search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs disqualification case"

    தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAs
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. எனவே, வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக இன்னும் சில காலம் ஆகும்.

    இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்,  சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார். தனது தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து, அதன்மூலம் பொதுமக்களும் பயன் அடைவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

    இது தங்க தமிழ்ச் செல்வனின் தனிப்பட்ட விருப்பம் என்றும், மற்ற 17 எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்): தங்கதமிழ்ச்செல்வன் முடிவுக்கு டி.டி.வி. தினகரன் என்ன கருத்து கூறியிருக்கிறாரோ அதுதான் எனது கருத்து. புதுச்சேரி சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும் இருப்பது நீதித்துறை மாண்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்களது பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்): தகுதி நீக்கம் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த வழக்கில் புதுவைக்கு ஒரு விதமாகவும், தமிழகத்துக்கு ஒரு விதமாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

    புதுவையில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்கி றார்கள். தமிழகத்தில் செல் லாது என்கிறார்கள். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவரம் தேர்தல் ஆணையம் நிலையில் இருக்கும்போது நாங்கள் யார்பக்கம் இருப்பது என்பது எங்களது உரிமை.

    தமிழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எங்கள் மீதான வழக்கை மேலும் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை. இதன் மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்துவிட்டது.

    பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி): சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற தங்கதமிழ்செல்வன் முடிவு எடுத்திருப்பது குறித்து அவர் அளித்த பேட்டியை டி.வி.யில் பார்த்தேன்.

    இதுதொடர்பாக அவரிடமும், எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனிடமும் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் பேசிய பிறகு இதுபற்றிய கருத்தை தெரிவிப்பேன். என்றாலும் எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவோம். எல்லா எம்.எல்.ஏ.க்களையும் கலந்து பேசிதான் அவர் முடிவு எடுப்பார்.

    பாலசுப்பிரமணி (ஆம்பூர்): எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சம்மந்தமாக நான் தனியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை நடவடிக்கை எடுக்கும் டி.டி.வி.தினகரன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து.

    ஆர்.ஆர். முருகன் (அரூர்):  சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவாகும். நான் ராஜினாமா செய்யமாட்டேன். மக்கள் நீதிமன்றத்தை நம்புவது போல நானும் நீதிமன்றத்தை நம்புகிறேன்.

    எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டப்படி போராடி வெற்றி பெறுவோம். எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்): தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. 18 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கூறினோம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்களும் ஆளுங்கட்சி அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறோம். எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கட்டும் அதற்கு பிறகு முடிவு செய்வோம். கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் வைத்திருக்கிறார்கள் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் நாடகம்.

    டி.டி.வி.தினகரன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. சில நேரங்களில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். இது ஒட்டுமொத்த 18 எம்.எல்.ஏ.க்கள் கருத்தாக ஏற்கமுடியாது.

    நீதிதுறை மேல் நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 18 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். #18MLAs
    முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும் என்று ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். #Eswaran #18MLAsCase
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிப்பதற்கு பதில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிப்பதே சரியானதாக இருக்கும்.

    ஏன் என்றால் நேற்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக வரும் காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எல்.எல்.ஏ.க்களும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது? என்பது தெரிந்து விடும்.

    நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் திடீரென காலா படத்தில் நடித்து முடித்தார். இப்போது மற்றொரு புது படத்தில் நடிக்க சென்று விட்டார். இன்னும் 2 மாதம் கழித்து தான் வருவார்.

    அதே போன்று நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினார். அவ்வப்போது அறிக்கை, டுவிட்டர் மூலம் கருத்துகளை கூறி வந்தார். தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார். இவ்வாறு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளனர். மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நடிகர்கள் ரஜினியையும், கமல்ஹாசனையையும் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #18MLAsCase

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புடன் பா.ஜ.க.வை தொடர்பு படுத்தி பேசுவதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?

    காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

    மத்திய அரசு திட்டங்களில் முக்கியமானது கருப்பு பணம் ஒழிப்பு. ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னொரு மகத்தான சாதனை ஆதார் இணைப்பு திட்டம். சாதாரண மக்களுக்கு கூட மானிய தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறி உள்ளனர். இதற்கும் பா.ஜனதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?

    நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் தமிழக சட்டசபை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. #MLAsDisqualification #TNAssembly
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

    இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    வேளாண்மை, கைத்தறி துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் சட்டசபையில் இன்று நடந்து கொண்டிருந்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பகல் 1.35 மணிக்கு சட்டசபை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தீர்ப்பு வெளியான நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து வெளியே சென்றனர்.

    தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி அறிவித்த தீர்ப்பு அதிமுக உறுப்பினர்களின் காதுக்கு எட்டியதும் மேஜையை தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஆனால், தகுதி நீக்கம் செல்லாது என இரண்டாவது நீதிபதி சுந்தர் அறிவித்த தீர்ப்பு உறுப்பினர்களை எட்டியதும் அந்த ஆரவாரம் அப்படியே அடங்கியது.

    மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டுள்ளதால், இப்போதைக்கு ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 
    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualification
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

    இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கப்படுகிறது. 50 சதவிகித வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் 100 சதவிகித வெற்றி கிடைக்கும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் தான் உள்ளனர். அவர்களின் முடிவே எனது முடிவு. மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது. தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 

    இவ்வாறு கூறினார். சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இருந்த தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், சபாநாயகரின் தகுதி நீக்க முடிவுக்கு ஆதரவாக நீதிபதிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மூன்றாவது நீதிபதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இரண்டு மாதங்களில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது என்றார்.
    ×