search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala southwest monsoon"

    கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் ரூ.700 கோடி நிதியை ஏற்க மறுத்தால் நீங்கள் தாருங்கள் என்று மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய வரலாறு காணாத மழை 11 நாட்கள் இடைவிடாமல் பெய்தது. தொடர் மழையால் கேரளம் வெள்ளத்தில் மிதந்தது. 370 பேர் பலியானார்கள். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 13 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    கேரளாவை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ.20 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டது.

    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வெள்ள நிவாரண பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிதி அளித்தார்.

    மத்திய அரசு கேரள மழை வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது.

    கேரள மழை வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கியது. இதுபோல ஐக்கிய அரபு அமீரகமும் கேரள வெள்ள நிவாரண பணிக்கு ரூ.700 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தது. இதற்கு கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளும் இதனை பாராட்டின.

    கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளிக்கும் ரூ.700 கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு, கேரளாவின் வெள்ள நிவாரண பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் கூறி உள்ளது.

    இதற்கு மத்திய அரசு, அளித்த விளக்கத்தில் இதற்கு முன்பு 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது, வெளிநாட்டு நிதி உதவிகள் ஏற்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


    முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்போரில் 80 சதவீதம் பேர் கேரளாவில் இருந்து சென்றவர்கள். எனவே கேரள மக்களுக்கு வளைகுடா நாடு இன்னொரு வீடு ஆகும். எனவேதான் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக கூறியது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிதி கேரளாவின் மறு கட்டமைப்புக்கு உதவியாக இருக்கும். இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.

    கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசிடம் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் அவர்கள் ரூ.600 கோடி மட்டுமே தந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அளித்த ரூ.700 கோடி நிதியை ஏன் தடுக்க வேண்டும்.

    தேசிய பேரிடர் நிர்வாகம் தொடர்பான அறிவிப்பு பகுதி-9-ல் தேசிய பேரிடர் ஏற்படும்போது வெளிநாடுகள் அளிக்கும் நிவாரண நிதிகளை அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இப்போது ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அதனை மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேரள முன்னாள் முதல்- மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டியும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிதி உதவியை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு தடையாக இருப்பவற்றை அகற்ற வேண்டுமென்று கூறி உள்ளார்.

    கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிவாரண நிதியை பெறவேண்டும் என்று கூறி உள்ளனர். #KeralaFloods #KeralaFloodRelief
    கேரளாவில் முதல்வர் தலைமையில் கூடிய மந்திரி சபையில், வெள்ளச் சேதங்கள், மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2600 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை மாநிலத்தை நிர்மூலமாக்கியது.

    மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.

    இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

    கேரளாவை மறு கட்டமைத்து சீரமைக்க மத்திய அரசு உடனடி உதவிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்தது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடி நிவாரண நிதி உடனே வழங்கப்படும் என கூறினார்.

    அதன் பிறகு வந்த பிரதமர் மோடி கேரளாவின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்து கூடுதலாக ரூ.500 கோடி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த ரூ.600 கோடியும் நேற்று மத்திய அரசு வழங்கியது.

    இதற்கிடையே கேரள மந்திரி சபை கூட்டம் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அவசரமாக கூடியது. இதில், கேரளாவின் வெள்ளச்சேதங்கள், மறு கட்டமைப்பு, சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி வழங்க கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    அதன்படி, முதல் கட்டமாக கேரளாவிற்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டது. இந்த பணம் கிடைத்தால் கேரளம் விரைவில் வெள்ளச்சேத பாதிப்பில் இருந்து மீண்டு வரும் எனவும், இந்த நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டவும், மந்திரி சபை முடிவு செய்தது. வருகிற 30-ந்தேதி இந்த கூட்டம் நடக்கிறது. அதில், மந்திரிசபையில் எடுத்த முடிவுகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    இதற்கிடையே கேரள வெள்ளப்பாதிப்பை மத்திய அரசு தீவிர இயற்கை பேரிடர் ஆக அறிவித்துள்ளதால் பல வெளிநாடுகளும் கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளன.

    வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு வழியாகவே வாங்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கிடையே இந்திய ரெயில்வே துறையும் கேரள வெள்ள நிவாரணப்பணிகளுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ரூ.200 கோடி நிதி திரட்ட ரெயில்வே இலாகா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    ரெயில்வேயில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களும் அவர்களின் ஒருநாள் ஊதியத்தை வெள்ள நிவாரணப்பணிக்கு வழங்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaFloods
    கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்டியலில் ஒரு வருடம் சேமித்த ரூ.6,700 பணத்தை பள்ளி மாணவர்கள் வழங்கினர்.
    திருச்சி:

    கேரளாவில் பெய்த கன மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளதாக கேரளா அரசு தெரிவித்தது.

    இதனால் கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி அடுத்த மாத்தூரில் கிராம பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் கல்லூரிகள் பள்ளிகள் ஊர் முக்கியஸ்தர்கள் தாமாக முன் வந்து நிவாரண பொருட்களை மாத்தூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வழங்கி வந்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக ஆய்வாலர் சத்தியப்பிரியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில், பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களான 100 மூட்டை அரிசி, 50 மூட்டை கோதுமை, 10 பெட்டி பிஸ்கட்டுகள், 2 பெட்டி டீ சர்ட்டுகள், 50 படுக்கை விரிப்புகள், 100 கைலிகள், 100 வேட்டி- சேலைகள், சமையல் எண்ணைகள் 10 பண்டல் குளிர்பான வகைகள், மருந்து பொருட்கள் 50 பெட்டிகளை வழங்கினர்.

    இதில் மண்டையூர் ஊராட்சியை சேர்ந்த பள்ளி மாணவர்களான அட்சிதா, 1-ம் வகுப்பு மாணவனான ஜெகதீப், அக்கா-தம்பிகளான இருவரும் தாங்கள் உண்டியலில் ஒரு வருடம் சேமித்த காசுகளை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நண்பர்களுடன் கொண்டு வந்து உண்டியலை வழங்கினர்.

    இவரின் உண்டியலிலும் மொத்தம் ரூ.6 ஆயிரத்து 700 இருந்தது. அதனை பெற்றுக்கொண்ட மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ்வரன மற்றும் பொதுமக்கள் மாணவர்களை பாராட்டினர். பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளது.

    அவை அனைத்தையும் 2 மினி லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர். மாத்தூர் ஊராட்சியில் நிவாரண பொருட்களை வழங்கிய பொதுமக்களை கலெக்டர் கணேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குளத்தூர் வட்டாச்சியர் பாராட்டினார்.
    கேரள மாநிலத்தில் மலை கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை ஹெலிகாப்டரில் சென்று விமானப்படையினர் மீட்டனர்.
    பாலக்காடு:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி மலை கிராமம். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெல்லியாம்பதி செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

    அங்கு வசிக்கும் 3,500 பேர் பாதிக்கப்பட்டனர். 6 நாட்களுக்கும் மேல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ராணுவத்தினரும், மருத்துவ குழுவினரும் 26 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்று கிராமத்தினருக்கு உதவி வந்தனர்.

    அங்கு வசித்து வருபவர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நெல்லியாம்பதிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்க விமானப்படையினர் முயற்சி செய்தனர். ஆனால் மோசமான கால நிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    நேற்று மழை குறைந்ததை தொடர்ந்து நெல்லியாம்பதி மலை கிராமத்துக்கு 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. அங்கு சென்ற விமானப்படையினர், மருத்துவ குழுவினர் உதவி தேவைப்பட்ட 12 பேரை மீட்டு வந்து பாலக்காடு, நெம்மாரா மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். நெல்லியாம்பதியில் 3,500-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது.
    புதுச்சேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்த ரூ. 10 ஆயிரம் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியாக வழங்கியுள்ளார். #KeralaFloodRelief
    புதுச்சேரி:

    கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கேரள மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவி வழங்க நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

    புதுவை அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி கேரள நிவாரணத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை வழங்கி உள்ளனர். கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக புதுவை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் புதுவை மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய அம்பி-ஸ்ரீவள்ளி தம்பதிகளின் மகன் ஜெயசூர்யா (வயது 16). செவித்திறன் குறைவான மாற்றுத்திறனாளியான இவர் தற்போது காது கேட்கும் கருவி பயன்படுத்தி வருகிறார்.

    புதுவை புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஜெயசூர்யாவுக்கு அரசு மாதந்தோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதியில் இருந்து புதிதாக காது கேட்கும் கருவி வாங்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தார்.

    இதுகுறித்து ஜெயசூர்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாணவர் ஜெயசூர்யா நேற்று மாலை தனது பெற்றோருடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    ஜெயசூர்யாவின் தந்தை ஜெய அம்பி புதுவை கோர்ட்டில் இளநிலை எழுத்தராக உள்ளார். தாயார் ஸ்ரீவள்ளி வக்கீலாக உள்ளார்.
    வேலூர் மாவட்ட போலீசார் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    வேலூர்:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் பல லட்சம் பேர் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். கேரள மாநில மக்களின் துயர் துடைக்க வேலூர் மாவட்டத்தில் பல அமைப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.

    இதனை கலெக்டர் ராமன், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து 2 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    நிவாரண பொருட்களுடன் 2 போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பொருட்கள் சென்று சேர்ந்த பிறகு, போலீசார் வேலூருக்கு திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பிளஸ்-1 மாணவி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். #Keralasouthwestmonsoon #Keralarain

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் மாணவி ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்தார். இது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

    கடிதத்தை படித்த முதல்-மந்திரி நெகிழ்ச்சியடைந்து பாராட்டினர். நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.

    மாணவி வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறினர்.

    கேரள மழை வெள்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு தேவ் ஆனந்த் பலியான சம்பவம் புதுவை போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Keralasouthwestmonsoon #Keralarain

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் கட்டுப்பாட்டு அறை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருபவர் தேவ் ஆனந்த் (வயது 44). இவர் கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள புதுவை பிராந்தியமானமாகி ஆகும். இவர், கடந்த 16-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரானமாகிக்கு புறப்பட்டு சென்றார்.

    மழை வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பஸ்சில் பாலக்காடு சென்றார். பின்னர் பஸ்சில் குடும்பத்தினரை அமர வைத்து விட்டு உணவு வாங்குவதற்காக தேவ் ஆனந்த் இறங்கி சென்றார்.

    ஆனால், வெகுநேர மாகியும் தேவ் ஆனந்த் வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மட்டும் மாகி சென்றனர். அதன் பிறகும் தேவ் ஆனந்த் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் இது பற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலக்காட்டில் ஒரு நீரோடை பாலத்தின் அடியில் தேவ் ஆனந்த் பிணமாக கிடந்தார். உணவு வாங்க சென்ற போது தேவ் ஆனந்த் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பாலக்காடு போலீசார் தேவ் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கேரள மழை வெள்ள நிவாரண நிதிக்கு புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். #Keralasouthwestmonsoon #Keralarain

    புதுச்சேரி:

    கேரளாவில் கடந்த 9 நாட்களாக பெய்த கனமழை வெள்ளத்தால் அங்கு வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநில அரசு மற்றும் பிறமாநில அரசுகள் கேரளாவுக்கு நிவாரணநிதி அளித்து வருகிறது.

    இதற்கிடையே கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த வேண்டுகோளை ஏற்று புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். அதற்கான ஒப்புதல் கடிதத்தை புதுவையில் உள்ள அனைத்து அரசுஊழியர்கள் சங்க நிர்வாகிகள் இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து அளித்தனர்.

     

    இதுகுறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-


    எனது வேண்டுகோளை ஏற்று புதுவை அரசு ஊழியர்கள் கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை மனமுவந்து வழங்கி உள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இதுபோல் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்களும் ஒருநாள் சம்பளத்தை கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி உள்ளனர். இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.7 கோடி நிதியை கேரளாவுக்கு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    கடும் மழை, வெள்ளத்தால் கேரளாவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சங்கத் தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் ஆதிமூலம், பொருளாளர் மாடசாமி, துணை செயலாளர் ஆறுமுகநயினார், அமைப்பாளர் தமிழ்மணி ஆகியோர் கேரள மக்களுக்கு 25 குவிண்டால் அரிசியை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரராஜன், ஊராட்சி செயலாளர்கள் தேசிங்கராஜன், முத்துக்குமார், தங்கச்செல்வம், வல்லாள மகாராஜன், நடராஜன், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாக உறுப்பினர்கள் நாராயணன், மாடசாமி, ஜெயராமன், சுப்பிரமணியன், வெற்றி கருப்பன், மாடசாமி, நாகராஜன், பிரபு, காளிமுத்து உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    வெள்ளத்தில் பாதிப்படைந்த கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை தாராளமாக வழங்குங்கள் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் லதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரணம் வழங்கலாம்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிட ஏதுவாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரிடம் நிதியுதவி, உணவு தானியப் பொருட்கள், மருத்துவப்பொருட்கள் மற்றும் ஆடைகள் பெறப்படுகின்றன.

    கொடுக்கக்கூடிய நபர்கள் தாராளமாக முன்வந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேலும் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்: 9445008149 மற்றும் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட கலெக்டர் வினய், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வர்த்தகர் சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் பாலன், பொருளாளர் லியோபிரதீப், துணைத்தலைவர்கள் ஜி.சுந்தரராஜன், கே.ஏ.ஆர். மைதீன், நிர்வாகிகள் வெங்கடேசன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்.

    பொருட்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக உள்ளது. இதுவரை இம்மாவட்டத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனது சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். நிவாரண பொருட்கள் வழங்க உள்ளவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நிலக்கடலை வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையும், திண்டுக்கல் சாகர் மெடிக்கல் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் உதயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×