search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential elections 2024"

    • தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.
    • ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த நசீர் அகமத் தவ்ஹெடி (வயது 27) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்தார். ஓக்லஹோமா நகரில் வசித்து வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார். ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார். மேலும் மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார் என்றனர்.

    • ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
    • வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 2023ல் இருந்தே அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதனால் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

    அதிபர் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    • டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே களம் இறங்கினார்
    • நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர் என்றார் டிரம்ப்

    இவ்வருடம் நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    அமெரிக்க தேர்தல் வழிமுறைப்படி, அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கட்சியினரிடம் உட்கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வென்றாக வேண்டும்.

    குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர், நிக்கி ஹாலேவும் களம் இறங்கினார். ஆனால், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

    தனது பிரசாரங்களில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, 2007லிருந்து 2011 வரை அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி (Nancy Pelosi) பெயரை குறிப்பிட்டு பேசியது விமர்சனத்திற்குள்ளானது.


    அதை குறிப்பிட்டு "மனதளவில் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இல்லை" என நிக்கி ஹாலே அவரை விமர்சித்தார்.


    நேற்று இடாஹோ, மிசோரி, மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் உட்கட்சி தேர்தல்களில் டிரம்ப் வென்றார்.

    இந்நிலையில் தென்கிழக்கு மாநிலமான வர்ஜினியாவில் (Virginia) தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

    நான் வேண்டுமென்றேதான் பைடன் பெயருக்கு பதிலாக ஒபாமா பெயரை குறிப்பிட்டு வந்தேன்.

    அதே போல் ஒரு "பறவை மூளைக்காரர்" (அறிவில் குறைந்தவர்) பெயருக்கு பதிலாக நான்சி பெலோசியின் பெயரையும் மாற்றி குறிப்பிட்டு வந்தேன். உங்களுக்கு யார் அந்த "பறவை மூளைக்காரர்" (நிக்கி) என்பது தெரியும்.

    அவர்கள் இருவரையும் ஒன்றாகத்தான் கருதுகிறேன்.

    ஒரே ஒரு வேற்றுமையை குறிப்பிட வேண்டுமென்றால், நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர்.

    இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டார்.

    • 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
    • ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

    தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.


    இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.

    2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    • குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் நிக்கி பின்வாங்கவில்லை
    • என்னுடன் நேரடியாக விவாதித்து முகத்திற்கு நேராக கேளுங்கள் என்றார் நிக்கி

    2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.

    தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


    இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:

    தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.

    டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.

    உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.

    போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.

    இவ்வாறு நிக்கி கூறினார்.

    • 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
    • அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

    இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.

    "2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.

    சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×