search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blast"

    உளவுத்துறை எச்சரிக்கையை கவனித்து இருந்தால் குண்டு வெடிப்பை தடுத்து இருக்கலாம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதல் 8 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிர் இழந்தனர். 500 பேர் காயம் அடைந்தனர்.

    தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் காரணம் என்பது தெரிய வந்தது. அந்த இயக்கத்தினரை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக இந்தியா தகவல் தெரிவித்து இருந்தும், இலங்கை அரசு அதை அலட்சியப் படுத்தியதால்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    இது சம்பந்தமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இலங்கை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு இருக்கிறோம்.

    இந்த தாக்குதலை தடுக்காமல் விட்டதற்காக நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம்.

    இலங்கையில் ஒருங்கிணைந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு வி‌ஷயத்தில் பல விவகாரங்கள் இருக்கின்றன. தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலை அவர்கள் போலீஸ் மற்றும் தடுப்பு குழுக்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும். எனக்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.

     


    ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இது தடுக்கப்பட்டு இருக்கும்.

    இந்த வி‌ஷயத்தை பொறுத்த வரை உரிய அமைப்புகள் ஏன் சரியாக செயல்படவில்லை என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

    இது, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டது. இதில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து இருக்கிறார்.

    அதன் முடிவு வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். எனக்கு முன்கூட்டியே உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே, முன்கூட்டி வி‌ஷயம் தெரியாததால் இதுபற்றி வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

    தற்போது உளவுத்துறையினர் பல்வேறு தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாட்டின் பாதுகாப்பு குறித்து நானும், ஜனாதிபதியும் மந்திரிசபை கூட்டம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம்.

    எனக்கும், ஜனாதிபதிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இது போன்று நடந்ததாக சொல்வதை ஏற்க முடியாது. எனக்கு அவர்கள் தகவல் கொடுத்திருந்தால் நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பேன்.

    எனக்கு இதில் முதன்மை பொறுப்பு உள்ளது. நான் நாட்டின் தலைவன். எனக்கு உரிய தகவல் வந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.

    எல்லாத்துறையும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருந்தால் தாக்குதலை தவிர்த்து இருக்கலாம். அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

    இந்த தாக்குதலுக்கு எங்கள் அரசு எந்திரம் சரியாக செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.

    இருந்தாலும் இனி இன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறோம்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்குவது எங்களது கடமை. அதை செய்வோம். தற்போது கிறிஸ்தவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    நாங்கள் அவர்களோடு இருக்கிறோம். கார்டினால்கள் மற்றும் பாதிரியார்களை நாங்கள் சந்தித்து பேசினோம். அவர்களுடன் 3 மணி நேரம் இருந்தோம்.

    மேலும் தாக்குதலுக்கு எதிர்விளைவாக தங்கள் மீது தாக்குதல் நடந்து விடுமோ? என முஸ்லிம்களும் பயப்படுகிறார்கள். அவற்றையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

    இன, மத ரீதியாக பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது சிறு தவறு நடந்து விட்டது. இனிமேலும் அவ்வாறு நடக்காது. இந்த பிரச்சினையால் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    நாட்டின் பாதுகாப்பு திட்டங்கள் மாற்றி அமைத்து சீரமைக்கப்படும் என ஜனாதிபதி கூறி இருக்கிறார். இது சம்பந்தமாக சில திட்டங்களை அவர் முன் வைத்து இருக்கிறார். அது பற்றி நாங்கள் விவாதித்து இருக்கிறோம். சரியான நேரத்தில் அதை அமலுக்கு கொண்டு வருவோம்.

    என்னிடம் இருந்த சட்டம்- ஒழுங்கு துறையை நீண்ட காலத்துக்கு முன்பு ஜனாதிபதி எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

    சட்டம்-ஒழுங்கு துறைக்கு தனியாக ஒரு மந்திரி வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம்.

    ராஜபக்சே ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் இப்போது குறைபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.

    நாங்கள் பலவிதமான அரசுகளை கையாண்டு இருக்கிறோம். பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு இருக்கிறோம். விடுதலைப்புலிகளை ஒழித்து வெற்றி கண்டதற்கு அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகாதான் முக்கிய காரணம்.

    தற்போது பாதுகாப்பு வி‌ஷயத்தில் பெரிய தவறு நடந்து விட்டதாக பலரும் சொல்கிறார்கள். ஆனாலும், மீண்டும் கடுமையான நிலையை நாங்கள் எடுத்து இருக்கிறோம். மிகவும் ஆழமாக ஊடுருவி சென்று சம்பந்தப்பட்டவர்களை ஒடுக்குவோம்.

    தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையால் விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப் பெறுவார்கள் என்ற சூழ்நிலை ஏற்படவில்லை.

    இந்தியா - இலங்கை இடையே உளவுத்தகவல் பரிமாற்றம் நல்ல நிலையில் உள்ளது. இதில், எந்த பிரச்சினையும் இருப்பதாக கருதவில்லை.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார். #srilankablasts #RanilWickremesinghe

    இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #SriLankaAttacks

    போரூர்:

    போலீஸ் காவல் கட்டுப் பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான். தற்போது சென்னை மேட்டுக் குப்பத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளேன் என்று தெரிவித்தார்.

    அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண் கோயம்பேடு போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகர் பகுதியில் இருந்து பேசியது தெரிய வந்தது. மர்ம நபரை கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நெற்குன்றம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த மிரட்டல் ஆசாமி மைக்கேல் பிரீடி என்பவரை கைது செய்தனர்.

    அவர் அளித்த வாக்கு மூலத்தில் நான் அலுமினியம் பேப்ரிகே‌ஷன் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    உடனடியாக எனது மனைவியிடம் 100-க்கு தொடர்பு கொண்டு உன் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். பின்னர் மது அருந்தினேன். டி.வி.யில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்ததாலும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்ததாலும் நான் எனது செல்போன் மூலம் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடி குண்டு வைத்து உள்ளதாக கூறினேன் என்று தெரிவித்தார்.

    மேலும் என்னுடைய செல்போன் எண் பழைய வீட்டின் முகவரியில் இருப்பதால் போலீசாரால் என்னை பிடிக்க முடியாது என நினைத்தேன் என்றும் தெரிவித்தார். #SriLankaAttacks

    ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்ததாக பல ஊடகங்கள் மதிப்பிட்ட நிலையில் 253 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆரம்பகட்டத்தில் 25 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    பின்னர், 100, 120, 220 என பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது. இறுதி நிலவரப்படி 11 இந்தியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பலியானதாக கூறப்பட்டது. மொத்தம் 359 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த செய்திகளை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் பிரசுரித்திருந்தன.

    இந்நிலையில், இலங்கை அரசின் சுகாதாரத்துறை நிர்வாக இயக்குனர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்திரிகைகளில் வெளியானதுபோல 359 அல்ல. 253 பேர் தான் பலியாகி உள்ளனர். குண்டு வெடிப்பால் பல உடல்கள் மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனால் பலி எண்ணிக்கை தவறாக வெளியாகி உள்ளது. தற்போது, அனைத்து பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் வந்த பின்னர், உண்மையான பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கூட ஒரு கணிப்புதான். பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் பலி எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்புக்கு இலங்கை மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற தகவல்கள் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடுகிறது என கருத்து தெரிவித்துள்ளனர். #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
    இலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வேன் மற்றும் லாரி சுற்றி வருவதாக வெளியான உளவுத்துறை தகவலையடுத்து மக்கள் பீதியடைந்துள்ளனர். #SriLankablasts #explosiveslorry
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வேன், ஒரு லாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கொழும்பு நகருக்குள் இன்று நுழைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை டி.ஐ.ஜி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய அந்த வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    ஏற்கனவே மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்கள் இந்த செய்திகளால் பதற்றமும், பீதியும் அடைந்துள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் நடமாட்டம் தொடர்பாக 116 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். #SriLankablasts #explosiveslorry  
    இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. #SriLankablasts #Colomboblast

    கொழும்பு:

    இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.

    3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன.

    நேற்றும் வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. விமான நிலையம் அருகே 6 அடி நீளம் உள்ள பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை விமானப்படை வீரர்களால் செயல் இழக்க செய்யப்பட்டது.

    இலங்கையை உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

    இலங்கையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தெற்கு ஆசிய நாடுகள் இதுவரை சந்தித்திராத மிக கொடூரமான பயங்கர தாக்குதல் ஆகும். இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போவதாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கையை எச்சரித்து இருந்தன.

    ஆனால் இலங்கை அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உளவுத் துறை தகவல்களை மிக மிக அலட்சியமாக எடுத்துக் கொண்டனர். அதனால் இன்று மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

    தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 30 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிய தொடங்கி இருக்கிறது.

    நியூசிலாந்து நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் நடத்தியதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு தொழில் நுட்ப மற்றும் ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது.

    என்றாலும் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. வெடிகுண்டுகளை தயாரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளை அந்த இயக்கம் ஒருங்கிணைத்து செய்து கொடுத்துள்ளது.

    தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

    அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

     


    இலங்கையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த 8 குண்டு வெடிப்புகளில் 7 இடங்களில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த 7 தற்கொலை பயங்கரவாதிகளும் கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதலுக்கு வெளிநாட்டிலும், கொழும்பு புறநகரிலும் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

    இவர்களில் எத்தனை பேர் இலங்கைவாசிகள், எத்தனைபேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்பை இலங்கை நாடு கேட்டுள்ளது.

    முதல் கட்ட விசாரணையில் தற்கொலை பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்த நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இலங்கை உள்துறை மந்திரி ஆலவதுவாலா உறுதிப்படுத்தி உள்ளார்.

    அவர் கூறுகையில், “தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இளைஞர்கள். அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு புறநகரில் சாதாரண வீடுகளில் வசித்து வந்தவர்கள்.

    இவர்களை பயங்கரவாதிகள் மூளை சலவை செய்து அழைத்து சென்றுள்ளனர். வெளிநாடுகளில் இவர்களுக்கு தற்கொலை பயிற்சி அளித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

    நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்காக பெரிய அளவில் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்து இருந்தனர்.

    அந்த அடிப்படையில் தான் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

    இலங்கை தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் தற்கொலை பயங்கரவாதிகள் பயன்படுத்திய வெடி குண்டுகள் அனைத்தும் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். அவை அனைத்தும் ஆர்.டி.எக்ஸ்சால் தயாரிக்கப்பட்டவை. இதனால்தான் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த குண்டு தயாரிக்கப்பட்ட விதமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உளவுத் துறையினர் கருதுகிறார்கள். மாலத்தீவில் உள்ள தங்களது பயங்கரவாத ஆதரவாளர்கள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவி அவர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இதற்கிடையே இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பும் உதவிகள் செய்து இருப்பதாக இந்தியா கூறி உள்ளது. இது தொடர்பாக இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருடன் லஷ்கர் இ தொய்பா பங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களை அவர்கள் பாகிஸ்தானுக்கு அழைத்து ஆயுத பயிற்சி கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

    இதன் மூலம் இலங்கையில் காலூன்ற லஷ்கர் இ தொய்பா இயக்கம் தீவிரமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடக்கத்திலேயே கிள்ளி எறியும்படி இந்தியா கூறி உள்ளது.

    ஆனால் இலங்கை ராணுவத்தினர் இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருந்தனர். இந்த அலட்சியத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் பெரிய கைவரிசை காட்டி விட்டனர்.

    இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் இலங்கையில் ஒருவித பதட்ட நிலை நிலவுகிறது.

    இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சீனா, சுவிட்சர்லாந்து, ஆலந்து, ஜப்பான், போர்ச்சுக்கல் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பலியாகி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

    தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இலங்கை முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன. #SriLankablasts #Colomboblast

    சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Sudan #ScrapMetal #Blast
    கார்டூம்:

    சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.   #Sudan #ScrapMetal #Blast 
    சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். #ChinaBlast
    பீஜிங்:

    வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #ChinaBlast
    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ரூ.2 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #Ajmerblast
    அகமதாபாத்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த மூன்று நோன்பாளிகள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சுவாமி அசீமானந்தா, பவேஷ் பட்டேல் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மூன்றுபேர் தலைமறைவாக இருக்கின்றனர். கடந்த 2007-ம் ஒருவர் கொல்லப்பட்டார். இவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கு விசாரணையின்போது 149 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் பவேஷ் பட்டேல் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போலீசாருக்கு பயந்து கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுரேஷ் தாமோதரன் நாயர் என்பவரை குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் அம்மாநில பயங்ரவாத தடுப்பு படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    தலைக்கு  2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இவர், அஜ்மீர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். #Ajmerblast  
    சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinaBlast #CarFactoryBlast
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டாங்பெங் பகுதியில் கார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இந்திய நேரப்படி 11.40 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.



    இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #ChinaBlast #CarFactoryBlast
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்தார். 

    மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    திருப்பதி அருகே கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ஏர்பேடு ராஜில கண்டிகா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு ரெட்டி (வயது 30) விவசாயி. இவரது மனைவி புஜ்ஜியம்மா (26). இவர்களுக்கு பவ்யா (6), நிதின் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தன.

    நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு 4 பேரும் வீட்டில் தூங்கினர். கியாஸ் இணைப்பு ஆப் செய்யாமல் இருந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் கியாஸ் பரவியுள்ளது.

    இதனை அறியாத சீனிவாசலு ரெட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மின்விளக்கை போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தார். அப்போது வீடு முழுவதும் பரவியிருந்த கியாஸ்சால் தீப்பற்றியது. வீடு முழுவதும் தீ பரவியது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்ட படி வெளியே வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள். அங்கு ஓடிவந்தனர். தீ எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீயின் அளவு அதிகரித்தது. இதனால் வீட்டின் அருகே இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதில் 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து ஏர்போடு தீயணைப்பு நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து காளகஸ்தி டி.எஸ்.பி. ராஜய்யா, ரேணிகுண்டா, திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast



    தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். #Kanchipuram #Diwali
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வருபவர் மத்தின்பாய் (வயது 52). இவரது மனைவி தாஹிராபானு (45), மகன் முஸ்தாக் (22). தீபாவளி பண்டிகையையொட்டி மத்தின்பாய் வேலூர் மாவட்டம் நெமிலியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கிவந்தார். அவைகளை சில்லரை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.

    அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என கூறப்படுகிறது. தாஹிராபானுவும், அவரது மகன் முஸ்தாக்கும் நேற்று மதியம் அந்த பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 3 மணியளவில் திடீரென அந்த பட்டாசுகள் தீப்பிடித்துக் கொண்டன. இதனால் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து நாலாபுறமும் சிதறின. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் தாஹிராபானு, முஸ்தாக் ஆகியோர் மீது தீப்பற்றி உடல் கருகியது. சிறிது நேரத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த வெடி விபத்தில் அருகில் வசிக்கும் மஸ்தான் (47) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்துவிழுந்தது. இதில் மஸ்தான் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அந்த வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்த அவரது தாய் சர்புதீன்பீபி (75) படுகாயம் அடைந்தார். பின்னர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த 2 வீடுகளிலும் தாய்-மகன் பலியாகியுள்ளனர்.

    பயங்கர வெடி சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    இந்த வெடி விபத்தில் மத்தின்பாய் வீடும், மஸ்தான் வீடும் பெருத்த சேதமடைந்தன. மேலும் எதிர்வீட்டில் உள்ள ஜன்னல்களும் நொறுங்கின.

    காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் சம்பவ இடத்தில் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் அவர்களிடம் உள்ளதா? வெடி விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்தின்பாயை போலீசார் கைது செய்தனர்.

    நாட்டு வெடி வகை பட்டாசு என்பதால் உராய்வு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனாலும் தீப்பிடித்ததற்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்களும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இந்த கோர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, தாசில்தார் காஞ்சனமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.மரகதம்குமரவேல் எம்.பி., மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    காஞ்சீபுரத்தில் பட்டபகலில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×