search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.6,700 உண்டியல் சேமிப்பினை வழங்கிய பள்ளி மாணவர்கள்
    X

    கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.6,700 உண்டியல் சேமிப்பினை வழங்கிய பள்ளி மாணவர்கள்

    கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்டியலில் ஒரு வருடம் சேமித்த ரூ.6,700 பணத்தை பள்ளி மாணவர்கள் வழங்கினர்.
    திருச்சி:

    கேரளாவில் பெய்த கன மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளதாக கேரளா அரசு தெரிவித்தது.

    இதனால் கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி அடுத்த மாத்தூரில் கிராம பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் கல்லூரிகள் பள்ளிகள் ஊர் முக்கியஸ்தர்கள் தாமாக முன் வந்து நிவாரண பொருட்களை மாத்தூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வழங்கி வந்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக ஆய்வாலர் சத்தியப்பிரியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில், பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களான 100 மூட்டை அரிசி, 50 மூட்டை கோதுமை, 10 பெட்டி பிஸ்கட்டுகள், 2 பெட்டி டீ சர்ட்டுகள், 50 படுக்கை விரிப்புகள், 100 கைலிகள், 100 வேட்டி- சேலைகள், சமையல் எண்ணைகள் 10 பண்டல் குளிர்பான வகைகள், மருந்து பொருட்கள் 50 பெட்டிகளை வழங்கினர்.

    இதில் மண்டையூர் ஊராட்சியை சேர்ந்த பள்ளி மாணவர்களான அட்சிதா, 1-ம் வகுப்பு மாணவனான ஜெகதீப், அக்கா-தம்பிகளான இருவரும் தாங்கள் உண்டியலில் ஒரு வருடம் சேமித்த காசுகளை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நண்பர்களுடன் கொண்டு வந்து உண்டியலை வழங்கினர்.

    இவரின் உண்டியலிலும் மொத்தம் ரூ.6 ஆயிரத்து 700 இருந்தது. அதனை பெற்றுக்கொண்ட மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ்வரன மற்றும் பொதுமக்கள் மாணவர்களை பாராட்டினர். பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளது.

    அவை அனைத்தையும் 2 மினி லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர். மாத்தூர் ஊராட்சியில் நிவாரண பொருட்களை வழங்கிய பொதுமக்களை கலெக்டர் கணேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குளத்தூர் வட்டாச்சியர் பாராட்டினார்.
    Next Story
    ×