search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Me Too"

    நடிகர் அர்ஜுன் மீது கொடுத்த பாலியல் புகாரால் நடிகை ஸ்ருதியின் ரகசியம் வெளியாகி இருக்கிறது. #Arjun #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.

    ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசியத்தை வெளியிட வேண்டியதாகிவிட்டது.

    பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானால் வாய்ப்புகள் குறைந்துவிடும். வாய்ப்புகளுக்காக ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

    சுருதி பொய் சொன்னது வெளிப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் சுருதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரியருக்காக பொய் சொன்னவரை இந்த வி‌ஷயத்தில் எப்படி நம்புவது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
    ராஜாவுக்கு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன், மீடூ பிரச்சனை இரண்டு பணக்காரர்கள் சம்மந்தப்பட்டது என்று கூறியுள்ளார். #MeToo
    மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று சினிமா விழாவில் கரு.பழனியப்பன் பேசினார்.

    இது பற்றிய விவரம் வருமாறு, அக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் 'ராஜாவுக்கு ராஜா'. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

    இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். 



    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார். 

    விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது" என்றார்.

    விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
    பிரபல இசையமைப்பாளர் இமான், தவறு செய்தவர்கள் தான் மீடூ விசயத்தில் பயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். #Imman #MeToo
    சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை மீடூ இயக்கம் மூலம் பகிரங்கப்படுத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டதற்கு “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது. திரைத்துறை ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. ஒரு சில துறைகளில் நடக்கும் போது அது சம்மந்தப்பட்டவர்களோடு முடிந்துவிடுகிறது.

    திரைத்துறை என்று வரும் போது அது எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு பூதக்கண்ணாடி போட்டு, ஊடகம் மூலம் எல்லோரிடமும் சொல்கிறோம். அதனால் பூதாகரமாக பார்க்கப்படுகிறது.

    ஒரு மனிதனாக நாம் சரியாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அது சரியாக இல்லாத போது வருகிற குழப்பங்கள்தான் இதெல்லாம். என்னதான் மற்றவர்கள் மீது விரல் நீட்டி காட்டினாலும், மீதமிருக்கிற மூன்று விரல் நம்மை நோக்கிப் பாய்கிறது.

    எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. தவறு செய்தவர்கள்தான் எல்லா வி‌ஷயத்திற்கும் அஞ்ச வேண்டும். தவறு செய்யாமல் உண்மையாக இருப்பவர்களுக்கு மீ டூ என எந்த வி‌ஷயம் வந்தாலும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தர்மம் எப்போதும் வெல்லும். யார் பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்குண்டான சரியான விடை கிடைக்கும் என நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
    மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பாலியலுக்கு பெண்ணை அழைப்பதில் தவறில்லை என்று நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார். #Marimuthu #MeToo
    ‘பரியேறும் பெருமாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் ‘மீ டூ’ விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டி பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு பெண்ணை அறைக்கு வா என்று கூப்பிட்டு இருக்கிறார். ஆண் தானே அவர். இதில் என்ன தப்பு இருக்கிறது?. கூப்பிடட்டும். உனக்கு விருப்பம் இருந்தால் போ, இல்லை என்றால் பத்திரிகையிடம் சொல்கிறார், சொல்லிவிட்டு போ. ஒரு ஆண் தானே அவர்.

    அவருக்கும் ஆர்மோன்ஸ் இருக்கிறதல்லவா? ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா?. அதனால் தான் கூப்பிட்டு இருக்கிறார். அந்த பெண் வெளியே சொல்லியிருக்கிறாள். இதை கவிஞர் தாங்கி தான் ஆக வேண்டும். அதன் உண்மை நிலையை தேடி நான் போக விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் கழித்து அது மறந்துவிடும். வேறு பிரச்சினை வந்துவிடும்.

    இந்த வி‌ஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பெண்ணை தானே அறைக்கு வா என்று கூப்பிட்டார்?. ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம்.

    காரில் செல்லும்போது ஒரு நாய் குறுக்கே வருகிறது. டக்கென்று பிரேக் போடும்போது பின்னால் வந்த சைக்கிள் காரன் இடித்து விட்டான். அவனுக்கு ஒரு சாரி சொல்லிவிட்டு நாய்க்கு ஒரு சாரி சொல்லிவிட்டு செல்வது போன்று தான் இந்த சம்பவம். இது ஒரு சின்ன தடுமாற்றம், அவ்வளவு தான்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    அவரது பேச்சு திரை உலகில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    மாரிமுத்துவின் பேச்சு தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ’இந்த அசிங்கம் புடிச்சவர் பரியேறும் பெருமாள்ல கெட்டவனா நல்லா நடிச்சார்னு நினைச்சேன். அவனே தானா நீ? சீ...” என்று பதிவிட்டுள்ளார்.
    லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். #TanushreeDutta #RakhiSawant
    தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

    இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.



    மேலும் ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.

    இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.
    தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். #Arjun #ShrutiHariharan
    அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’.  இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார்.  இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.

    ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.



    இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
    அறியாத வயதில் பள்ளி படிக்கும் போது, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம்திறந்த சுனைனா, சம்பந்தபட்டவரை சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும் என்று கூறினார். #MeToo #Sunanina
    காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.



    அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’

    என்று சுனைனா கூறினார். #MeToo #Sunanina

    சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். #MeToo #Mumtaj
    மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து.

    ‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் உருவாகிற சினிமாவில் தனியே ஏன் பேசவேண்டும்? என்று சிந்திக்கவேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

    சில தருணங்களில் சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். ‘எதுக்கும் இதைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொள். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப் பொடியைத் தூவிடு’ன்னு கொடுத்திருக்காங்க. அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை’ என்றார்.
    முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா, மீடூ குறித்த கேள்விக்கு கடின உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை என்று கூறியிருக்கிறார். #VadaChennai #MeToo
    வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன்.

    தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல.

    வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.



    நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான்’ என்று கூறியிருக்கிறார்.
    விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், மீடூ விவகாரத்தில் ஹீரோக்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo #ShraddhaSrinath
    நிபுணன் திரைப்பட படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் மீடூ இயக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து கன்னடத்தில் யூடர்ன், தமிழில் விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுருதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “உனக்கு நேர்ந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். பணியிடத்தில் யாருமே அசவுகரியமாக உணரக்கூடாது.

    அதேபோல் அடுத்தவர்களை இம்சிக்கும் இடத்திலும் யாருமே இருக்ககூடாது. ஒரு பெண் ஒரு நட்சத்திர நடிகருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளியே பகிர்ந்து கொள்கிறார். இணைய உலகமே அவரை வாட்டி எடுக்கிறது.

    போதாதற்கு கொலை மிரட்டல்களும், விளம்பரத்துக்கான புகார் என்ற வசவுகளும் சேர்ந்து கொள்கின்றன. திரையில் எனது தங்கையை காப்பேன், எனது தாயை பேணுவேன் என்றெல்லாம் சூளுரைத்து வில்லன்களை அடித்து துவைத்து, லாரியைக்கூட பறக்கவிட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.



    நமது சூப்பர் ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
    அந்த எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Priyamani #MeToo
    பருத்தி வீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி. இவரிடம் சமீபத்தில் அதிகரித்து வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் பற்றி கேட்டபோது, மீ டூ வி‌ஷயத்தில் பெண்கள் தங்களுக்கான நியாயத்துக்காக போராடுகின்றனர்.

    எதுவும் நடக்காமலே நடந்ததாக எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். அதற்கான அவசியமும் இல்லை. சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் பேசுவதால், சினிமாவில் மட்டுமே இதெல்லாம் நடப்பதாக அர்த்தமில்லை. பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் பாதுகாப்பு குறைவுதான். 



    இதைச் சொல்வதற்கு அசிங்கமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தச் சூழலுக்குள்ளே பெண் குழந்தைகளை வளர்ப்பதுதான் இன்றைய பெற்றோருக்கான சவால். நான் சினிமாவில் கிளாமராக வருகிறேன் என்றால், அது என் தொழில். அதற்காக நிஜத்திலும் அப்படியே இருப்பேன் என்ற எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன். எனக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டால், நிச்சயம் என் கணவரின் உதவியுடன் எல்லோர் முன்னிலையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என கூறியிருக்கிறார்.
    மீடூ இயக்கம் மூலம் பல முக்கிய பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சிக்கி வரும் நிலையில், சிம்புவும் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #MeToo
    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    சில தினங்களாக நடிகர், இயக்குனர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. தற்போது சிம்பு இந்த சர்ச்சையில் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

    தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஹீரோயினாகவும் பின்னர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர் லேகா வாஷிங்டன். ஜெயம்கொண்டான், வ குவாட்டர் கட்டிங் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சிம்புவுடன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் நின்று போனது.



    லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கெட்டவன்" மீடூ என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் சிம்பு என்று கூறி, சிம்புடன் லேகா வாஷிங்டன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்கள். இதனால், மீடூ சர்ச்சையில் சிம்பு சிக்குவதாக பலரும் கூறி வருகிறார்கள்.


    ×