search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus"

    • பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • பஸ் கண்டக்டரை டெப்போவிற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மெய்யனூர் கிளையில் டிரைவராக சத்யமூர்த்தி, கண்டக்டராக எஸ்.நேரு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்களுக்கு சேலம்-சிதம்பரம் வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பஸ் காலை 5.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டது. பஸ் நெய்வேலிக்கு 4 கிலோ மீட்டருக்கு முன்பு ஊமங்கலம் என்ற பகுதியில் சென்றபோது விழுப்புரம் போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவி மேலாளர் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் குழு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது தலைவாசல் பஸ் நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2 நூறு மற்றும் 2 ரூ.10 மதிப்புள்ள பயணச் சீட்டுகள் நேற்றைய தேதியில் வழங்கிய பயணப்பட்டியலில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த பயணச்சீட்டுகள் இதே கண்டக்டரால் ஏற்கனவே இவருடைய முந்தைய பணியில் பயணிகளுக்கு விற்கப்பட்டவை என தெரிந்தது.

    கண்டக்டர் நேரு ஏற்கனவே அவரால் விற்கப்பட்ட பயணச் சீட்டை வைத்திருந்து மீண்டும் பயணிகளுக்கு மறுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்டக்டர் நேரு பணி தொடராமல் பணிநிறுத்தம் செய்யப்பட்டார். மேலும் கண்டக்டர் நேருவை சேலம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாற்று கண்டக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்களால் கண்டக்டர்களின் பணப்பை மற்றும் லாக்கர்கள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக நடைமுறையில் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை.
    • கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.

    சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

    அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந்தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.

    முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந்தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
    • கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    சென்னை:

    மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.

    அரசு விரைவு பஸ்கள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். நேற்று மாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    நள்ளிரவு 1 மணி வரை வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை ஏற்பாடு செய்தனர். முன் பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் சென்றுள்ளனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    மேலும் வருகிற சனி, ஞாயிறு, திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் இல்லாததால் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தேவையான அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. நாளை பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நாளைய பயணத்திற்கு நிரம்பிவிட்டன.

    • மழை பெய்ததன் காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது.
    • அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடி பஸ்சை ஓட்டிச் செல்கிறார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது.

    பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், குறிப்பிட்ட வீடியோவில் மழை காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடியே ஒரு கையில் பஸ்சை ஓட்டிச் செல்கிறார். மழை நீர் ஒழுகிய பஸ் கட்சிரோலி அகேரி டெப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

    இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

    • தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் கூட்டம் மிகுதியாக இருந்தன.
    • கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சென்னை:

    அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து நேற்று சுதந்திர தின விழா விடுமுறை கிடைத்ததால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் வெள்ளிக்கிழமை பயணத்தை மேற்கொண்டனர்.

    சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார்களில் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பினார்கள்.

    சென்னை திரும்ப வசதியாக பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான பஸ்களை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து அரசு பஸ்களில் சென்னை வருவதற்கு 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதே போல 3000 பேர் சென்னையில் இருந்து முன்பதிவு செய்து வெளியூர் புறப்பட்டு சென்றனர். சுமார் 1.5 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்து சென்னை திரும்பியுள்ளனர்.

    இது தவிர ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி இருந்தன. 25 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்த பஸ்கள் இன்று அதிகாலை முதல் கோயம்பேடுக்கு வரத் தொடங்கின.

    பெரும்பாலான பஸ்கள் தாம்பரம், கிண்டி, வடபழனி வழியாக வந்தன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை அதிகளவில் பஸ்கள் வந்ததால் நெரிசல் காணப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதே போல தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் காலையில் கூட்டம் மிகுதியாக இருந்தன.

    • தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார்.
    • விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னை தண்டை யார்பேட்டையை சேர்ந்த வர் ரத்தினம் (வயது 65). இவர் சென்னையில் உள்ள பாரில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் விக்கிரவாண்டியில் நடை பெற்ற தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார். வளைகாப்பு முடித்து மீண்டும் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக விக்கிர வாண்டி சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இயக்கும் மிகப் பழமையான பேருந்துகளுக்குப் பதில் 1000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத்துறைக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த நிதியில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும் புதிதாக வாங்கப்பட உள்ளன. 

    • மதுரையில் அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாசி வீதி நாகுபிள்ளை தோப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது57). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் காளியம்மாளின் மணிபர்சை திருட முயன்றார். உடனே சுதாரித்த அவர் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அவர் திருச்சி ரெயில்வே ஸ்டேசன் கேட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராதேவி(50) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார்.
    • டேவிட் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளத்தை சேர்ந்தவர் டேவிட்(வயது 36). இவர் நேற்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலமாக இயக்கப்படும் சிவப்பு நிற பஸ்சில் சந்திப்பு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய டேவிட்டிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். உடனே அவர் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார். ஆனால் பையில் டிக்கெட்டை காணவில்லை.

    உடனே பரிசோதகர் அபராதம் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் டேவிட், தான் டிக்கெட் எடுத்ததாகவும் சில நிமிடங்கள் பொறுங்கள். எனது பையில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த பரிசோதகர் ரூ.200 அபராதமாக விதித்து ள்ளார். அபராத சீட்டு எழுதி முடித்ததும், டேவிட் தேடிய டிக்கெட் அவரது கைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    உடனே அவர் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்டி உள்ளார். ஆனால் அபராதம் விதித்தபின் மாற்ற முடியாது என்று அலட்சியமாக கூறிவிட்டு பரிசோதகர் சென்றுவிட்டார் எனவும், பரிசோதகரின் பொறுமையின்மையால் ரூ.15 டிக்கெட்டுக்கு ரூ.200 அபராதமாக செலுத்தி உள்ளேன் எனவும் டேவிட் வருத்தத்துடன் தெரிவித்தார்.

    • இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் பக்காசூரன் மலைக் கிராமம் உள்ளது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவ, மாணவிகளில் பலர் குன்னூரில் படிக்கின்றனர்.

    கிராமத்தினரும் அடிக்கடி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பக்காசூரன் கிராமத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    எனவே பக்காசூரன் மலைகிராமத்துக்கு அரசு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சாலை அமைக்கப்பட்டது.

    இருப்பினும் அங்கு பஸ் சேவை தொடங்கவில்லை.. இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து பக்காசூரன் மலைக்கு பஸ் சேவை தொடங்குவது என்று போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.

    இதன்படி அங்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்காசூரன் கிராமத்துக்கு தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா. உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பொதுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
    • அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எறையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்நாதன் .இவர் தனது 6மாத கர்ப்பிணி மனைவி கோகிலாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தீவனூர் அருகே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவருடன் சென்ற 6 மாதம் கர்ப்பிணி கோகிலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ரோஷனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×