search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord"

    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
    • ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்

    படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    • திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.
    • இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் ஆலயம்-அருவம் ,உருவம் மற்றும் அருவுருவமாய் விளங்கும் இறைவன்

    திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.

    இங்கு ஆதி பிரமனுக்குப் படைப்புத் தொழிலைத் தொடங்க அனுமதித்த ஆதிபுரீஸ்வரர் அக்னிவடிவில் அருவ நிலையில் இருக்கிறார்.

    இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.

    நந்தி தேவருக்காக சிவபெருமான் அன்னையை தன் அருகில் அமர்த்தி நடனம் புரிந்த காட்சி தந்த தியாகராஜர் உருவநிலை கொண்டு அருளாட்சி புரிகிறார்.

    வாசுகி என்ற சர்ப்பம் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று பூசித்த சுயம்பு வடிவான லிங்கத்தில் அருவுருவ நிலையில் நகருணை புரிகிறார்.

    இவ்வாறாக திருவொற்றியூரில் இறைவன் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறார்.

    • இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

    திருவொற்றியூர் கோவில்-நந்தி தீர்த்தம்

    இந்த ஆலயத்தின் உள்ளே இருப்பது நந்தி தீர்த்தம் என்றும் வெளியே இருப்பது பிரும்ம தீர்த்தக் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மதுரையையும், கோவலனையும் இழந்து கண்ணகி சினத்துடன் வந்து இறைவனிடம் தாகம் தணிய நீர் கேட்டவுடன் சிவனால் அருந்தச் சொன்ன திருக்குளமும் இதுதான்.

    இந்த ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனாக கண்ணகி புற்றிடம் கொண்ட ஈசனுக்கு வடக்கே பளபளப்புடன் இருக்கும் ஆதி லிங்கத்தைத் தரிசிப்பதைக் காணலாம்.

    கார்த்திகை பவுர்ணமிக்கு அடுத்த இரண்டு நாட்கள் புற்றில் சாற்றிய கவசத்தினை அகற்றி விடுவார்கள்.

    அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

    சுவாமிக்கு ஆதிபுரீஸ்வரர், மாணிக்கத் தியாகர், தியாகேஸர், எழுத்தறியும் பெருமான் என்று பல பெயர்கள் பல உண்டு.

    ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத் தியாகர் என்ற பெயர் வந்தது.

    அம்பாள் வடிவுடையம்மன், வடிவாம்பிகை என்ற பெயர்களுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

    இங்கு விநாயகர், சுப்பிரமணியர், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், நால்வர் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்), சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

    பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, வசந்தோற்சவம் மற்றும் மாசில மா பவுர்ணமி தீர்க்க விழாவையட்டி 10 நாட்கள் விழா நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் மகிழடி சேவை பிரசித்தி பெற்றதாகும்.

    பவுர்ணமி நாளன்று மேலூர் அம்பாளையும், ஒற்றியூர் வடிவாம்பிகையையும், திருமுல்லைவாயில் அம்பாளையும் தரிசித்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

    சுக்கிர தசை, புக்தி நடைபெறுபவர்கள்இங்கு வழிபாடு செய்தால் மேலும் வளம் பெறலாம்.

    சுக்கிர தோஷமுள்ளவர்கள் ப்ரீதி செய்து கொள்ளலாம்.

    • ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.
    • இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    திருவொற்றியூர் கோவில்-படம் பக்க நாதர்

    ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.

    இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களைப் பெற்றான்.

    அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தானப் பெயரும் உண்டு.

    இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.

    இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.

    • பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.
    • பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    திருவொற்றியூருக்கு வாருங்கள்

    சென்னையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது.

    பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.

    அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்ற புகழ் கொண்டது இத்தலம்.

    பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும்.

    கலையழகும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது.

    சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது.

    "ஒற்றியூர் தொழ தொல்வினையும் ஓயும்" என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்புடைய திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் ஈசனை வழிபட்டு புண்ணியத்தையும் பெற்று வரலாம்.

    அதற்கு உங்களுக்கு உதவும் வகையில் மாலைமலர் இந்த தொகுப்பை தருகிறது.

    இதில் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பழமை சிறப்பு, ஆலய அமைப்பு சிறப்பு, சன்னதிகள் சிறப்பு மற்றும் வழிபாட்டு பலன்களை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    படித்து, வழிபட்டு அருள்மிகு தியாகராஜரின் அருளையும், வடிவுடை அம்மனின் கருணையையும் பெற வாழ்த்துக்கள்.

    • இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.
    • இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெரியநாயகி அம்பிகை.

    சென்னையில் சூரிய கோவில்

    சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்றே சிறப்புத் தலம் உள்ளது.

    இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

    போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம்.

    அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார்.

    இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை.

    இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தபடி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.

    தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம்.

    இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன.

    சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.

    கோதுமை பொருட்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

    இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    உடலில் அழகு உண்டாகும்.

    அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

    ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர்.

    சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும்.

    இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.

    சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபாட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது.

    சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.

    • உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.
    • இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    நோயற்ற வாழ்வு தரும் சூரிய வழிபாடு

    தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருஷத்தில், ஆறுமாதம் பகல், ஆறு மாதம் இரவு.

    உத்தராயணம் என்னும் தைமாதம் முதல் ஆனி மாதம் முடிய ஆறுமாத காலம் தேவர்களுக்கு பகல்.

    ஆகவே இந்த மாதங்களில் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் வீட்டில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்தவும் மிகச் சிறந்தகாலமாக கருதப்படுகிறது.

    உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.

    அனைத்து தெய்வங்களையும் சூர்ய மண்டலத்தின் நடுவில் தியானம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்ரம்.

    இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    ×