search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore accident"

    கோவையில் இன்று காலை டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 44). இவர் கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக இருந்தார்.

    இன்று காலை அவினாசி ரோடு நவஇந்தியாவில் இருந்து லட்சுமி மில் சந்திப்புக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரத்தில் ஒரு தரைப்பாலம் உள்ளது.

    அங்கு வந்தபோது பின்னால் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி வந்தது. டீசல் லாரி சந்தோஷ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    ஹெல்மெட் அணிந்திருந்த அவர் சுதாரித்து எழுவதற்குள் லாரியின் பின்சக்கரம் சந்தோசின் தலையில் ஏறியது. இதில் ஹெல்மெட் நொறுங்கி அவரது தலை நசுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போக்குவரத்தை மாற்றுபாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் பிணமாக கிடந்த சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கோவை- அவினாசி சாலையான இதில் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர கார், வேன் அதிகம் செல்கின்றன.

    கோவை பஸ் நிலையத்தில் இருந்து நீலாம்பூர் பஸ் நிறுத்தம் வரை 15-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் உள்ளன. இருந்தபோதும் இந்த பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. சாலையோரம் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்று விபத்துக்குள் இந்த பகுதியில் நடக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு 8 மணி முதலே களை கட்டியது.

    இரவு 12 மணி அளவில் மாநகர சாலைகளில் ஏராளமான வாலிபர்கள் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது.

    3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:-

    கோவை காந்திபார்க் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (வயது 19). இவரும், இவரது நண்பரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தன்வீரும்(21) நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வேலாண்டிபாளையம் அருகே வந்த போது எதிரே கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மணிகண்டன் இறந்தார். நியாஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தன்வீர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குனியமுத்தூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மாதவன் (15). நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய இவர் அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    உக்கடம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    ரத்தினபுரி மருதாசலம் வீதியை சேர்ந்தவர் பிஜூ(18). போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் இவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    போத்தனூர் ரோட்டில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிஜூவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிஜூ பரிதாபமாக இறந்தார்.

    இதுதவிர கோவை நகரின் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 20 பேர் கை, கால் முறிந்து காயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
    கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ரெயில் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 18). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி எலட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் சிங்காநல்லூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியே வந்த ரெயில் ஜெயசூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினர். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜெயசூர்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன்றி இன்று காலை ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்பூரில் இருந்து கோவை வந்தபோது கெமிக்கல் சப்ளையர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரநேசன் (வயது49). இவரது மனைவி லதாமகேஸ்வரி (42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சந்திரநேசன் திருப்பூர் முத்து நகரில் தங்கி பனியன் கம்பெனிகளுக்கு கெமிக்கல் சப்ளை செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருப்பூர்- சின்னியம்பாளையம் இடையே உள்ள தென்னம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயங்களுடன் கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் முன்னாள் கலெக்டர் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாநகராட்சி கமி‌ஷனராக கடந்த 2006-ம் ஆண்டு பணியாற்றியவர் முத்துவீரன்.

    பின்னர் தேனி கலெக்டராக பதவி உயர்வு பெற்ற இவர் தற்போது பணி ஓய்வு பெற்று திருச்சியில் வசித்து வருகிறார்.

    இவரது மகன் பிரனேஷ் பாபு(வயது 27) கோவையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவர் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

    இரவு முழுவதும் பயிற்சி மையத்தில் தங்கி படித்த இவர் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் வந்த போது, அவினாசி சாலையில் வந்த கார் ஒன்று காந்திபுரம் செல்வதற்காக பாப்பநாயக்கன்பாளையம் சாலைக்கு திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் பிரனேஷ் பாபு தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரனேஷ் பாபுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பிரனேஷ்பாபு மீது மோதிய காரை பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(44) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் நாராயணராவ் என்பவர் உடன் வந்துள்ளார். விபத்தில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிலிப் ஜான் (வயது 38). இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சவுத் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று வேலை முடிந்ததும் இரவு 7.30 மணி அளவில் பிலிப் ஜான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகம் அருகே சென்ற சென்ற போது அதே வழியாக கியாஸ் சிலிண்டர் லோடு ஏற்றிச் சென்ற லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலை யில் விழுந்த பிலிப் ஜான் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொது மக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் ரெஜிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் இன்று அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பீளமேடு:

    கோவை சவுரிப்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன். மில் ஊழியர்.இவரது மனைவி சகாயமேரி (54). இவர்கள் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அவர்கள் பீளமேடு ஹோப் காலேஜ் அருகில் உள்ள சிக்னலை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் பின்புறம் இருந்த சகாய மேரி தவறி விழுந்தார்.

    அந்த சமயத்தில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் சகாய மேரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    தன் கண் முன் மனைவி பலியானதை கண்டு புஷ்பநாதன் கதறி அழுதார். தங்களுக்கு குழந்தை இல்லை என்றும் இதனால் மனைவியை குழந்தை போல் பாவித்து வந்தேன். அவரும் விபத்தில் பலியாகி விட்டாரே? என புஷ்பநாதன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அண்ணா சிலை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    கோவை:

    கோவை -அவினாசி சாலை அண்ணா சிலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் உக்கடம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காந்திபுரம் பஸ் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாக தான் சென்று வருகின்றன.

    இந்த அண்ணாசிலையில் 4 ரோடு சந்திப்பில் சிக்னல் உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    கோவை ஆர்.எஸ்.புரம் லோகமான்ய வீதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் மல்லிகை அர்ஜூன் (19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மேலும் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை 7.30 மணியளவில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்ல வந்தார்.

    அண்ணா சிலை சிக்னலில் அவர் சிக்னலுக்காக காத்து இருந்தார். சிக்னல் விழுந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்வதற்காக வலது புறம் திரும்பினார்.

    அப்போது காந்திபுரம் செல்லும் தனியார் பஸ் வந்தது. சிக்னலில் இந்த பஸ் காந்திபுரம் நோக்கி இடது புறமாக திரும்பியது. அப்போது மாணவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் மாணவரை மீட்டு வேனில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மாணவர் மல்லிகை அர்ஜூன் பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பஸ் டிரைவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. உக்கடம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் நிற்காமல் இடது பக்கமாக திரும்பி சென்று விடலாம்.

    ஆனால் பீளமேடு, நவ இந்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சிக்னலில் நின்று தான் செல்ல வேண்டும். சில சமயம் காந்திபுரம் செல்லும் தனியார் பஸ்கள் வேகமாக வருவதால் சிக்னலில் நிற்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

    இதே போல் தான் இன்று காலையும் தனியார் பஸ் மோதி மாணவர் உயிரை பறித்து விட்டது. எனவே சிக்னல் பகுதியில் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பலியான மாணவர் மல்லிகை அர்ஜூன் தந்தை சிவசுப்பிரமணியன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    மாணவர் மல்லிகை அர்ஜூன் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்க முன் வந்தனர். ஆனால் விபத்தில் மாணவர் இறந்து விட்டதால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை. மாணவரின் தோல் மட்டும் தானமாக பெறப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    கோவை அருகே இன் று காலை கார்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள். #accidentcase

    சூலூர்:

    கோவை பீளமேடு சேரன்மா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கவுதம் (22). என்ஜினீயரிங் மாணவர்.இன்று காலை கவுதம் தனது நண்பர்கள் சிதம்பர நாத், கோகுல் நாத், சல்மான் போரீஸ், விக்னேஷ்வர், மற்றும் ஒருவருடன் காரில் கிரிக்கெட் விளையாட சென்றார். இந்த கார் எல்அண்டி பைபாஸ் சாலை வெங்கிட்டாபுரம் -குளத்தூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது பின்னால் கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமாக கார் கல்லூரிக்கு வந்த விருந்தினர்களை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து ஏற்றி கொண்டு பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வெங்கிட்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கவுதம் சென்ற கார் டிரைவர் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார்.

    உடனே கார் பின் பக்கமாக திரும்பியது. அந்த சமயத்தில் பீளமேட்டில் இருந்து சென்ற கல்லூரிக்கு சொந்தமான கார் அதன் மீது மோதியது.

    இதில் கல்லூரி மாணவர் கவுதம், அவரது நண்பர்கள் சிதம்பர நாத், கோகுல் நாத் 3 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற சூலூர் அருகே உள்ள கணியூரில் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வரும் சூர்யா, கல்லூரிக்கு சொந்தமான காரை ஓட்டி சென்ற டிரைவர் வினிஷ், சுபிஜித், மோகித், பலியான மாணவர் கவுதமின் நண்பர்கள் சல்மான் போரிஸ், விக்னேஷ்வர் மற்றும் ஒருவர் என 7 பேர் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சுந்தராபுரத்தில் கடந்த 1-ந் தேதி சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் புகுந்து கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் இன்று கார்கள் மோதி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது கோவையில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் 6 பேரை பலி கொண்ட விபத்தில் ‘ஆடி’ கார் டிரைவரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த ‘ஆடி’ கார் கூட்டத்தில் புகுந்து, 6 பேர் உயிரை பலி வாங்கியது.

    சுந்தராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி (வயது 18), பூ வியாபாரி அம்சவேணி(34), ரே‌ஷன் கடைக்கு சென்ற குப்பாத்தாள் (70), ருக்மணி (65), ஓய்வு பெற்ற தபால்காரர் நாராயணன்(70), லோடுமேன் ஸ்ரீரங்கதாஸ் ஸ்ரீரங்கதாஸ் (69) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இவர்களில் ருக்மணி தவிர மற்ற 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ருக்மணி உடல் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த சுந்தராபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்(55), சுரேஷ்(45), நடராஜ் (75) ஆகிய 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கார் டிரைவரான குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீஷ்குமார்(35) என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது இவர் ஓட்டி வந்த கார் கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியின் தாளாளர் மதன்செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் டிரைவர் ஜெகதீஷ்குமார் பெங்களுருக்கு காரில் கல்லூரி நிர்வாகிகள் சிலரை ஏற்றி சென்றுள்ளார்.

    விடிய, விடிய தூங்காமல் கார் ஓட்டிய அவர் நேற்று காலையிலும் கல்லூரி நிர்வாகிகள் சிலரை அழைத்து வர கோவைக்கு வந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

    6 பேர் உயிரை பலிவாங்கிய இந்த கார் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். புதுச்சேரி பதிவு எண் கொண்ட இந்த காரை கோவையில் ஓட்டி வந்துள்ளனர்.

    டிரைவர் ஜெகதீஷ்குமார் குடிபோதையில் இருந்தாரா? என்பதை கண்டு பிடிக்க ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இன்று தெரிய வரும். இதற்கிடையே, டிரைவர் ஜெகதீஷ்குமாரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தினர். ஜெகதீஷ்குமாரை வருகிற 14-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெகதீஷ்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்திப்பு பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை, டிரைவர் ஜெகதீஷ் குமார் ஓட்டி வந்துள்ளார். அவரது டிரைவிங் லைசென்சு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி சாலையில் ஏற்கனவே தனியார் பஸ்கள் அதிவேகத்தில் சென்று விபத்துகள் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இந்தநிலையில் அதிவேகமாக வந்த கார் 6 பேர் உயிரை பலி கொண்டுள்ளது.

    இதையடுத்து பொள்ளாச்சி சாலையில் விபத்துக்களை தடுக்க போலீசார் முக்கிய இடங்களில் பேரி கார்டுகள் அமைத்தனர். சில இடங்களில் வேகத்தடை அமைக்க உள்ளனர். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் லைசென்சு ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர்(வயது 20). கரும்புகடையை சேர்ந்தவர் செய்யது தவுபிக்(20). நண்பர்களான இவர்கள் இருவரும் கார் டிங்கரிங் வேலை செய்து வந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று இரவு பீளமேடு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பீளமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அபுதாகிர், தவுபிக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பலியான இருவரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#accident

    கோவை:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மதன் (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

    எனவே கோவை கணபதியில் உள்ள நண்பரின் அறையில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இவரை பார்ப்பதற்காக நண்பர் பிரனவ் என்பவர் நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் இரவு ஊருக்கு செல்வதாக கூறினார்.

    இதனையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக மதன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரத்துக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் சத்தி ரோடு கணபதி 3 நம்பர் பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மதன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரனவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் மத்திய போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #accident

    ×