search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Biden"

    • அதிபர், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்
    • நான் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார் பைடன்

    ஒருவரின் உடல்நலன் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மருத்துவர்கள் செய்யும் முதல்நிலை உடல் பரிசோதனைகள் "ஃபிசிக்கல்" (physical examination) எனப்படும்.

    நேற்று, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை (annual physical) செய்து கொண்டார்.

    "வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர்" (Walter Reed National Military Medical Centre) எனும் மருத்துவ மையத்தில் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.


    வழக்கமான மருத்துவர்களுடன் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கண், பற்கள், எலும்பு, தண்டுவடம், நரம்பு, இதயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், ஜோ பைடனை பரிசோதித்தனர்.

    ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அவரது பிரத்யேக மருத்துவரான டாக்டர். கெவின் ஒ'கொனார் (Dr. Kevin O'Connor) தனது குறிப்பை இணைத்துள்ளார்.

    அந்த குறிப்பில், "ஜோ பைடன் பூரண உடல்நலத்துடன் உள்ளார். அவரால் அவரது அனைத்து கடமைகளையும் எந்த சிக்கலோ, விதிவிலக்குகளோ அல்லது சிறப்பான உதவிகளோ இன்றி தானாகவே வழக்கமான முறையில் செய்ய முடியும். நரம்பு மண்டலம் அல்லது நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் ஏதும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. ஓய்விலும், செயலாற்றும் போதும் அவருக்கு எந்த விதமான உடல் நடுக்கங்களும் இல்லை" என டாக்டர். கெவின் பதிவிட்டுள்ளார்.

    தனது மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஜோ பைடன், "நான் மிகவும் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்ற வருடத்தை விட ஏதும் மாறி விடவில்லை. அனைத்தும் சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.

    ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனைகளுடன் அவர்களது மருத்துவர்கள் தரும் குறிப்பை பொதுவெளியில் அறிக்கையாக தருவது அமெரிக்க வெள்ளை மாளிகையால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபாகும்.

    அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
    • ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

    தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.


    இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.

    2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    • இஸ்ரேல், அமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் காசா மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    • காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் தேதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    • $430 பில்லியன் டாலர் கடனை பைடன் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் தடுத்தது
    • இதுவரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை பைடன் ரத்து செய்துள்ளார்

    அமெரிக்காவில் மாணவர்கள் கடன் $1.73 டிரில்லியன் என உள்ளது.

    கடந்த முறை அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் முக்கிய இடம் பிடித்தது.

    முதல் முறையாக அதிபரான ஜோ பைடன், சுமார் $430 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முயன்று போது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

    இதனையடுத்து, "மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம்" (Saving on a Valuable Education) எனும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

    இன்று, ஜோ பைடன் அரசின் கல்வி துறை, 1,53,000 மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

    இன்று தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை சுமார் $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    $12,000 அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை செலுத்தி வரும் மாணவர்களில், அதிபர் பைடன் கடந்த வருடம் கொண்டு வந்த "ஸேவ்" (SAVE) திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    "யாருக்கு மிக அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காணவும் நாங்கள் முயன்று வருகிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்" என இது குறித்து பேசிய கல்வி துறை செயலர் தெரிவித்தார்.

    பைடன் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராபினெட் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்
    • சுமார் 160 வருடங்களுக்கு பிறகு இந்த தொடர்பு வெளிவந்திருக்கிறது

    அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81).

    பைடனின் மூதாதையர்களில் ஒருவர் மோசஸ் ஜே. ராபினெட் (Moses J. Robinette). கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான அவர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார்.

    1864 மார்ச் 21 அன்று அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், ராபினெட்டுக்கு, ஜான் அலெக்சாண்டர் (John J. Alexander) எனும் சக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், ராபினெட் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள், சண்டையை நிறுத்தி, அலெக்சாண்டரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணுவ கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    தற்காப்புக்காக அலெக்சாண்டரை தாக்கியதாகவும், தாக்காமல் இருந்திருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார் என்றும் ராபினெட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    ஆனால், ராபினெட்டின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 2-வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது.

    ராபினெட், தன்னை விட மிக அதிக எடை மற்றும் வலிமையுடைய பலசாலி ஒருவருடன் சண்டையிட நேர்ந்ததால் தற்காப்பிற்காக கத்தியால் தாக்க நேரிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மருத்துவரான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறும் 3 ராணுவ அதிகாரிகள் ராபினெட்டுக்கு ஆதரவாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் கருணை மனு அளித்தனர்.

    இதனை ஏற்று கொண்ட அதிபர் ஆபிரகாம் லிங்கன், ராபினெட்டுக்கு மன்னிப்பு வழங்கினார்.

    சுமார் 160 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த தகவல் அமெரிக்க தேசிய ஆவண காப்பகத்திலிருந்து கிடைத்துள்ளது.

    அமெரிக்காவின் 16-வது அதிபருக்கும், தற்போதைய 46-வது அதிபருக்கும் உள்ள இந்த இணைப்பை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் அச்சத்தில் உள்ளதாக அஜய் தெரிவித்தார்
    • தாக்குதல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றது வெள்ளை மாளிகை

    கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில், அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்ச்சிகள் நடப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த ஜனவரியில் ஜியார்ஜியா மாநில லித்தொனியாவில், விவேக் சாய்னி எனும் மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    பிப்ரவரி மாத தொடக்கத்தில் சையத் மசாஹிர் அலி எனும் இந்தியாவை சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டார்.

    ஒகையோ மாநிலத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரி உயிரிழந்தார்.

    இந்திய அமெரிக்க சமூகத்திற்கான தலைவர் அஜய் ஜெயின் புடோரியா இது குறித்து தெரிவித்ததாவது:

    வெவ்வேறு சம்பவங்களில் பல இந்திய மாணவர்கள் உயிரிழப்பது, இந்தியர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது. கல்லூரிகளும், காவல்துறையும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்களினால் மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், இந்தியாவில் மிகுந்த மன வருத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அவர்களின் கவலையை போக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெயின் கூறினார்.

    இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:

    இனம், மதம், பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை அமெரிக்கா ஒரு போதும் சகித்து கொள்ளாது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார்.

    மாநில அரசுகளுடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இவ்வாறு கிர்பி தெரிவித்தார்.

    • டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
    • நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்

    உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு புதின் பதிலளித்ததாவது:

    இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.

    பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.

    இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.

    நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.

    பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.

    2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • 27 சதவீத வாக்காளர்கள் ஜோ பைடனை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்
    • 62 சதவீத வாக்காளர்கள் டிரம்பை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்

    2024 நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    தேர்தலையொட்டி பல்வேறு கேள்விகளுடன் மக்களை சந்தித்து கருத்து கணிப்புகளையும், புள்ளி விவரங்களையும் பல அமைப்புகள் தெரிவிக்கினறன.

    வேட்பாளர்களின் வயது குறித்து கருத்து கேட்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.

    அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், இருவருமே இப்பதவியில் அமர பொருத்தமற்றவர்கள் என கூறிய 59 சதவீதம் பேரும் இப்பட்டியலில் அடங்குவர்.

    27 சதவீத வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர ஜோ பைடனை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.

    62 சதவீத வாக்காளர்கள் அதிபராக பணியாற்ற டொனால்ட் டிரம்பை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.

    சில மாதங்களாகவே, 75 வயதை கடந்தும், உலகிலேயே நம்பர் 1 பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள இருவரின் அதிக வயதும், பல வாக்காளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2023 செப்டம்பர் மாதம், பைடனின் அதிக வயது காரணமாக அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என 74 சதவீதம் பேரும், 49 சதவீதம் பேர் டிரம்ப் தகுதியானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
    • மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். 'காசாவின் மனிதாபிமான நிலைமை பற்றி அவரிடம் நிருபர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.

    அப்போது ஜோ பைடன் 'மனிதாபிமானப் பொருட்களுக்கான நுழைவாயிலைத் திறக்க மெக்சிகோவின் ஜனாதிபதி எல்.சி.சி.-யுடன் பேசினேன். நான் அவரை வாயிலைத் திறக்கச் சொன்னேன்," என்று கூறினார்.

    எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.-யை தவறுதலாக "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.

    அமெரிக்க குடியரசுக் கட்சியினர் ஜோ பைடன் மறதி காரணமாக அடிக்கடி நினைவு இழக்கிறார் என்பதற்கான சமீபத்திய ஆதாரமாக அந்த வைரல் வீடியோவை மேற்கோள் காட்டி மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.

    86-வயதாகும் ஜோ பைடன் உலக தலைவர்களின் பெயர்கள் குறித்து தற்போது 3-வது முறையாக தவறுதலாக உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
    • அயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

    அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அயோவா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளார்.

    • வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
    • டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்

    இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.

    தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.

    இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.

    சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.

    தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.

    ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.

    டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×