search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Masithi festival"

    • ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
    • தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    கோவை:

    கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    ×