search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child kidnapping"

    குழந்தை கடத்தல் பீதியில் வடமாநில வாலிபர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    குழந்தை கடத்தல் பீதியில் அப்பாவிகள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலையில் ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்டார்.

    நேற்று முன்தினம் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்க்கும் ஒடிசா வாலிபர்கள் 3 பேர் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் நடந்து சென்றனர்.

    அப்போது தெருவில் வடிவீஸ்வரன்- வரலட்சுமி தம்பதியரின் மகன் அவிநாஸ் (4) விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் வட மாநில இளைஞர்கள் சாதாரணமாக பேச்சுக் கொடுத்து இருக்கிறார்கள்.

    இதை அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு மாணவன் பார்த்து இருக்கிறான். உடனே குழந்தையை கடத்தப் போகிறீர்களா? என்று சத்தம் போட்டுள்ளான். அதை கேட்டதும் விபரீதம் ஆகப் போகிறதோ என்று பயந்து அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.

    இதற்கிடையில் அவி நாசின் உறவினர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து வடமாநில வாலிபர்களை தேடினார். அப்போது தேனாம்பேட்டையில் சென்று கொண்டிருந்த 3 வாலிபர்களையும் தடுத்து சரமாரியாக தாக்கி இருக்கிறார். அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    குழந்தை கடத்துபவர்கள் என்று நினைத்து ரோட்டில் நின்றவர்கள் எல்லாம் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

    விசாரணையில் ஒருவர் பெயர் கோபால்சாகு (25), பினோத்பிகாரி (25) என்பதும் இருவரும் அண்ணாநகரில் தங்கியிருந்து மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி செய்து வரும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

    இதுபற்றி மைலாப்பூர் போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் கூறியதாவது:-

    குழந்தை கடத்தல் பீதி இதுவரை புறநகர் பகுதிகளில்தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் பரவி இருக்கிறது.

    ஒடிசா வாலிபர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என்ற பீதியில் தாக்கி இருக்கிறார்கள். உரிய நேரத்தில் போலீசார் சென்றதால் உயிருடன் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் சமூக வலைத் தளங்கள், வாட்ஸ் அப்களில் அதிகமாக பரப்பப்படுகிறது. தேவையில்லாமல் இந்த மாதிரி வதந்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரவ விடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    திருப்பத்தூரில் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

    இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.

    இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.

    ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி கொல்லத்தெரு பகுதியில் நேற்று மதியம் 5 பேர் கொண்ட கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கு வசித்து வரும் சிலர் கவனித்து, அவர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் 5 பேரும் அங்கிருந்து நைசாக தப்பித்து வேறு இடத்திற்கு சென்றனர். பின்னர், இரவு 8 மணியளவில் கருப்பூர் மேல் வீதியில் நின்று கொண்டிந்த 6 வயது குழந்தையை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நைசாக பேசி கடத்த முயன்றதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் வருவதை அறிந்த 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.

    இதனால் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கூறி பொதுமக்கள் அவரை தர்மஅடி கொடுத்து சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த நபரின் கைகளை கட்டி வைத்தனர். அவருக்கு வயது 30 இருக்கும் என தெரிகிறது.

    இதுபற்றி கருப்பூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தமிழ் மொழியில் பேசாமல் இந்தியில் பேசியதால் போலீசாருக்கும், அங்கிருந்த மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் தெரியவில்லை. அவருடன் வந்த 4 பேர் யார்? இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கூலிவேலை செய்ய வந்தார்களா? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குழந்தை கடத்தல் பீதியில் வாலிபரை பைக்கில் தூக்கிச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக பொன்னேரியில் 2 பேர் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊருக்குள் புகும் வெளியாட்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து பீதி நிலவுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை போக்க போலீசார் கிராமப்பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். குழந்தை கடத்தல் பீதி குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    என்றாலும் குழந்தை கடத்தல் பீதியில் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது. பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொன்னேரியை அடுத்த இருளிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை பார்க்கும் மெதூரைச் சேர்ந்த நண்பரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் பஸ் ஏறுவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லட்சுமணனிடம் விசாரித்தனர். ஆனால் அவரது விளக்கத்தை கேட்காத வாலிபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்தனர்.

    பின்னர் லட்சுமணனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை மோட்டார்சைக்கிளில் தூக்கிச் சென்று கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லட்சுமணனை தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து லட்சுமணனை மீட்டனர். அவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மெதூர் காலனியைச் சேர்ந்த சரண்ராஜ், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டதில் கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (65), இவரும் வெங்கடேசன் (வயது51). மயிலாப்பூர் கஜேந்திரன் (55) உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார் (34) சந்திரசேகர் ஆகியோரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.

    அங்கிருந்த பெண்கள், குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக கருதி கூச்சல் போட்டனர். அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உள்பட 5 பேரையும் சரமாரி தாக்கினர். இதில் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். மற்ற 4 பேரும் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து மூதாட்டி மற்றும் மற்றவர்களை தாக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அதன்படி தம்பு கொட்டான் பாறை, களியம் வேடகொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.

    மேலும், சந்தேகிக்கப்படும் 200 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகினர். கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

    அத்திமூர், கணேசபுரம், தம்புகொட்டான் பாறை, களியம், காமாட்சிபுரம், திண்டிவனம், இந்திராநகர், ஜம் பங்கிபுரம், தாளியார், காந்திநகர், ஏரிக்கொல் லைமேடு ஆகிய 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமங்களில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    போளூர் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 4 பேர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் ஊடுருவவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆய்வு செய்ததில் குழந்தை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் எங்கும் இல்லை.

    குழந்தை கடத்தல் கும்பல் என்று சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களும் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டம் அல்லது அதற்கு நிகரான வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.

    மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

    ×