search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabini Dam"

    கர்நாடகத்தில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    சேலம்:

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

    மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.

    கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

    இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்ப 15 அடியே தேவைப்படுகிறது. 2 அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டப்பட்டது.

    மேலும் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 1,414 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 ஆயிரத்து 383 கனஅடியாகவும், பகல் 12 மணிக்கு 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை 18 ஆயிரத்து 184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் நேற்று முன்தினம் 57.11 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 58.23 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் 60.3 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. கபினி அணைக்கு நேற்று 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கபினி அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டு, 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வேகமாக உயர்ந்த நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது.

    இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூரு மாவட்டத்தில் கபினி ஆற்றின் இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கபினி அணைக்கு நேற்று காலை 21 ஆயிரத்து 353 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.23 அடியாக இருந்தது. கேரளாவில் மழை தொடர்வதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து 20 ஆயிரத்து 83 கன அடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது.

    இதே போல கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று நீர்வரத்து 10 ஆயிரத்து 168 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 106.5 அடியாக இருந்ததால் அணையில் இருந்து நேற்று காலை 3482 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 2 அணைகளிலும் இருந்து மொத்தம் நேற்று 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் நேராக தமிழகத்தை நோக்கி வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றை கடந்து இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயரமாக வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 800 கன அடியாக குறைந்தது. அணையில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 1553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1414 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று நேற்று 57.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 57.11 அடியாக உயர்ந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு முதல் மேட்டூருக்கு மீண்டும் வரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இனிவரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கபினி அணையில் இருந்து மீண்டும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர்அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பின்னர் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று காலை முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை அணைக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.35 அடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மீண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3,272 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 56.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 56.91 அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 3500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1800 கன அடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்தாலும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.


    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    கபினி அணையின் நிர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 81 அடியை தாண்டியது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 23-ந் தேதி மதியம் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

    23-ந் தேதி காலையில் 1,299 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 18 ஆயிரத்து 428 கன அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இதற்கிடையே கபினி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 81 அடியாக இருந்தது. அணைக்கு 2440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.35 அடி யாக இருந்தது. அணைக்கு 5715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கர்நாடக பாசன தேவைக்காக 3464 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் படிப்படியாக சரிய வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்வதுடன் உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 13 ஆயிரத்து 694 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வரும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 53.04 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.71 கன அடியாக இருந்தது. பிற்பகல் 55 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது. #KabiniDam #KarnatakaGovernment
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை உள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடியாகும்.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையில் 80.70 அடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டாலும் கூட அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது.

    நஞ்சன் கூடு பகுதியில் 2 ஏரிகளுக்கும், குண்டல்பேட்டையில் 10 ஏரிகளுக்கும் கபினி அணை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர பெலசவாடி, கமரஹள்ளி ஏரிகளிலும் நீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்காக உள்ள நீரேற்று நிலையத்தில் உயர் கோபுர மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு இந்த 2 ஏரிகளிலும் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏரிகளில் கபினி அணை தண்ணீர் நிரப்பும் பணியை நிரஞ்சன் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். #KabiniDam #KarnatakaGovernment
    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 20-ந் தேதி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 21-ந் தேதி தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று காலை முதல் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 13 ஆயிரத்து 758 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.8 அடியாக இருந்தது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2961 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சனிக்கிழமையான இன்று விடுமுறை என்பதால் காலை முதலே ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து அளவிட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 618 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1299 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 50.59 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 50.68 அடியாக உயர்ந்தது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று பிற்பகல் முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Metturdam #Cauvery

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் நாளை காலை முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    நேற்று முன்தினம் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. இதனால் காலை முதல் நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.5 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,045 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து இன்று இரவு ஒகேனக்கலுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 8 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் நாளை காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உடலில் எண்ணெய் தேய்த்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 586 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2,618 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 50.32 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 50.59 அடியாக இருந்தது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    ஏற்கனவே கபினி அணையில் 83 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே மீதம் உள்ளது.

    நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று 2 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. இன்றும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
    கபினி அணையில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று 11 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 101.90 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.

    கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 81.08 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி கடந்த 14-ந்தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முதலில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த நாள் இந்த அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லை பகுதியை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.

    ஒகேனக்கலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மேட்டூர் அணைக்கு அடிபாலாறு வழியாக சீறிபாய்ந்து வரும் தண்ணீர்

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று காலை அடிபாலாறு பகுதிக்கு வந்து சேர்ந்தது. பிற்பகல் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. தொடக்கத்தில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு இன்று 9 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது.

    நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நீர்திறப்பு இன்று காலை 729 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

    நீர்வரத்து காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிக்கு மாற்றி சென்றனர்.

    காவிரி கரையில் விதைக்கப்பட்டிருந்த எள், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானிய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. #metturdam #cauveryriver #kabinidam
    கபினி அணையில் திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கன அடி காவிரி நீர் தமிழகம் வந்தது. இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்மழையால் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 36ஆயிரத்து 650 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 33 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 79.40 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் 1,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு 15ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இருபுறங்களையும் தொட்டபடி சீறி பாய்ந்து வருகிறது.

    இதையடுத்து கரையோரத்தில் உள்ள மைசூரு, ராம்நகர், கனகபுரா, சங்கம்மா, மேக்கேதாட்டு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி கரையோரம் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக வருகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 28ஆயிரத்து 96 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 31 ஆயிரத்து 37 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று 94.53 அடியாக இருந்தது. இன்று காலை இது 98.20 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 437 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேஅளவு நீர்வரத்து இருந்தால் இன்னும் 10 நாளில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 67.60 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேகமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

    ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 145கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 19ஆயிரத்து 242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35ஆயிரம் கனஅடி தண்ணீர், இன்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வரத் தொடங்கியது. நேற்று 1,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,300 கனஅடியாக அதிகரித்தது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த தண்ணீர் இன்று பிற்பகல் ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முதல் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    இன்று இரவு கபினி தண்ணீர், மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



    நாளை முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தால், தினமும் ஒரு அடி உயரும். தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப இன்னும் 26 அடி தேவைப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அந்த அணையும் நிரம்பி காவிரியில் உபரிநீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் மொத்தமாக தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரும்.

    கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி போதுமான தண்ணீர் இல்லாததால் அணை திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் டெல்டா பாசனம் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டும் கடந்த 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து, காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்குவதால், காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124.80 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 90.20 அடியாக உயர்ந்தது. இன்று இது 94.50 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 416 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாளை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவும், இன்னும் 10 நாட்களுக்குள் அணை முழுமையாக நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 487 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று அல்லது நாளை கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு பகல் 1 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மாலை 6 மணி முதல் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டன.

    கபினி அணைக்கு இன்று 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 35ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேராக தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நோக்கி சீறிபாய்ந்து வருகிறது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைய 48 மணிநேரமும், மேட்டூர் அணைக்கு வந்து சேர 60 முதல் 62 மணிநேரம் வரை ஆகும்.

    இதனால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு இந்த தண்ணீர் வந்து சேரும்.

    காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 1,100 கனஅடியாக குறைந்தது. நாளை இரவு 35ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் வரும்போது அங்குள்ள அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்ட இருப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். தொடர்ந்து 24 மணிநேரம் மேட்டூர் அணைக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ச்சியாக வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒருஅடி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிபாய்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும்.

    கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில், அந்த அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் ஒருசேர காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் குறுவை சாகுபடியை எதிர்நோக்கி காத்திருக்கும், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கர்நாடகா கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் வருகிற 19-ந்தேதி வரை மிக பலத்தமழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை கொட்ட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்புவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    ×