search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நாகதோஷ பரிகாரத்தலம்: நாகர்கோவில் நாகராஜா கோவில்
    X

    நாகதோஷ பரிகாரத்தலம்: நாகர்கோவில் நாகராஜா கோவில்

    • நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.

    நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.

    பரிகாரத்தலம்

    நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.

    குழந்தை பாக்கியம்

    கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

    மன்னர் நோய் நீங்கியது

    இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.

    அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.

    Next Story
    ×