search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Palestine war"

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
    • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

    இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

    ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

    அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

    இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது
    • உயிரிழந்தோர் எண்ணிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, பச்சிளம் குழந்தைகளையும் மிருகத்தனமாக கொன்று, 242 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த தாக்குதலில் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்தது. தொடர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன காசா முனை பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழி தொடர் தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பகுதிகளில் எல்லாம் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இன்றுடன் போர் துவங்கி ஒரு மாதமாகி விட்டது.

    நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    போருக்கு பின்னர் காசாவின் நிலை குறித்து அவர் கூறியதாவது:

    எந்த உயிரிழப்பும் துரதிர்ஷ்டவசமானதுதான். பாலஸ்தீனம் கூறும் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேரில் பலர் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள். மேலும் காசா பொதுமக்களை மனித கவசங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும். போர் நிறைவடைந்ததும் காசா முனை பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக இஸ்ரேல் எடுத்து கொள்ளும். எத்தனை நாள் வரை எனும் கால அளவை தற்போது கூற முடியாது. இந்த பொறுப்பை நாங்கள் தவிர்த்தால் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி விடும். அதை விட மாட்டோம்.

    தற்போது போர் நடைபெற்று வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பணய கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறவும் போருக்கு இடையில், ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர சிறு சிறு இடைநிறுத்தங்களை கொடுக்கலாம். அது கூட சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.

    ஆனால், போர் நிறுத்தம் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 வல்லரசு நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்
    • சுழற்சி முறையில் சீனாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

    உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது, ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான யு.என்.எஸ்.சி. (UNSC) எனப்படும் பாதுகாப்பு கவுன்சில்.

    1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சிலின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை, 15. இதில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும்.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

    தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    "தனது கடமையை பாதுகாப்பு கவுன்சில் செய்ய சீனா ஊக்குவிக்கும். ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) தெரிவித்தார்.

    கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
    • உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    "போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

    இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.

    • எர்டோகன் தலைமையில் துருக்கி, ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
    • 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும் என்றார் எர்டோகன்

    தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள அரபு நாடு துருக்கி (Turkey). இதன் தலைநகரம் அங்காரா.

    துருக்கியின் அதிபராக ரிசெப் டாய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 2014லிருந்து பதவியில் உள்ளார். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிப்பவர் எர்டோகன்.

    நேற்று இந்த போர் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பாலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை. இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம். இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது.

    இவ்வாறு எர்டோகன் கூறினார்.

    அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3,826 குழந்தைகள் உட்பட 9,277 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
    • காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.

    காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.

    இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    • ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
    • ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.

    இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

    இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.


    இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    • காசா பகுதியில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது
    • பேட்ரியாட், அமெரிக்க ராணுவ தளவாடங்களில் அதி நவீன தொழில்நுட்பம் வாய்ந்தது

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல், தங்கள் நாட்டு எல்லைக்குள்ளும் விரைவில் பரவலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. இதனால், தனது நட்பு நாடான அமெரிக்காவின் உதவியை ஜோர்டான் கோரியுள்ளது.

    "அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் எங்கள் நாட்டின் வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களையும், உபகரணங்களையும் கடத்துவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் உண்மையில்லை. அதே சமயம், எங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை முறியடிக்க அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என இது குறித்து ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறினார்.

    அமெரிக்காவின் நட்பு நாடுகளின் விருப்பமான ராணுவ தளவாடங்களில், அதி நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட  பேட்ரியாட் ஏவுகணைக்கு எப்போதும் முதலிடம் உண்டு.

    சிரியா மற்றும் ஈரானில் இருந்து பயங்கரவாதிகள் ஜோர்டான் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடந்த 2011ல் இருந்து ஜோர்டானுக்கு அமெரிக்கா உதவி புரிந்து வருகிறது. அமெரிக்க ராணுவ நிதியுதவியை பெருமளவில் பெறும் நாடுகளில் ஜோர்டானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்போரில் இதுவரை 110 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்
    • ஹமாஸ் அமைப்பினரை தேடும் போது இஸ்ரேல் ராணவத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.

    மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.

    கடந்த 1967ல் இஸ்ரேல்-அரேபிய போர் நடைபெற்ற போது மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்திலிருந்து பாலஸ்தீன போராளிகளை தேடி இஸ்ரேல் வேட்டையாடி வருவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.

    • 2017ல் அமெரிக்காவிற்கு உள்ளே வருவதை சில அரபு நாடுகளுக்கு தடை விதித்தார்
    • இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன் என டிரம்ப் தெரிவித்தார்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார்.

    ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்திரவுகளை நீக்கி விட்டார்.

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், நேற்று நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன். பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன். இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன். இறுதி வரை இஸ்ரேலுடன் வேறு எந்த நாட்டை காட்டிலும் உறுதியுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையேயான போர்; நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    ×