search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani"

    • நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் பொது தரிசனம், ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் சென்று சாமியை வழிபடுகின்றனர். ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தங்களுக்கான தரிசன நேரம் வரும் வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்து தரிசனத்திற்கு செல்கின்றனர். காத்திருக்கும் அறையில் இருக்கைகள், எல்.இ.டி. டிவி, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.10 கட்டண தரிசனத்தில் செல்லும் வழியிலும் பக்தர்களுக்கு காத்திருப்பு அறையில் 1,000 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்தநிலையில் பொதுதரிசன பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இருக்கை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுதரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை இனி இல்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
    • நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன.

    அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனை வழிபாடு செய்தால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

    சும்மா... ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் இருக்கக் கூடாது.

    அறுபடை வீடுகளில் உள்ள ஆழமான சூட்சம ரகசியங்களை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பது பலருக்கும் மலைப்பாக இருக்கலாம்.

    கவலையே படாதீர்கள். அது மிக, மிக எளிதானது. கொஞ்சம் நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் அருளை ஒவ்வொன்றாக பெறமுடியும்.

    அறுபடை வீடுகளையும், நம் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அந்த ரகசியம் நமக்குத் தெரிந்து விடும்.

    நம் உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆக்ஞை என்று 6 சக்கரங்கள் உள்ளன. நம் முதுகுத் தண்டில் அவை அமைந்துள்ளன.

    இந்த சக்கரங்கள் நம் பிட்டத்தில் இருந்து தலை வரை உள்ளது. அவை வேறு, வேறு பகுதிகளில் இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

    நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன. எனவே இந்த சக்கரங்களை நாம் சரியானபடி தட்டி எழுப்பினால் ஞான முதிர்ச்சியைப் பெற முடியும்.

    அது போலத்தான் அறுபடை வீடுகளை ஆறு ஆதாரங்களாகப் பிரித்து வழிபட்டால் இறுதியில் முக்தி கிடைக்கும்.

    முருகப்பெருமானின் முதல் படை வீடு-திருப்பரங்குன்றம். இந்த படை வீட்டின் நமது ஆதாரமாக மூலாதாரம் உள்ளது. இத்தலத்தில் முருகன் வடிவத்தில் நல் துணை வடிவமாகவும், சக்தியில் பராசக்தியாகவும், தன்மையில் உல்லாசமாகவும் உள்ளார்.

    நம் உடம்பில் உள்ள மூலாதாரம், நமது உயிர் இயக்கத்துக்கு எப்படி மூல காரணமாக உள்ளதோ, அது போல திருப்பரங்குன்றமும் நம் ஆன்மிக இயக்கத்துக்கு முதல் படியாக உள்ளது. இங்கு முருகனை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    அது மாதிரிதான் நம் உடம்பில் உள்ள மூலாதாரத்தை உசுப்பி விட்டால், அது குண்டலினியின் ஒட்டு மொத்த சக்தியையும் தட்டி உஷார்படுத்தி விடும். முக்கியமாக உயிராற்றல் அதிகரிக்கும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில்தான் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்தார். ஆக இத்தலத்தில் நாம் வழிபாடு செய்யும் போது குண்டலினியின் மொத்த சக்தியும் தட்டி எழுப்பப்படுவது போல நம் ஆன்மீக பயணத்தின் மொத்த உணர்வும் இங்கு தட்டி எழுப்பப்பட்டு விழிப்பை பெறும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில் மூலாதாரத்தை நினைத்து வழிபட்டு பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த உல்லாசம் கிடைக்கும்.

    அடுத்து இரண்டாவது படை வீடாக திகழும் திருச்செந்தூர் பற்றி பார்க்கலாம். நமது உடல் ஆதாரங்களில் இத்தலத்தை சுவாதிஷ்டான சக்கரத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

    இந்த சக்கரத்துக்கு பாலியல் உணர்வு, ஈகோ குணம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்தி உண்டு. அது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்ச்சி போக்கை அறியும் சக்தி, ஐம்புலன்களை தாண்டி அறியும் சக்தியும் உண்டு.

    இதை அப்படியே திருச்செந்தூர் தலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

    சூரனை அழிக்க படையுடன் வந்த முருகப் பெருமான், சூரனின் உணர்ச்சிப் போக்கை அறிந்தான். பிறகு ஐம்புலன்களை தாண்டி அறிந்து சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

    இத்தலத்தில் முருகப் பெருமான், ஒளிவடிவாக உள்ளார். கடலில் நீராடி முருகனை வழிபட்டால் மனம் தெளிவு பெறும். நோய், பகை நீங்கும்.

    சக்திகளில் ஆதிசக்தியாக இங்கு முருகன் உள்ளார். அவரிடம் நம் மனதை ஒருமைப்படுத்தினால் எல்லா துன்பங்களும் தொலைந்து போகும்.

    சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படும் போது செயல், சிந்தனை, சுயகட்டுப்பாடு மேம்படும் என்பார்கள். இத்தலத்து முருகனும் அப்படித்தானே உள்ளார். எனவே திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது உங்களது செயல், சிந்தனை எல்லாமே மேம்படுவது உறுதி.

    முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியை நம் உடம்பில் உள்ள மணிபூரகம் சக்கரத்துடன் ஒப்பிடலாம். இந்த சக்கரத்தில் இருந்துதான் உடல் முழுவதும் சக்தி வினியோகிக்கப்படுகிறது. எனவேதான் பழனி தலத்தில் உள்ள முருகன், ஞானசக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

    மணிபூரகம் தூண்டப்படும் போது கட்டுக்கடங்காத உணர்ச்சி ஏற்படும். இது அப்படியே நம் முருகப் பெருமானின் சிறு வயது இயல்புடன் ஒத்துப் போகிறது.

    உலகை சுற்றி வந்த பிறகும் மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில், கட்டுக் கடங்காத உணர்ச்சிப் பெருக்குடன் முருகன், இந்த பகுதியில் உள்ள மலைக்கு வந்து விட்டான் என்பது வரலாறு. அவனுக்கு காட்சிக் கொடுத்த அம்மையும் அப்பனும் ''பழம் நீ'' என்றதால்தானே பழனி வந்தது.

    பழம் வடிவில் உள்ள முருகப்பெருமானின் கட்டுக் கடங்காத உணர்ச்சியை, மணிபூரகம் சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் ஏற்படுவது போன்ற நிலை காட்டப்படுகிறது.

    மணிபூரகம் தூண்டப்பட்ட பிறகு உடல் உறுதி மேம்படும். இதனால் ஒருவர் எப்போதும் கடும் உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பானராகவும் இருப்பார்.

    முருகனும் இத்தலத்தில் அப்படித்தானே உள்ளார். துறவு நிலை பூண்டு ஆண்டி கோலத்தில் இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்ததற்கு இடும்பனிடமும், அவ்வையிடமும் காண்பித்த திருவிளையாடல்களை உதாரணமாக சொல்லாம்.

    இங்கு ஞானப்பழமாக இருக்கும் முருகனை வழிபட்டால், ஞானம், ஆரோக்கியம் மேம்படும். சுவாதிஷ்டான சக்கர பலன்களை இங்கு பெறலாம்.

    அடுத்தது சுவாமி மலை. இது முருகப் பெருமானின் 4-வது படை வீடு. இத்தலத்தை நம் உடம்பு சக்கரங்களில் அனாகதம் என்கிறார்கள்.

    அனாகதம் சக்கரம் நம் இதயத்துக்கு நேர்பின்புறம் உள்ளது. அதனால் தானோ என்னவோ இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை உயர்த்தும் சக்தியாக உள்ளது.

    இத்தகைய இயல்புகள் எல்லாம் சுவாமிமலையில் இருப்பதை காணலாம். இத்தலத்தில் முருகன் கிரியா சக்தியாகவும், சொல் வடிவாகவும் உள்ளார்.

    முருகப்பெருமான் தம் பெற்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால்தான் படைப்பாற்றல் பெற்று இத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்ய முடிந்தது. அத்தகைய உபதேச சக்தியையும், படைப்பாற்றலையும் நாம் அனாகதம் சக்கரத்தை தூண்டும் போது நிச்சயமாக பெற முடியும்.

    அனாகதம் சக்கரம் விழிப்பு பெற்றால், அருள்நிலை ஆன்மிக வளர்ச்சி உயர் நிலைக்கு உந்தப்படும். இதை ''அக்கினி குண்டலினி'' என்று சொல்வார்கள்.

    அனாகதம் சக்கரம் துடிப்புடன் செயல்படும் போது, சாத்வீக குணங்கள் உண்டாகும். மனம் பக்குவநிலைக்கு வந்து விடும். படைப்பாற்றலின் ரகசியம் நமக்கு தெரியத் தொடங்கும்.

    இந்த நிலையை நீங்கள் சுவாமிமலை தலத்தில் பெற முடியும்.

    அறுபடை வீடுகளில் 5-வது படை வீடான திருத்தணியை நம் உடம்பில் 6 ஆதாரங்களாக திகழும் சக்கரங்களில் விசுத்தி சக்கரமாக கருதுகிறார்கள்.

    விசுத்தி சக்கரம் நம் உடம்பில் மைய கழுத்துக்கு பின்னால் இருக்கிறது. குரல் வளை சக்கரமான இதை தூண்டி விட்டால் நம் புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் அறிந்து, புரிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

    திருத்தணியில் இச்சா சக்தியாக திகழும் முருகனின் அருளை பெற்றால் நமக்கும் நம் புலன்களை அடக்கி தொலைவில் உள்ள விஷயங்களை அறியும் ஆற்றல் கிடைக்கும். இந்த ஆற்றல் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு நாம் விசுத்தி சக்கரத்தை முழுமையாக விழிப்படைய செய்தல் வேண்டும்.

    திருத்தணியில் முருகப்பெருமான் தன் கோபம் முழுவதையும் விட்டொழித்தார். மலைகளில் விளையாடி, வள்ளியை மணந்து சல்லாப தன்மைக்கு வந்தார். எனவே திருத்தணிகை நாதனை வழிபடும் போது நமது மனதில் இருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

    கோபம் நீங்கும் போது மனம் சரணாகதி தத்துவத்துக்கு செல்லும். இதன் மூலம் விசுத்தியான திருத்தணி நம் ஆத்ம சக்தியின் பரிமாணத்தை திறக்க செய்யம்.

    விசுத்தி தட்டி எழுப்பப்பட எழுப்பப்பட, புனிதத்துவம் வளரும். நம் உடலுக்குள் விஷத்தன்மை எந்த வடிவிலும் நுழைய முடியாத தன்மை உண்டாகும்.

    தீய உணர்வு, தீய எண்ணம் வரவே வராது. விசுத்தி மூலம் திருத்தணிநாதன் அதை நமக்குத் தருவார்.

    விசுத்தி சக்கரம் ஒருவரிடம் முழுமையாக மலர்ந்து விட்டால் அவருக்கு எதிலும் விருப்பு வெறுப்பு வராது. பற்றற்ற நிலைக்கு அடித்தளம் போடப்பட்டு விடும்.

    மனதில் அகந்தை என்பதே இருக்காது. திருத்தணி முருகனை வழிபடும் போது இந்த நிலையை பெற முடியும்.

    ஆனால் அதற்கு நாம் நமது விசுத்தி சக்கரத்தை தூண்டி விட்டு, மலரச் செய்யும் சூட்சமத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ரகசியம் புரிந்து விட்டால் திருத்தணி முருகன் அருளால் நீங்களும் பற்றற்ற நிலைக்கு உயர்ந்து விடலாம்.

    இறுதியாக நம் உடம்பில் ஆதாரமாக இருப்பது ஆக்ஞை. இதை முருகனின் படை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டு பலன்களை கூறியுள்ளனர்.

    நமது இரு கண் புருவ மத்தியில் இருக்கும் இந்த சக்கரத்துக்கு நெற்றிக் கண் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கரம் தூண்டப்படும் போது அறிவு சங்கல்பம் உண்டாகும்.

    பழமுதிர்ச்சோலையில் மர வடிவிலும், குடிலா சக்தியுடனும் இருக்கும் முருகன் நமக்கு அறிவு சங்கல்பத்தை தருபவராக உள்ளார். இத்தலத்தில் வழிபடும் போது வருமானம் பெருகி, பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இவை லௌகீக வாழ்க்கைக்கு உதவும்.

    ஆனால் ஆக்ஞை முழுமையாக மலரும் போது, அது ஆன்மீகக் கண்ணை திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அதோடு சமூக வாழ்க்கையில் இருந்து விலகும் நிலை வரும் என்கிறார்கள்.

    இதைத்தான் நெற்றிக் கண் திறப்பதாக நம்முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். பழமுதிர்ச்சோலை வழிபாடு இந்த ஆன்மீக கண் திறக்கும் நிலையை மேம்படுத்தும்.

    வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும் உயரிய நிலை ஆக்ஞையால் வரும். பழமுதிர்ச்சோலை இந்த ஞான முதிர்ச்சியைத் தரும்.

    இப்படி திருப்பரங்குன்றத்தில் தொடங்கி பழமுதிர்ச்சோலை தலம் வரை நாம் படிப்படியாக நம் ஆத்மா நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். அதாவது ஆன்மீக வாழ்வில் நம்நிலை படிப்படியாக உயரும்.

    இறுதியில் பிறவாமை நிலையைப் பெற முடியும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டு, இறுதியில் முருகன் திருவடிகளில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்ளும் உயர் மன நிலை பக்குவம் உண்டாகும். அறுபடை வீடுகளின் வழிபாட்டில் உள்ள அரிய ரகசியமே இதுதான்.

    • பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
    • தனித்து அமர்ந்த தலம் என்பதால் திருத்தணிகை.

    திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.
    • முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

    மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

    பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

    இதேப்போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.

    மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

    மலை உருவான கதை:

    பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

    சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

    அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

    இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. "இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது...?" என்று யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.

    ஆனால் அந்த சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

    பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப்பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

    இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.

    அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள்.

    இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

    திருவாவினன்குடி சிறப்பு:

    திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

    திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசிக மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

    குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்ன்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதரம் இந்த கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.

    நலம் தரும் கிரிவலம்:

    பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

    மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

    வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் :

    இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.

    முருகப்பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.

    தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.

    ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

    சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசித்திப்பெற்ற பஞ்சாமிர்தம் - பாதயாத்திரை:

    பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

    திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

    பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவதுபடை வீடு என்று கூறுவோரும் உண்டு.

    • பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
    • கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் இன்று (திங்கட்கிழமை) ஆடி மாதப்பிறப்பு என்பதால் நேற்றே பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பழனியில் அதிகாலை முதலே அடிவாரம், கோவில் வெளிப்பிரகாரம், சன்னதி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் கவுன்ட்டரை கடந்தும் பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அலைமோதிய கூட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    • தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோவிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • படிப்பாதையில் கடுமையான கூட்டம் காணப்பட்டது.
    • இரவில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை நாளையொட்டி இரு மடங்கு பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி நேற்று வார விடுமுறையொட்டி, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் கடுமையான கூட்டம் காணப்பட்டது. இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மலைக்கோவிலில் பொது, கட்டணம், கட்டளை தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து இரவில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

    பழனி:

    அறுடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

    பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை நடந்தது.
    • 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், கிரிவீதிகளில் பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் வெகுநேரம் காத்திருந்து டிக்கெட் பெற்று பக்தர்கள் சென்றனர். நீண்ட வரிசையில், 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். மழைவளம் பெருகவும், உலக நலன் வேண்டியும், பசி, பிணி இன்றி மக்கள் வாழவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி பழனி முருகன் கோவிலில் நேற்று நடந்தது.

    முன்னதாக கோவில் மண்டபத்தில் தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தல தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை நடந்தது.

    இதைத்தொடர்ந்து கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு கலசங்கள், 108 வலம்புரி சங்குகளை கோவில் உட்பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் நிறுவன உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ராகவன், அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராஸ் பண்டாரங்கள் செய்து இருந்தனர்.

    • பிரசாதத்துடன் கூடிய கட்டளை தொகை ரூ.1800-ம், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.300-ம் வசூலிக்கப்படுகிறது.
    • தற்போது கட்டளை தொகை ரூ.5 ஆயிரமாகவும், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பொது, கட்டண தரிசன வழிகளில் சென்று தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் கோவிலில் 6 கால பூஜைகளின்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரத்தை கண்டு தரிசனம் செய்ய காலபூஜை கட்டளை முறை உள்ளது. இதற்காக பக்தர்களிடம் தொகை வசூலிக்கப்படுகிறது.

    இந்த முறையில் மாலை, பரிவட்டம், பஞ்சாமிர்தம், புளியோதரை உள்ளிட்ட பிரசாதத்துடன் கூடிய கட்டளைக்கு சாதாரண நாட்களில் ரூ.900-ம், மாத சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ரூ.1800-ம் வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் பிரசாதம் இல்லாத கட்டளை தொகையாக சாதாரண நாட்களில் ரூ.150-ம், விசேஷ நாட்களில் ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் புதிய தரிசன முறை, தரிசன கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 'இடைநிறுத்த தரிசன முறை' அமல்படுத்துதல், 'தங்கரத புறப்பாடு' கட்டணத்தை உயர்த்துதல் தொடர்பாக பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகையை உயர்த்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது பிரசாதத்துடன் கூடிய கட்டளை தொகை ரூ.1800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.300-ல் இருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாத சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட ஒரு ஆண்டுக்கு 52 விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது என்றார்.

    பழனி முருகன் கோவிலில் தற்காலிக காலபூஜை கட்டளை தொகை உயர்த்தப்படுவதற்கு பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், பழனி முருகன் கோவிலில் அபிஷேக பூஜை பார்ப்பதற்கான (காலபூஜை) கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது. இது, ஏழைகளை கோவிலுக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்கான முன்னோட்டமாக உள்ளதா? என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து இலவச தரிசன முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு கட்டணம் உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.அதேபோல் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் உள்ளிட்ட வழிபாடு முறைகளிலும் கலந்துகொள்கின்றனர்.

    இதில் தங்கரத புறப்பாடு என்பது பழனி முருகன் கோவிலில் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்ளும் நாளன்று மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் குத்துவிளக்கு, முருகன் படம், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பித்தளை விளக்கு, தேங்காய், பழம், லட்டு, பழனி தல வரலாறு, எவர்சில்வர் குடம் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவில் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டம் தயாரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே தற்போதைய விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டு தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    இதில் பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். 15-ந்தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த கட்டண சேவை தொடங்குவது குறித்து பக்தர்களிடம் கருத்து ஆலோசனை கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கரத புறப்பாடு 9 நிலைகளில் இருந்து 15 நிலைகளாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கதேரை இழுக்கும் நேரம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கட்டணத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்துவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலம் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்கள் குழந்தைகள் இந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். சிலர் தொழில்களில் சிறந்து விளங்கிட சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இன்னும் சிலர் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்துக் கொண்டு முருகனை தரிசித்து சென்றனர். இதனால் மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அதே போல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ×