search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாதவமூர்த்தி
    X
    யாதவமூர்த்தி

    திருப்பத்தூரில் வாட்ஸ்-அப்பில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய மேஸ்திரி கைது

    திருப்பத்தூரில் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

    இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.

    இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.

    ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×