search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helmet"

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.

    அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.

    இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

    இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பேரணியானது ரெயில் நிலையம் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, பைக் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து,

    நடந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், ,சீர்காழி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சீர்காழி காவல் இன்ஸ்பெ க்டர் சிவகுமார், தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.

    100க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த பைக் ஓட்டிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் முக்கூட்டு, ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த, வீரபா ண்டியன், முத்து, ஜெயா, மற்றும் ராஜா பங்கேற்றனர்

    • பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
    • துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா?

    "ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே...

    அப்படி இல்லீங்க... காலம் போகும் போக்கு சரியில்லை. இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்களை தினமும் செய்திதாள்களில் படிக்கிறேன். அதான் பயமா இருக்கு! எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் துரோகம் செஞ்சிடாதீங்க...

    அட... என்ன நீ... உனக்கு நான் துரோகம் பண்ணுவேனா? என்னை நம்பு. உன் மீது சத்தியமா சொல்கிறேன். எந்த பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி செல்லவில்லை என்று மனைவியை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகிவிடும்.

    ஆனாலும் முழு திருப்தி அடையாமல் லேசான சந்தேகத்துடன் 'அப்படி, ஏதாவது தப்பு செஞ்சீங்க... நான் பொம்பளையா இருக்க மாட்டேன்...' என்று மனைவி எச்சரிப்பதை கேட்டு 'அப்பாடா... ஒரு வழியா நம்ப வைத்து சமாளித்து விட்டோம்' என்று கணவர் ஆறுதல் அடைந்த காலம் உண்டு.

    கணவன்மாரே உஷார். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் உங்கள் மனைவியிடமே போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு கேரளாவில் நடந்திருக்கும் சம்பவமே சாட்சி.

    கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்டவர் 32 வயது வாலிபர் பிரசன்னா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள். தற்போது இந்த தம்பதியினர் திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்கள்.

    பிரசன்னா ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் டூ வீலரில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருகிறார். அவருடைய போதாத நேரம் இப்படி சிக்குவோம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவேமாட்டார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கடையில் இருந்து திரும்பும்போது தனது பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.

    கேரளாவில் முக்கிய இடங்கள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அது படம்பிடித்து அனுப்பிவிடும். அபராத தொகையும் எவ்வளவு என்பது வீட்டுக்கே சென்றுவிடும்.

    ஒவ்வொருவரையும் நிறுத்தி அபராதம் விதிக்கும் பெரிய தலைவலி கேரள போக்குவரத்து போலீசுக்கு இல்லை. சம்பவத்தன்று பெண்ணுடன் ஊர் சுற்றிய பிரசன்னா ஜாலி மூடில் இருந்ததால் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல மறந்து போனார்.

    சாலையில் சென்றபோது இதை படம் பிடித்து இருக்கிறது கேமிரா. துரதிருஷ்டம் என்ன வென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    எனவே கேமிரா பிடித்த போட்டோவை வண்டி உரிமையாளரான பிரசன்னாவின் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்துவிட்டது. அபராத தொகையை பற்றி பிரசன்னாவின் மனைவி கவலைப்படவில்லை. அவருக்கு பின்னால் 'ஈ' என்று இளித்தபடி ஒரு பெண் தோளில் கைபோட்டபடி இருக்கிறாளே அவள் யார்? என்பதுதான் ஆத்திரத்தில் கொந்தளிக்க வைத்தது.

    வரட்டும்... என்று காத்திருந்தவர் அழைப்பு மணி ஒலித்ததும் கணவர்தான் வருகிறார் என்பதை அறிந்து கதவை திறந்தார். மனைவி வழக்கம் போல் இல்லையே சேலையை வரிந்து கட்டிக் கொண்டு பத்திரகாளியாட்டம் தெரியுறாளே... என்னவென்று தெரியவில்லையே என்று மனதுக்குள் ஒருவிதமான கலக்கத்துடனேயே வீட்டுக்குள் சென்ற பிரசன்னா வேலை களைப்பில் நாற்காலியில் அமர்ந்தார்.

    வழக்கமாக வீடு திரும்பியதும் சிரித்து கொண்டே வரவேற்று ஆவிபறக்க கொண்டு தரும் காபி களைப்பை நீக்கிவிடும். ஆனால் இன்று முகத்திலும் சிரிப்பை காணோமே என்று யோசித்து கொண்டிருந்தபோது சமையலறையில் பாத்திரங்கள் விழுந்து உடைவது போல் பயங்கர சத்தம் கேட்டது.

    ஆஹா... ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்பதை பிரசன்னாவும் யூகித்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மனைவி நேராக பிரசன்னாவின் அருகில் போய் நின்று கொண்டு "யாருய்யா.. அந்த பெண்" என்று நேராகவே கேள்வியை போட்டார்.

    பெண்ணா... நீ என்ன கேட்கிறாய்? என்று எதுவும் புரியாதது போல் தவித்த பிரசன்னாவிடம் "சமாளிக்காதேய்யா... அதான் உன் மூஞ்சியே சொல்லுதே பைக்கில் ஒருத்தியை ஏற்றிக் கொண்டு ஊர் சுத்துறியே அந்த பெண் யார்" என்று கேட்டேன் என்றார்.

    "ஏய்... நீ என்ன சொல்றே... பைக்கில் பெண்ணா... என்ன கனவு ஏதாச்சும் கண்டியா...? ஆமாய்யா... கனவு வேற காண வேண்டுமா? உன் லட்சணம் தான் ஊருக்கே தெரிந்து இருக்கிறதே. இதில் கனவு வேறு காண வேண்டுமாக்கும்...

    உண்மைய சொல்லு... இல்லாட்டி நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிரசன்னா. அதை பார்த்து 'என்னய்யா... அமைதியா இருந்தால் நடந்ததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?' என்று அதிர்ந்தார்.

    சந்தேகப்படும் உன்னை எப்படி நான் சமாளிப்பது என்று கம்மிய குரலில் பம்மிய பிரசன்னாவிடம் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டி இனியாவது நம்புவியா? இது யார்? என்றார்.

    இதுக்குத்தான் இவ்வளவு கோபமா? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பையும், கையையும் போட்டபடி அமர்ந்து இருக்கிறாளே? கேட்டு தகராறு செய்தார். இந்த தகராறு அன்றோடு முடிந்துவிட வில்லை.

    அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. பிரசன்னாவும் பதிலுக்கு கத்த வீடே போர்க்களமாகிப் போனது. தகராறு முற்றிய நிலையில் அந்தப் பெண் கரமனை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னையும், தனது பிள்ளைகளையும் கொடுமைபடுத்துவதாக புகாரை கொடுத்து ஆதாரமாக கேமிரா அனுப்பி இருந்த போட்டோவையும் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.321 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடுகளை செய்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயலை செய்தல்), சிறார் சட்டம் 75 (குழந்தைகளை புறக்கணிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

    ஆணோ, பெண்ணோ... ஊருக்கு தெரியாது என்று தவறுகள் செய்தால் மனித கண்களை தாண்டி செயற்கை கண்களும் கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    • திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது
    • ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10-ஆக குறைக்க முடியும் என்றார்.

    அவினாசி:

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் உதயம் நற்பணி மன்றம் சார்பில், குடும்ப உறவுகளை பேணி காப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆசைத்தம்பி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10ஆக குறைக்க முடியும் என்றார்.

    • பேரணியானது கூட நாணல், விண்ணமங்கலம், பூதலூர் சென்று மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.
    • ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் திருச்சி மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், திருக்காட்டுப்பள்ளி கிளை சங்கம் மற்றும் 11 சங்கங்கள் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    பேரணியை திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஜெயக்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியை வாழ்த்தி திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், வழக்கறிஞர் ஜெயக்குமார், சங்க மாவட்ட செயலாளர் அன்பு ராஜா, மாவட்ட பொருளாளர் செல்வமணி, கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்நாதன், வரகூர் கார்த்திகேயன், வக்கீல் ரமேஷ், இளங்காடு தங்கதுரை, திருக்கா ட்டுப்பள்ளி பெரியண்ணன், சாகுல் ஹமீது ஆகியோர் பேசினார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி நிர்வாகிகள் திராவிட மணி ,கிள்ளிவளவன் ,தாமஸ், சதீஷ், பாபு வரதராஜ், விஜயகுமார் ,செல்லையா, ஜீவா உள்ளிட்ட ஏராளமா னோர் ஹெல்மெட் அணிந்த படி பேரணியில் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கிய பேரணி கூட நாணல் ,விண்ணமங்கலம், பூதலூர் சென்று விட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.

    பேரணி தொடங்குவதற்கு முன்னதாக திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    மதுரை

    வாடிப்பட்டி வட்டார வைகை இருசக்கர வாகன மற்றும் மெக்கானிக்கல் பொதுநல சங்கம் சார்பில் மே தின விழா, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வாசித்தார்.

    வல்லப கணபதி கோவிலில் இருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் பேரணியாக சென்றனர். வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாலையில் மழலையார் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சிவஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார்.
    • ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார். இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் அமானி கொண்ட லாம்பட்டி காட்டூரைச் சேர்ந்தவர் மோகன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செய லாளரான இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார். அங்கிருந்த பணியாளர் வாகனத்திற்கு 15 ரூபாய் மற்றும் டோக்கன் வழங்கினார்.

    அப்போது வண்டியில் ஹெல்மெட் உள்ளது என மோகன் கூறினார். அதற்கு பணியாளர் ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார்.

    இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெல்மெட்டுக்கு கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் போக்குவரத்து போலீசார் மீண்டும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தனர்.

    இதன்படி தினமும் அபராதம் விதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18 ஆயிரத்து 35 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் ரூ.18 லட்சத்து 3 அயிரத்து 500 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரையில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வாகன விதிமீறல் வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 10 அழைப்பு மையங்கள் அமைத்து போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன்படி கடந்த 50 நாட்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேர் பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகையாக 1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தி உள்ளனர். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் செலுத்தி உள்ளார்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 1 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ.10000 அபராதம் செலுத்தி இருக்கிறார்கள்.

    மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 247 பழைய வழக்குகளில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 920 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூ. 3 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்துள்ளனர்.

    சென்னை போலீசார் கடந்த 50 நாட்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 284 வழக்குகளில் ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770 அபராத தொகையாக வசூலித்து உள்ளனர்.

    இந்தியாவில் சாலை விபத்து, உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகின்றன.
    மும்பை:

    சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னையிலும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    ×