என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Koniyamman Temple"
- ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
- தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.
கோவை:
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.
8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
- கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.
- துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.
- திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.
துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.
ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.
திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க
வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து,
துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.
அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டு, இறுதியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும்,
திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து
அதை காணிக்கையாக செலுத்துவர்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ
செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.
சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர்.
இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை.
வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும்,
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர்.
மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு.
அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.
உப்பு மஞ்சள் வாங்குதல்
திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.
கோவை மக்கள் பெரும்பாலும் உப்புக்கூடை மாற்றி கொள்ளுவதன் மூலமாக தான் திருமணத்தை உறுதிப்படுத்துகின்றனர்.
இன்றைய தினத்தில் கோவையை பொறுத்த வரையில் உப்பு மஞ்சள் வாங்குதல் என்றாலே கோனியம்மன் கோவில்தான்
என்று சொல்லும் அளவிற்கு இங்கு தான் முகூர்த்த நாட்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் இருவரும்
தங்கள் சுற்றத்தாருடன் ஒன்று கூடி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து உப்புக்கூடைகளை மாற்றி
தங்கள் இல்லத்திருமண பந்த நிகழ்வினை உறுதிப்படுத்தி செல்கின்றனர்.
- ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.
அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர்.
ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும்.
நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு
பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவமும் காட்சி தருவர்.
இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.
1. ஆடிவெள்ளிக்கிழமை
2. தை வெள்ளிக்கிழமை
3. நவராத்திரி
4. மாதப்பிறப்பு
5. பவுர்ணமி பூஜை
6. அமாவாசை
7. கார்த்திகை
8. தீபாவளி
9. தனுர் மாத விழா
10. தை பொங்கல்.
- வசந்த விழாவுடன் மாசிமாத தேர்த்திருவிழா என்னும் பெருந்திருவிழா நிறைவு எய்துகின்றது.
- அந்நாள் யாவர்க்கும் மகிழ்ச்சி நிறைந்த இன்ப நாளாகும்.
வசந்த உற்சவத்தில் திருக்கோவிலுக்குள் உற்சவரை புறப்பாடு செய்வித்து வசந்த மண்டபத்தில் அம்மனை எழச்செய்து வணங்கி மகிழ்வர்.
வசந்த விழாவுடன் மாசிமாத தேர்த்திருவிழா என்னும் பெருந்திருவிழா நிறைவு எய்துகின்றது.
திருவிழா நாட்களில் நாள்தோறும் பக்தி சொற்பொழிவுகளும் இன்னிசை கச்சேரிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட திருவிழா நாட்களில் ஊரெங்கும் உள்ள வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பு பூசி சாணமிட்டு மொழுகி கோலமிட்டு,
வண்ணம் பூசி, ஒப்பனை செய்து, ஆடவர், மகளிர், குழந்தைகள் அனைவரும் கோவிலுக்கு வந்து
கோனியம்மனை தரிசித்து கொண்டாடுவார்கள்.
அந்நாள் யாவர்க்கும் மகிழ்ச்சி நிறைந்த இன்ப நாளாகும்.
பல்பகையாலும் பாரித்தும் பூரித்து நனி சிறந்தும், நாகரிகத்தின் நல்லுறைவிடம் என நல்லோரால் நாமணக்க புகழ்ந்து பேசப்படுகின்ற,
நமது கோவன்புத்தூரில் காப்பு தெய்வமென்றும், கிராம தேவதை என்றும், கோவை அரசி என்றும் கூறப்படுகின்ற,
கோனியம்மனால் கோவன்புத்தூருக்கும் அதனுள் உறையும் மக்களும் மாண்புடன் வாழ்கின்றனர் என்றால்
அது தெய்வத்தின் அருட்கருணை என்று தான் கூறுதல் வேண்டும்.
- போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.
- சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.
தெப்ப திருவிழாவின்போது இரவு இந்திர விமான பல்லக்கில் உற்சவமூர்த்தியை புறப்பாடு செய்து,
ராஜவீதி, ஒக்கிலியர் வீதி, ஐந்து முக்கு, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, சலீவன் வீதி வழியாக,
அருள்மிகு வேணுகோபால் சுவாமி திருக்கோவிலை அடைந்து அதிகாலை 4 மணியளவில்,
அங்குள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடத்துவர்.
போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.
சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.
தெப்பம் ஆடிய பின்னர் தேர்நிலை திடலில் வாணவேடிக்கை நடைபெறும்.
அதன்பின்பு கோவிலில் சிறப்பு அபிஷேகமும் தரிசனமும் நிகழ்வுறும்.
மாலையில் கொடியிறக்கம் நடைபெறும்.
- திருக்கோவிலின் பெருந்திருவிழாவான தேர் திருவிழா 14 நாட்கள் சிறப்புற நடைபெறுகின்றது.
- மாசிமாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது.
திருக்கோவிலின் பெருந்திருவிழாவான தேர் திருவிழா 14 நாட்கள் சிறப்புற நடைபெறுகின்றது.
மாசிமாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது.
மாசி மாதம் 2வது செவ்வாய்க்கிழமை அக்னி சாட்டு அன்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
மாசி மாதம் 3வது செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவமும், அதற்கடுத்த 3வது புதன்கிழமையன்று திருத்தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
அதையடுத்து இந்திர விமான தெப்பம், மறுநாள் தீர்த்தவாரி கொடியிறக்கம் என்று விழாக்கள் நடந்து, வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு எய்துகின்றது.
திருவிழாவில் கொடியேற்றத்திற்கு மறுநாள் முதல் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம்,
காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம், திருத்தேர், குதிரைவாகனம், இந்திர விமானத்தெப்பம்
ஆகியவற்றில் அருள்மிகு கோனியம்மன் உலாவரும் காட்சி மனதை கொள்ளை கொள்ளும் தன்மை உடையனவாகும்.
திருவிழாவில் முதல் வெள்ளிக்கிழமையன்று மகளிர் கலந்து கொள்ளும் திருவிளக்கு வழிபாடு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
கோவை நகரமே திரண்டு வந்ததுபோல திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.
தேர்திருவிழாவின்போது ராஜவீதியில் இருக்கும் தேர்நிலை திடலில் இருந்து திருத்தேர் சரியாக மாலை 4 மணிக்கு
புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுணடர் வீதி வழியாக சென்று
மீண்டும் தேர் நிலை திடலை வந்து சேரும்.
கோவையில் நடைபெறும் ஒரே தேர்த்திருவிழா கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவாதலின்,
கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாது அருகே உள்ள கிராமங்களில் இருந்தும்
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அணி திரண்டு விழாக்காண வருவர்.
தேர்திருவிழாவன்று வாகன போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டு தேரோடும் வீதிகள் தூய்மையுடன் காணப்படும்.
- அம்மனின் சிலை உருவம், சுமார் மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் உடையது.
- நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமுடையது.
கோசர் ஆட்சி மறைந்த பின், சில காலம் கோவிலில் பூசை இல்லாமலிருந்ததால் அதன்பின்,
கொங்கு நாட்டை கைப்பற்றிய மைசூர் அரசர்களில் ஒருவர் கோவில் பூசையின்றி இருப்பதை கண்டு மனம் நொந்து,
மகிஷாசுவர்த்தினிபோல் ஒர் கற்சிலையை உருவாக்கி ஆகம விதிப்படி அச்சிலையை கோவிலின் மூலஸ்தானத்தில் கோவில் கொள்ள செய்தார்.
அரசர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கோனியம்மனுக்கு மானியமாக பூமிகள் விட்டும்,
தேர்த்திருவிழாவும், பூசையும் தப்பாமல் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.
மூலத்தானத்தில் வடக்கு பார்த்து கோவில் கொண்டுள்ள அம்மனின் சிலை உருவம், சுமார் மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் உடையது.
அம்மனது தோற்றம் முகத்தில் மூண்ட கோபமும், உக்கிரமான பார்வையும் தம்முடன் எதிர்த்து சண்டையிட வந்த
கொடிய துட்டனை தேவி அவன் பலத்தையடக்கி வீரவாளால் சிரத்தை வெட்டி வீழ்த்தி
வீரவாகை சூடியது போல் விளங்குகின்றது.
மர்த்தினியின் வலக்கைகள் நான்கிலும் சூலமம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஆகிய 4 ஆயுதங்களும் உள்ளன.
உலா வரும் அம்மனின் திருமேனி வலக்கரங்களில் சூலம், வாள், இடத்திருக்கரங்களில் உடுக்கை, அக்னி எனத்தாங்கி
நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமுடையது.
மூலத்தான திருவுருவத்தில் இடச்செவியிலே தோடும், வலச்செவியிலே குண்டலமும் காணப்படுவதால்
கோனியம்மன் ஏனைய சாதாரண சக்தியன்று, அர்த்தநாரீஸ்வரர் தொடர்பு கொண்ட வீரசக்தியும் ஆவாள்.
கோசர்களால் பிரதிட்டை செய்ய பெற்ற கோனியம்மன் சிலை தமிழக சிற்ப சம்பிரதாயத்தை ஒட்டி சித்தரிக்க பெற்றது.
அத்திருவுருவம் பராசக்தியின் பலகோடி உருவங்களில் ஒரு வகையை சார்ந்திருந்தது.
சிரசில் கிரீடமும், ஆயுதங்களேந்திய நான்கு திருக்கரங்களும், அழகமைந்த திருமேனியும் நின்ற கோலமாயும்
விளங்கிய அச்சிலை, கோசர் ஆட்சிக்கு பின்னர், படையெடுப்பு, நாடு கவரும் ஆசை, மதவெறி போன்ற
பல காரணங்களால் துண்டிக்க பெற்று மேற்பாகத்து சிரசு மட்டும் இன்னும் இன்றும் ஆலயத்தின் மேற்புறத்தில்
ஆதிகோனியம்மன் என்ற பெயரில் அருளழுகும் அளவிலா அழகு ததும்பும் மாகாளியம்மன் சிலையுடன்
சப்த கன்னியர்களுடன் வைக்கப்பெற்று நித்தியபடி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.
- மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று விளங்குகிறாள்.
- தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு காத்து வருகின்றாள்.
கனிந்த உள்ளமும் கருணைக்குணமும் படைத்து அருள் வடிவு தாங்கிய அன்னை பராசக்தியின் போர்முக வடிவான
துர்க்காதேவி கோட்டைகளில் காவல் தெய்வங்களாக விளங்குவதோடன்றி எவரும் கும்பிட்டு தொழுதெழும்
கோவில் தெய்வங்களாகவும் விளங்கி தம்மை வழிபடும் அன்பர்கள் அனைவருக்கும்
வேண்டியன வேண்டியவாறே விரைந்தளிக்கும் வித்தக செல்வியாகவும் ஆனதால்,
சிதம்பரத்தில் தில்லை காளியாகவும், தொண்டை நாட்டு திருவாலங்காடு மற்றும் கல்கத்தாவில் (காளி கோட்டம்) காட்சிமிக்க காளிதேவியாகவும், மும்பாயில் மொம்பாதேவியாகவும்,
அண்மை மாவட்டமாகிய ஈரோட்டில் பண்ணாரி மாரியம்மனாகவும் பெயரும் புகழும் பரவி விளங்குவது போல,
மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று பெருமையுடன் விளங்குகிறாள்.
முன்பு ஒரு சிலர் வழிபடும் தெய்வமாக இருந்த கோனியம்மன்,
ஊர் முழுவதும் ஒருங்கே கூடி கொண்டாடும் நகர் தெய்வமாக பெருமை சிறந்து விளங்குகிறாள் இன்று.
தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு பல்லாண்டுகளாய் காத்து வருகின்றாள்.
இதனால் இன்றும் நோய் வந்தாலும், வைசூரி, காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டாலும்
கோனித்தாயை நம்பி அவள் திருவடிகளே துணை என்று நம்பி பூசிப்போர்
மாவிளக்கேற்றியும் பொங்கற்படையலிட்டும், அகங்குளிர அபிஷேக ஆராதனை புரிந்தும்,
கும்பம் தாளித்து கொண்டாடியும் காணிக்கை செலுத்தியும் வருவதனால் பல நன்மைகளை அடைகின்றனர்.
- தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.
- கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.
கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும்.
தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.
இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் "அரசர்க்கரசி" அல்லது "அரசிக்கரசி" எனவும் பொருள் கொள்ளலாம்.
நன்னூற் சூத்திர வாயிலாக ஆ,மா,கோ,வை வணையவும் பெறுமே.
கோ என்னும் சொல் கோன் என்றாயிற்று.
கோன்-ஆண் பால், கோனி-பெண்பால் ஆதலின் கோனியம்மன் என்றாயிற்று.
கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.
அவ்வம்மையே ராஜராஜேஸ்வரி எனக்கூறினும் சால பொருந்தும்.
சங்க காலத்து கோசர்கள், மண் கோட்டையிலும், ஊர்க்குடிகளும் படை வீரர்களும் பேட்டையிலும் வசித்தனர்.
இப்போது கோட்டை மேடு என்று வழங்கப்படும் இடம் தான் அக்காலத்தில் மதில்களோடும், அகழிகளோடும் விளங்கியுள்ளது.
இப்போது இருக்கும் ஈசுவரன் கோவிலும், சுப்ரமணியர் ஆலயமும் கோட்டைக்குள்ளும் கோனியம்மன் ஆலயம் கோட்டைக்கு வெளியிலும் அமைந்திருந்தன.
சேரன் செங்குட்டுவன் வடக்கே கற்புடைதேவி கண்ணகிக்கு கற்சிலை கொணர படையெடுத்து சென்றபோது கோவன்புத்தூரும், கோட்டையும் சிதைந்தன.
அதன் விளைவாக கொங்கில் கோசர் ஆட்சியும் மறைந்தது.
- பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
- மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.
பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும்,
அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து,
தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும்
நம் முன்னோர் வகுத்த வழியாகும்.
இவ்வாறு தான், காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன்
தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோயிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு,
அவனும் அவன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு, விழாசெய்தும் கொண்டாடினார்கள்.
இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில்,
சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.
மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.
பல்லாண்டுக்கு பின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க,
ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.
அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து
அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.
அக்கோயிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.
- கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
- கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.
வளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈஸ்வரன் கோவில் என்ற
இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.
3 கோவில்கள் 3 கண் போலவும் அதில் கோனியம்மன் திருக்கோவில் நடுவில் உள்ள நெற்றிக்கண் போலவும் அமைந்துள்ளது.
கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.
கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாகவும், காவல் கடவுளாகவும், வணங்கி வழிபாடு செய்வோர்க்கு அருளும்,
திருவருட் சக்தியாகவும், சாந்தி துர்க்கா பரமேஸ்வரியாகவும்
கோனியம்மன் திருவருட் பொலிவுடன் விளங்குகின்றாள்.
சைவாகம விதிப்படி தமிழகம் முழுக்க எந்த சிவாலயம் எடுப்பித்தாலும் அதன் வடவெல்லை காவல் தெய்வம்
காளி அல்லது கொற்றவை அல்லது பிடாரியேயாகும்.
இப்பெண் தெய்வம் அன்னை பராசக்தியின் கோப சக்தியான ஒரு கூறு என நூல்கள் கூறும்.
அக்கூறே உலக உருண்டைகளை பந்தாக விளையாடும் ஆற்றலை இறைவியிடம் பெற்றது என்றால்
அன்னை பராசக்தியின் பெருமையும் ஆற்றலும் உயிர்களால் அளவிட முடியுமா?
மேற்கு காவல் தெய்வம் மகாவிஷ்ணுவே, கிழக்கிற் பெரும்பாலும் நேர்பார்வையாதலின் கணேசரோடு விளங்குவது வழக்கமாகும்.
இவ்வாறுள்ள சைவாகம விதிப்படி அமைந்த துர்க்கா தேவியே நம் கோனியம்மையாகும்.
கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.
கோட்டை ஈசுவரன் ஆலயம் தான் அது.
அவ்வாலயத்து இறைவன் சங்கமேஸ்வரர், அம்மை அகிலாண்டேஸ்வரி.
தெற்கு காவல் தெய்வம் மகாசாஸ்தா ஆவார்.
சிவபிரானின் புருஷ சக்தியாகிய திருமால் மோகினியாகிய பெண்ணரசியாக நின்றபோது இறைவன் பேரழகில்
தம் நெஞ்சை பறிகொடுத்து பெற்ற பிள்ளையாகிய மஹாசாஸ்தாவே ஐயப்பன் ஆவர்.
இதற்கு ஆதாரம் சுந்தரபுராணம் மகாசாத்துப்படலம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்