search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் மெயின் அருவியில் பொங்கி பாயும் புதுவெள்ளத்தை படத்தில் காணலாம்
    X
    ஒகேனக்கல் மெயின் அருவியில் பொங்கி பாயும் புதுவெள்ளத்தை படத்தில் காணலாம்

    கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தது - மேட்டூர் அணை நீர் மட்டம் உயர வாய்ப்பு

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 20-ந் தேதி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 21-ந் தேதி தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று காலை முதல் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 13 ஆயிரத்து 758 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.8 அடியாக இருந்தது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2961 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சனிக்கிழமையான இன்று விடுமுறை என்பதால் காலை முதலே ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து அளவிட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 618 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1299 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 50.59 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 50.68 அடியாக உயர்ந்தது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று பிற்பகல் முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Metturdam #Cauvery

    Next Story
    ×