழந்தைகளுடன் வருவோர் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் பிரதான கோவில்களில் "இடைநிறுத்த தரிசனம்" (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வந்துசெல்லும் பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" தொடங்குவது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் கோவில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" திட்டம் தொடங்கினால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.

    இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வாறு தரிசனம் செய்வோருக்கு கோவில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 1-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.

    உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.

    சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.

    7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
    • காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள் :

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அவ்வையை சுட்ட பழம் :

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை :

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம் :

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம் :

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • வீரபாகுவாக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.

    பழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்கக்குதிரை, வெள்ளிமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 11, 12-ந்தேதிகளில் நடந்து முடிந்தது.

    இந்தநிலையில் வைகாசி விசாக திருவிழா, கொடியிறக்கத்துடன் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு, சப்பரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நாரத முனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு, தெய்வானை அம்மனிடம் தூது சென்று அவரை சமாதானப்படுத்தினார்.

    வீரபாகுவாக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளி, தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவிலில் நடை திறந்து தெய்வானை அம்மன் முத்துக்குமாரசுவாமியுடன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு உட்பிரகாரத்தில் வலம் வந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் உள்ள மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை, 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு. போகரின் ஜீவசமாதி பழனி கோவில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இங்கு போகரின் சீடரான புலிப்பாணி குடும்ப வாரிசுகள் பூஜை செய்து வருகின்றனர்.

    முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம். போகர் ஜீவசமாதியில் பிரசித்தி பெற்ற பச்சை மரகத லிங்கம் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் இந்த மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.

    அதன்படி போகர் ஜெயந்தியையொட்டி பழனி கோவிலில் உள்ள போகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் போகர் சித்தாந்த சபை சார்பில், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி போகர் சிலைக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து பரதநாட்டியம், நந்தி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சித்தாந்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    ×