search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagaraja Temple"

    • நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.

    நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.

    பரிகாரத்தலம்

    நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.

    குழந்தை பாக்கியம்

    கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

    மன்னர் நோய் நீங்கியது

    இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.

    அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.

    • விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
    • 31-ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி கந்தசஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் 45-வது ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் மகாகணபதி ஹோமமும், 6 மணிக்கு கால்நாட்டும், காப்புக்கட்டும் நடந்தது.

    9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மூலவரையும், அம்பாளையும் இறை இசைப்பாடல்களுடன் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 6-வது நாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நாகராஜா திடலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சாமி ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-வது நாளான 31-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மங்கல தீபாராதனையும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது.

    • இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருக்கும்.
    • நாகர்சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் பொடி இட்டு வழிபட்டனர்.

    தமிழகத்தில் உள்ள நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாகவும், குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் நாகர்கோவில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான 21-ந்தேதியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். பலர் குடும்பம், குடும்பமாக வந்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

    இதனால் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடும் இடத்திலும், கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாகர்சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் பொடி இட்டு வழிபட்டனர். இதனால் பக்தர்களின் வரிசை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோவிலுக்கு வெளியே பல மீட்டர் தூரம் வரை இருந்தது. ஏராளமானோர் சிறப்பு டிக்கெட்டுகளையும் பெற்று வழிபாடுகளில் பங்கேற்றனர். அளவுக்கதிகமான கூட்டம் இருந்ததால் நேற்று மதியம் நடைசாத்துவதற்கு காலதாமதம் ஆனது.

    கூட்ட நெரிசலைப் பயன்டுத்தி பக்தர்களிடம் சமூக விரோதிகள் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை நாகராஜா கோவில் திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகராஜா திடல் பகுதிகளில் ஏராளமான திருவிழா கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு குமரி மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு ஆகியவற்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அன்னதானத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் வசந்தி (நீர்வள ஆதார அமைப்பு), தம்பிரான் தோழன் (கட்டிடம்) ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வில்சன்போஸ், வரைவுத் தொழில் அதிகாரி சதாசிவம், கண்காணிப்பாளர்கள் வில்பர்ட், பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.
    • பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இ்ந்த கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 21-ந் தேதி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகைதந்தனர். 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது கடந்த வாரத்தை விட அதிகம். கோவிலின் உள்புறத்தில் இருந்து பிரதான வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும், பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் நேற்று மதியம் நடை சாத்துவது தாமதம் ஆனது. சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டுகளும் கடந்த வாரத்தை விட நேற்று அதிக அளவில் விற்பனையானதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதே சமயத்தில் பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நாகராஜா திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மாற்று உடையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் நேற்று நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேசும், தி.மு.க.வினரும் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும்.
    • ஆண்களும், பெண்களும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

    இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும். இந்த நாட்களில் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று ஆகும். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதாவது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்கு வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்களுக்கு வசதியாக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே வரை இருந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி வழிபாடு செய்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநில பகுதிகளில் இருந்து, நெல்லை மாவட்டப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சிறப்பு அபிஷேக அர்ச்சனைக்கு ரூ.400 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு ஒரு லிட்டர் பால்பாயாசத்துடன் கூடிய சில்வர் பாத்திரம் ஒன்று, தேங்காய், பழம், பிரசாதம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக பால்பாக்கெட், மஞ்சள் பொடி பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா திடலில் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில் மொத்தம் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • ஆவணி மாதம் வருகிற 17-ந் தேதி பிறக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில், நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாதம் 2 நாட்கள் கழித்து, அதாவது வருகிற 17-ந் தேதி பிறக்கிறது. முதல் ஞாயிற்றுக்கிழமை21-ந் தேதியும், 2-வது ஞாயிற்றுக்கிழமை 28-ந் தேதியும், 3-வது ஞாயிற்றுக்கிழமை 4-ந் தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை 11-ந் தேதியும் வருகிறது. இந்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பக்தர்கள் ஒரு பாதை வழியாக சாமி தரிசனம் செய்து, மறுபாதை வழியாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள், கோவில் வளாகத்தில் பக்தர்கள் நிற்க வசதியாக பந்தல் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன.

    • மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக இருக்கும்.
    • புதுமண தம்பதிகளும் அதிகளவில் கோவிலுக்கு வந்ததை காணமுடிந்தது.

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கியமான ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை தரிசனம் செய்தால் சகல செல்வமும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக இருக்கும்.

    அதிலும் நேற்று ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வந்ததால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை மற்றும் கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்தும் நாகராஜா கோவிலுக்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடிதுவியும் வழிபட்டனர். புதுமண தம்பதிகளும் அதிகளவில் கோவிலுக்கு வந்ததை காணமுடிந்தது. பக்தர்களின் கூட்டத்தை முன்னிட்டு கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சஷ்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நடந்தது.
    முருக கடவுளின் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த விழாவில் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சஷ்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நடந்தது.

    கந்தசஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று பாலமுருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளான வருகிற 9-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    செய்யாறு டவுன் திருவோத்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான கற்பக விருட்ச காமதேனு வாகனத்திலும், 7-ந்தேதி சூரிய பிரபை, இரவில் சந்திர பிரபை வாகனத்திலும், 8-ந்தேதி பூத வாகனத்திலும், 9-ந்தேதி பெரிய நாக வாகனத்திலும், 10-ந் தேதி பகலில் அதிகார நந்தி வாகனத்திலும், இரவில் பெரிய ரிஷப வாகனத்திலும் வேதபுரீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று முன்தினம் காலை 63 நாயன்மார்கள் வீதி உலாவும், பகலில் சந்திரசேகர வாகனத் தில் சாமி வீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவத் துடன் திருக்கல்யாண வைபவமும் யானை வாகன சேவையும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர், விழா குழுவினர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் வேதபுரீஸ்வரரும், 3-வது தேரில் பாலகுஜாம்பிகையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் தேர்கள் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு வழியாக சென்று கோவில் வெளிபிரகாரத்தினை சுற்றி வந்து குமரன் தெரு, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

    இன்று (புதன்கிழமை) பகலில் சந்திரசேகர சாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகனத்திலும், நாளை நந்தி வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    15-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலை தீர்த்த வாரியும், கொடி இறக்குத லுடன் ராவணேஸ்வர திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப் பாடுவுடன் பிரம் மோற்சவ விழா நிறைவடை கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் விழா குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகார தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட நீதிபதி கருப்பையா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் தேர் வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அறநிலையத்துறை மராமத்து என்ஜினீயர் ராஜ்குமார், நாகராஜா கோவில் மேலாளர் ரமேஷ், அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நாஞ்சில் சந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் மதியம் 2 மணிக்கு கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    நாகராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகாரத் தலங்களில் இந்த தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைத் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் காலையில் கொடியேற்றம், மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தேரை வடம்தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தேர் நாலு ரத வீதிகளையும் சுற்றி வரும். காலை 9.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெறும்.

    10-ம் நாள் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 
    கேரளா மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    கேரள மாநிலம் ஹரிப்பாடு, மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு இந்த விழா மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் விழாவாக விளங்கியது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலில் ‘உருளி கவிழ்த்தல்‘ வழிபாடு நடத்தினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மேலும், இங்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடத்தினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாழ்ந்த இந்த கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா, மகா தீப காட்சிகள், மோகினியாட்டம் போன்றவை நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) நாகராஜாவிற்கும், சர்ப்பயக்‌ஷியம்மாவுக்கும் திருவாபரணம் சார்த்தி நிவேத்யம் நடத்தப்படும். விழா இறுதி நாளான நாளை மறுநாள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில், சங்கீத கச்சேரி, திருவாதிரைக்களி போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    ×