search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC 2023"

    • இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன
    • இந்தியா மட்டும் தோல்வியை சந்திக்காக அணியாக இருந்து வருகிறது

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இதுவரை 25 போட்டிகளில் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன.

    இந்தியா ஐந்து போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்தையும், நியூசிலாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 5 முதல் 7 இடங்களை பிடித்துள்ளன.

    வங்காளதேசம் 8-வது இடத்தையும், இங்கிலாந்து 9-வது இடத்தையும், நெதர்லாந்து கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

    • நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை என ஏற்கனவே அறிவிப்பு
    • சூர்யகுமாரின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், விளையாடுவாரா? என்பது சந்தேகம்

    உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாற்றி எழுத இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொண்டது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யகுமார் யாதவின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் வெளியேறினார்.

    ஏற்கனவே, ஹர்திக் பாண்ட்யா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி கவலை அடைந்துள்ளது.

    மேலும், இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தேனீக்கள் படையெடுத்து வந்தன. அப்போது இஷான் கிஷனை சில தேனீக்கள் கொட்டின. இதனால் அவரும் பயிற்சியை கைவிட்டு வெளியேறினார். ஆனால், விளையாட முடியாத வகையில் அவருக்கு ஆபத்து இல்லை.

    • வங்காளதேசம் அணிக்கெதிராக பந்து வீசும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது
    • 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார்

    புனேயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை ருசித்துள்ளது.

    இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும்போது காயம் அடைந்தார். அதன்பின் களம் இறங்கவில்லை. அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் காயம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா கூறியதாவது:-

    வங்காளதேசம் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பானது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. முதலில் நாங்கள் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை நம்முடைய பக்கத்திற்கு திருப்பினர். அனைத்து போட்டிகளிலும் பீல்டிங் சூப்பராக இருந்தது. இது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அவர்களின் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும். பந்து வீச்சாளர்கள் எந்த லெந்தில் பந்து வீச வேண்டும் என்று புரிந்து வைத்துள்ளனர்.

    ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். கேட்ச் பிடித்தார். இருந்தபோதிலும், சதத்தை உங்களால் முந்தி செல்ல முடியாது.

    ஒரு அணியாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வீரர்கள் அறையில் சிறந்த பீல்டருக்கு பதக்கம் வழங்குவது, உத்வேகம் அடைவதற்காகத்தான்.

    ஹர்திக் பாண்ட்யா சற்று வலி இருப்பதாக உணர்கிறார். மிகப்பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில் அவரது காயம் இல்லை. நாளை காலை (இன்று) அவர் எழுந்து நடக்கும்போது எவ்வாறு உணர்கிறார் என்று பார்க்க வேண்டும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடுவோம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து ஆதரவு அளிக்கிறார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • விராட் கோலி சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன், அணியை வெற்றி பெற வைத்தார்
    • உலகக் கோப்பையில் விராட் கோலியின் 3-வது சதம் இதுவாகும்

    புனேயில் நடைபெற்ற இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். கடைசியில் இந்திய அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 80 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் கே.எல். ராகுல் ஒருபுறம் நிற்க, அனைத்து ரன்களையும் விராட் கோலி அடித்து சதத்தை தொட்டார்.

    சதம் அடித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது விராட் கோலி பேசியதாவது:-

    ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து திருடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். ஆனால், அவற்றை சதமாக மாற்ற முடியாமல் போனது. நான் கடந்த சில வருடங்களாக அணிக்கு செய்து வரும் பணியின் தொடர்ச்சியாக, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைக்க விரும்பினேன்.

    ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. எனது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. தேவைப்படும் போதெல்லாம் பவுண்டரிகள் அடிக்க, பீல்டர்களுக்கு இடையில் பந்தை அடிப்பதற்கு, விரைவாக ரன்கள் அடிக்க முடிந்தது.

    வீரர்கள் அறையில் சிறந்த சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு குழுவாக ஒருவரையொருவர் சிறப்பாக நேசிக்கிறோம். அதை நீங்கள் ஆடுகளத்தில் பார்ப்பீர்கள். இது நீண்ட நாள் நடைபெறும் தொடர். வீரர்கள் ஆடுகளத்தில் இதுபோன்று சிறப்பாக விளையாட, வீரர்கள் அறையில் சில உத்வேகம் தேவை. சொந்த மண்ணில், ரசிகர்கள் முன் விளையாடுவதை சிறந்த உணர்வு. இதை நாங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

    வங்காளதேசம் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நேரத்தில் ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது
    • தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் உள்ளன.

    இரு அணிகளுக்குமிடையில் புள்ளிகள் பட்டியலில் கடும் போட்டி நிலவி வருகிறது. தலா மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா முதலிடம் வகித்தது. சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தது.

    நேற்று வங்காளதேசம் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 4 வெற்றிகளுடன் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து 1.923 ரன்ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1.659 ரன்ரேட் உடன் 2-வது இடத்தில் உள்ளது.

    வரும் போட்டிகளில் இந்தியா அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் அல்லது நியூசிலாந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்.

    தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    இங்கிலாந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. வங்காளதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் முறையே 7 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ளன.

    • விராட் கோலி சதம், சுப்மன் கில் அரைசதம்
    • 41.3 ஓவரில் இந்தியா சேஸிங் செய்தது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேசம் 256 ரன்கள் அடித்தது. பின்னர் இந்தியா 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.

    • மும்பை- புனே நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரில் வந்துள்ளார்
    • ஆன்லைன் மூலம் அபராதம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இரண்டு போட்டிக்கும் இடையில் சுமார் நான்கு நாட்கள் இடைவெளி இருந்ததால் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக மும்பை சென்றதாக தெரிகிறது.

    நேற்று மீண்டும் அணியுடன் இணைய சொகுசு காரில் வந்துள்ளார். அவர் மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் மின்னல் வேகத்தில் வந்துள்ளார். இந்த சாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 200 கி.மீ. வேகத்தையும் தாண்டி, 215 கி.மீ. வேகத்தில் அவரது கார் வந்துள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வாகனம், போக்குவரத்து விதிமுறையை மீறியதற்கான மூன்று அபராத ரசீதை பெற்றுள்ளது. மைதானத்தில் எவ்வளவு வேகத்தையும் காட்டலாம். ஆனால், சாலையில் வேகத்தை காட்டினால் அபராதம்தான் மிஞ்சும்.

    ரோகித் சர்மா சென்றது லாம்போர்கினி உருஸ் சொகுசு கார். இந்த வாகனத்தின் நம்பர் 264 ஆகும்.

    • பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள்
    • விராட் கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் புனே நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாது.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது வங்காளதேச அணியினர் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்கள். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள். ஏனென்றால், அது அவர்களுக்கு உந்துதலாக இருக்கும். ஆகவே, நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டேன். ஏனென்றால் அவர் உந்துதல் பெற்றுவிடுவார். எங்களுடைய பந்து வீச்சாளர்களிடம், எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, அவ்வளவு விரைவாக அவரை வீழ்த்துமாறு கூறுவேன்.

    விராட் கோலியை எதிர்த்து நான் விளையாடும் போதெல்லாம், நான் பேட்டிங் செய்ய செல்லும்போது அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார். ஏனென்றால், அவர் உண்மையிலேயே ஒரு போட்டியாளர். ஒரு போட்டியை கூட இழக்க விரும்பமாட்டார். அவருக்கும் எனக்கும் இடையிலான மோதல், இந்தியாவையும் எதிர்த்து விளையாடும் சவால் ஆகியவற்றை நான் மிகவும் விரும்புவேன்.

    இவ்வாறு ரஹிம் தெரிவித்துள்ளார்.

    • ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.
    • இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை கூறிள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    ஏனெனில் ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது தலைமை பண்புகளை நான் டோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் டோனி ரோகித்தான்.

    ஏனெனில் ரோகித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த டோனி என்பதை நினைக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்ஆப்பிரிக்கா முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்தது
    • ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியடைந்து இருந்தது

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.

    டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பை போட்டியின் 10-வது லீக் ஆட்டம் லக்னோவில் நாளை (12-ந்தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 102 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணி 428 ரன் குவித்து சாதனை படைத்தது. குயின்டன் டி காக், வான்டர் டூசன் உள்ளிட்ட 3 வீரர்கள் சதம் அடித்தனர். மார்க்ராம் அதிவேகத்தில் (49 பந்து) சதம் அடித்து சாதனை படைத்தார்.

    தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சுமித், வார்னர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும்.

    • 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழு தகவல்
    • இருந்தபோதிலும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

    இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஆடவில்லை.

    சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை அடைவதற்கு சுப்மன் கில்லுக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 14-ந்தேதி நடைபெறும் ஆட்டத்திலும், வங்காளதேசத்துக்கு எதிராக 19-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என கருதப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் பேக்-அப் வீரராக அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

    • முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது
    • பாகிஸ்தான் 2-வது வெற்றியை பெறும் வகையில் விளையாடும்

    உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதேவேளையில் வங்காளதேசம் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்க நினைக்கும். இந்த போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது.

    இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதே மைதானம் என்பதால் வங்காளதேசத்திற்கு சற்று கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கும்.

    மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. அதே உற்சாகத்துடன் இன்று இலங்கையை வீழ்த்த துடிக்கும்.

    இலங்கை அணி முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தாலும், இலங்கை 44.5 ஓவர்களில் 326 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த போட்டி பரபரப்பு, சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ×