search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Employee"

    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    கோவை மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து நீர்வள பொதுப் பணித்துறையில் சேர்ந்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்ட பொதுப்பணித் துறையில் நீர்வள ஆதாரப் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர் கிருஷ்ண குமார்(வயது 40).

    இவரது தந்தை பொதுப் பணித்துறையில் பணியாற்றியவர் ஆவார். அவர் பணியின் போது மரணம் அடைந்ததால் கருணை அடிப்படையில் கிருஷ்ணகுமாருக்கு வேலை கிடைத்தது.

    கிருஷ்ணகுமார் கடந்த 2007-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக ஈரோட்டில் பணியில் சேர்க்கப்பட்டார். அப்போது இவர் கல்வி சான்றிதழாக 10-ம் வகுப்பு சான்றிதழை சமர்ப்பித்தார். தொடர்ந்து பணியாற்றிய கிருஷ்ண குமார் 2014-ம் ஆண்டு கோவை நீர்வள ஆதாரப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கிருஷ்ண குமார் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்களை பொதுப் பணித்துறை உயரதிகாரிகள் கல்வித்துறை அலுவலகத்துக்கு அனுப்பி சரி பார்த்தனர். அப்போது சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், அசல் சான்றிதழை சமர்ப்பிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பின்னரும் கிருஷ்ண குமார் அசல் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. மேலும் அவர் பணிக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிருஷ்ணகுமார் மீது நீர்வள ஆதாரப்பிரிவு முதன்மை என்ஜினீயர் எத்திராஜ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் கிருஷ்ணகுமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுகுடித்துவிட்டு மயங்கி கிடந்த அரசு ஊழியரிடம் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் ராம்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது51). இவர் கடற்கரை சாலையில் உள்ள புதுவை சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இவர் தவளக்குப்பத்தில் உள்ள சாராயகடையில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு அருகில் உள்ள மைதானத்தில் மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் யாரோ முருகன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    போதை தெளிந்த பின்னர் முருகன் சட்டை பையை பார்த்த போது பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகனிடம் பணம் மற்றும் செல்போனை திருடிசென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

    கடையம் அருகே அரசு ஊழியர் காரை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    கயத்தாறை சேர்ந்தவர் சண்முகநாதன். அரசு ஊழியரான இவர் குற்றாலத்தில் குளிப்பதற்காக தனது காரில் சென்றார். இவர் கடையத்தில் உள்ள உறவினரை அழைத்துக் கொண்டு மற்றொரு வாகனத்தில் குற்றாலம் சென்றார். சண்முகநாதன் ஓட்டி வந்த காரை கடையத்தில் நிறுத்திவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் குற்றாலத்தில் குளித்துவிட்டு மீண்டும் கடையம் வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், ஒரு செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    சண்முகநாதன் தனது செல்போனில் ஏ.டி.எம். ரகசிய எண்ணை பதிவு செய்து வைத்திருந்தார். இதைப்பார்த்து கொள்ளையன் திருடி சென்ற ஏ.டி.ஏம். கார்டில் இருந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்துள்ளான். உடனடியாக இது குறித்து சண்முகநாதன் கடையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாபு (வயது 21) என்பவர் தான், காரை உடைத்து செல்போன், பணத்தை திருடியதும், ஏ.டி.எம்.கார்டு மூலம் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை கைது செய்தனர் அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    கேரளாவில் அரசு ஊழியர் தனக்குத்தானே தகன மேடை அமைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா பகுதியை சேர்ந்தவர் பிரகாசன் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கீதா (55). இவர்களது மூத்த மகளை அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். மனைவி மற்றும் 2-வது மகள் பிரியா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மனைவியின் தங்கை மீராவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்ததும் நேற்று காலை 3 பேரும் வீட்டுக்கு வந்தனர். மனைவி மற்றும் மகள் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.

    தனியே இருந்த பிரகாசன் வீட்டுக்கு பின்புறம் பெரிய குழியை வெட்டினார். பாதி அளவுக்கு விறகுகளை அடுக்கி அதில் மண்எண்ணை ஊற்றினார். தற்போது அந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.மழை பெய்தால் தீ அணையாமல் இருக்க சிமெண்ட் ஷீட்டால் மேற்கூரை அமைத்தார்.

    பின்னர் குழிக்குள் படுத்துக்கொண்டு விறகுகளை தனது உடல்மேல் அடுக்கினார். முழுவதும் அடுக்கிய பின்னர் தீ வைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது.

    பக்கத்தில் வீடுகள் இல்லாததால் புகை வருவதை பார்த்த பொதுமக்கள் பிரகாசன் குப்பைகளுக்கு தீ வைத்திருப்பார் என்று நினைத்தனர். மாலை பிரகாசனின் சகோதரர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரகாசனை காணவில்லை. சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு பின்புறம் சென்று பார்த்தார்.

    அப்போது தகனமேடை போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது பிரகாசனின் கால்களை தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலானது தெரியவந்தது. தனது சகோதரரின் கால்களை தெரிந்த அவர் அலறி சத்தம்போட்டார்.

    இது குறித்து அவரது மனைவி, மகள் மற்றும் மாலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாம்பல் மற்றும் எரியாத 2 கால்களையும் போலீசார் மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு எந்த வித நோயும் இல்லை. பொருளாதாரத்திலும் குறைவு இல்லை என்பது தெரியவந்தது.

    மேலும் அவரது நண்பர்கள் கூறும்போது, பிரகாசன் பழக இனிமையானவர். ஆனால் சமீபகாலமாக என்ன வாழ்க்கை இது? இன்னும் எவ்வளவு நாள் தான் வாழவேண்டும்? என்று வாழ்க்கை குறித்து சலிப்புடன் பேசினார் என்று கூறினர். 2 நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் கலகலப்பாக பேசிய பிரகாசன் தற்கொலை செய்து கொண்டதை மனம் நம்ப மறுக்கிறது என்று உறவினர்கள் கூறினர்.

    மாலா போலீசார் பிரகாசனின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×