search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் தமிழகம் வந்தது - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு
    X

    காவிரி நீர் தமிழகம் வந்தது - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு

    கபினி அணையில் திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கன அடி காவிரி நீர் தமிழகம் வந்தது. இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்மழையால் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 36ஆயிரத்து 650 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 33 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 79.40 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் 1,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு 15ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இருபுறங்களையும் தொட்டபடி சீறி பாய்ந்து வருகிறது.

    இதையடுத்து கரையோரத்தில் உள்ள மைசூரு, ராம்நகர், கனகபுரா, சங்கம்மா, மேக்கேதாட்டு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி கரையோரம் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக வருகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 28ஆயிரத்து 96 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 31 ஆயிரத்து 37 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று 94.53 அடியாக இருந்தது. இன்று காலை இது 98.20 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 437 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேஅளவு நீர்வரத்து இருந்தால் இன்னும் 10 நாளில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 67.60 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேகமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

    ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 145கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 19ஆயிரத்து 242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35ஆயிரம் கனஅடி தண்ணீர், இன்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வரத் தொடங்கியது. நேற்று 1,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,300 கனஅடியாக அதிகரித்தது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த தண்ணீர் இன்று பிற்பகல் ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முதல் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    இன்று இரவு கபினி தண்ணீர், மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



    நாளை முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தால், தினமும் ஒரு அடி உயரும். தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப இன்னும் 26 அடி தேவைப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அந்த அணையும் நிரம்பி காவிரியில் உபரிநீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் மொத்தமாக தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரும்.

    கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி போதுமான தண்ணீர் இல்லாததால் அணை திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் டெல்டா பாசனம் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டும் கடந்த 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து, காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    Next Story
    ×