search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "antonio guterres"

    இலங்கை அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். #UNChief #AntonioGuterres #SriLanka
    நியூயார்க்:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் தனது பதவிநீக்கம் சட்டவிரோதமானது எனக்கூறிய ரனில் விக்ரமசிங்கே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தினார்.

    ஆனால் இதற்கு மறுத்த அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வலுத்து வருகிறது. இலங்கையின் இந்த திடீர் நெருக்கடி நிலைக்கு உலக நாடுகளும் கவலை வெளியிட்டன.



    இதைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் ஆலோசனை நடத்திய அதிபர் சிறிசேனா, நாடாளுமன்ற முடக்கத்தை திரும்ப பெற்றார். எனவே நாடாளுமன்றம் 5-ந் தேதி (நாளை) கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மறுத்தனர்.

    இதனால் நாடாளுமன்றம் கூடுவதில் சந்தேகம் இருந்து வந்த நிலையில், சபாநாயகர் நேற்று முன்தினம் அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் நாடாளுமன்றத்தை 7-ந் தேதி (புதன்கிழமை) கூட்டுவதற்கு அதிபர் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றம் கூடுவது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு கவலை தெரிவித்த குட்டரெஸ், அங்கு அனைத்துக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்குவதற்கு உதவ முன்வந்தார்.

    மேலும் இலங்கையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குட்டரெஸ், அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி விரைவில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் சிறிசேனாவை வலியுறுத்தினார்.

    இதைப்போல இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியான ஹனா சிங்கரும் அதிபர் சிறிசேனா, சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, ஆன்டனியோ குட்டரெசின் செய்தியை அளித்தார்.

    இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு போதுமான உறுப்பினர்களின் ஆதரவு தற்போது இருப்பதாக ராஜபக்சே கூறியுள்ளார். ரனில் விக்ரமசிங்கே கட்சியை சேர்ந்த குறைந்தது 5 உறுப்பினர்களாவது தன்னுடைய அணிக்கு மாறி இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப்போல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனியாக செயல்பட்டு வரும் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் எனவும், அதனால் தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய சேவை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்கள் 2 பேர் மற்றும் முல்லைத்தீவு, மன்னாரை சேர்ந்த தலா ஒரு எம்.பி. என மேலும் 4 பேரும் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக தமிழ் எம்.பி. ஒருவர் நேற்று முன்தினம் ராஜபக்சே அணிக்கு தாவி, மந்திரியாக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    225 உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் ரனில் விக்ரமசிங்கேவின் கட்சிக்கு 106 உறுப்பினர்களும், ராஜபக்சே, சிறிசேனா கூட்டாணிக்கு 95 எம்.பி.க்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #UNChief #AntonioGuterres
    நியூயார்க்:

    ரஷியாவுடன் 1987-ம் ஆண்டு செய்து கொண்ட ஐ.என்.எப். ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்படுவதாக குற்றம் சாட்டி, இந்த முடிவை டிரம்ப் அறிவித்தது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இது ஆயுதப்போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஆனால் இந்தப் பிரச்சினையை அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “ ஐ.என்.எப். ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூறி உள்ள கருத்தை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிந்துள்ளார். அதே நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

    இதற்கிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ போய்ச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #UNChief #AntonioGuterres 
    சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருதை ஐநா பொதுச்செயலாளர் இன்று வழங்கினார். #PMModi #ChampionsoftheEarth #AntonioGuterres
    புதுடெல்லி:

    சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.
     
    இந்த ஆண்டு (2018) உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்து உள்ளது.

    சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், மேலும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயல்பட்டு வருவதற்காகவும் இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கலந்துகொண்டு மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதினை வழங்கி கவுரவித்தார்.  #PMModi #ChampionsoftheEarth #AntonioGuterres
     
    ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் சர்வதேச அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருத்தரங்கில் பங்கேற்க 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார். #UNSecretaryGeneral #AntonioGuterresIndiavisit #AntonioGuterres
    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள்  IORA என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் இரண்டாம் தேதி புதுடெல்லியில் நடைபெறுகிறது.

    சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று இதற்காக நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அக்டோபர் 1-ம் தேதி இந்தியா வருகிறார்.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளும், பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டின் துவக்க நாளுமான அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெறும் சர்வதேச துப்புரவு கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்கிறார்.

    மேலும், இந்தியாவின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அக்டோபர் மூன்றாம் தேதி அவர் துவக்கி வைக்கிறார்.


    கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே ஆகியோரின் முன்முயற்சியில்  ISA எனப்படும் சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பில் இதுவரை 68 நாடுகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #UNSecretaryGeneral #AntonioGuterresIndiavisit  #AntonioGuterres
    ஐ.நா சபையின் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் சில இந்த ஆண்டுக்கான நிதியை சரிவர வழங்காததால், கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதாக ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். #UN
    நியூயார்க்:

    உள்நாட்டுப்போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலும், தீவிரவாதத்தால் நிலைகுலைந்துப் போய்  கிடக்கும் நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் முகாமிட்டு கடமையாற்றி வருகின்றனர்.

    இந்தப் படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 10 நாடுகளில் 7 ஆயிரத்து 798 அமைதிப்படையினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர வறுமையால் வாடும் சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால், பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு முகாம்கள் அமைத்து தருவது போன்றவற்றை ஐ.நா செய்து வருகிறது.

    ஐ.நாவின் செயல்பாடுகளுக்கு அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் இணைந்து நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி சரிவர வழங்கப்படாததால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    அதே வேளையில், இம்மாதம் 26-ம் தேதி நிலவரப்படி, இந்தியா உள்பட 112 நாடுகள் தங்கள் நிதியை வழங்கிவிட்டதாகவும், அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பிரேசில், எகிப்த், இஸ்ரேல், மாலத்தீவுகள், செய்ச்செலெஸ், சவுதி அரேபியா, சிரியா, சூடான் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 81 நாடுகள் இந்த ஆண்டுக்கான நிதியை செலுத்தவில்லை எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, நிதி வழங்காத நாடுகள் உரிய நேரத்தில் நிதி வழங்கி, தனது பணியை ஐ.நா தொடர வழிவகை செய்யுமாறு முறையிட்டுள்ளதாகவும், ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா சபை இயங்குவதற்கு தேவையான வருடாந்திர வரவு செலவு தொகையான சுமார் 5.4 பில்லியன் கோடி டாலர்களில் 22 சதவிகிதத்தை அமெரிக்கா ஏற்றுள்ளது. மேலும், 7.9 பில்லியன் டாலர்களில் 28.5 சதவிகிதம் தொகையை அமெரிக்கா தனது பங்களிப்பாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UN
    ×