search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance company employee died"

    கோவையில் இன்று காலை டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 44). இவர் கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக இருந்தார்.

    இன்று காலை அவினாசி ரோடு நவஇந்தியாவில் இருந்து லட்சுமி மில் சந்திப்புக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரத்தில் ஒரு தரைப்பாலம் உள்ளது.

    அங்கு வந்தபோது பின்னால் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி வந்தது. டீசல் லாரி சந்தோஷ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    ஹெல்மெட் அணிந்திருந்த அவர் சுதாரித்து எழுவதற்குள் லாரியின் பின்சக்கரம் சந்தோசின் தலையில் ஏறியது. இதில் ஹெல்மெட் நொறுங்கி அவரது தலை நசுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போக்குவரத்தை மாற்றுபாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் பிணமாக கிடந்த சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கோவை- அவினாசி சாலையான இதில் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர கார், வேன் அதிகம் செல்கின்றன.

    கோவை பஸ் நிலையத்தில் இருந்து நீலாம்பூர் பஸ் நிறுத்தம் வரை 15-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் உள்ளன. இருந்தபோதும் இந்த பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. சாலையோரம் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்று விபத்துக்குள் இந்த பகுதியில் நடக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ×