search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அண்ணா சிலைஅருகே விபத்து- கல்லூரி மாணவர் பலி
    X

    கோவை அண்ணா சிலைஅருகே விபத்து- கல்லூரி மாணவர் பலி

    கோவை அண்ணா சிலை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    கோவை:

    கோவை -அவினாசி சாலை அண்ணா சிலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் உக்கடம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காந்திபுரம் பஸ் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாக தான் சென்று வருகின்றன.

    இந்த அண்ணாசிலையில் 4 ரோடு சந்திப்பில் சிக்னல் உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    கோவை ஆர்.எஸ்.புரம் லோகமான்ய வீதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் மல்லிகை அர்ஜூன் (19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மேலும் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை 7.30 மணியளவில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்ல வந்தார்.

    அண்ணா சிலை சிக்னலில் அவர் சிக்னலுக்காக காத்து இருந்தார். சிக்னல் விழுந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் செல்வதற்காக வலது புறம் திரும்பினார்.

    அப்போது காந்திபுரம் செல்லும் தனியார் பஸ் வந்தது. சிக்னலில் இந்த பஸ் காந்திபுரம் நோக்கி இடது புறமாக திரும்பியது. அப்போது மாணவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவர் மல்லிகை அர்ஜூன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் மாணவரை மீட்டு வேனில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மாணவர் மல்லிகை அர்ஜூன் பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பஸ் டிரைவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. உக்கடம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் நிற்காமல் இடது பக்கமாக திரும்பி சென்று விடலாம்.

    ஆனால் பீளமேடு, நவ இந்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சிக்னலில் நின்று தான் செல்ல வேண்டும். சில சமயம் காந்திபுரம் செல்லும் தனியார் பஸ்கள் வேகமாக வருவதால் சிக்னலில் நிற்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

    இதே போல் தான் இன்று காலையும் தனியார் பஸ் மோதி மாணவர் உயிரை பறித்து விட்டது. எனவே சிக்னல் பகுதியில் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பலியான மாணவர் மல்லிகை அர்ஜூன் தந்தை சிவசுப்பிரமணியன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    மாணவர் மல்லிகை அர்ஜூன் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்க முன் வந்தனர். ஆனால் விபத்தில் மாணவர் இறந்து விட்டதால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை. மாணவரின் தோல் மட்டும் தானமாக பெறப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×