search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant"

    • அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
    • தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வறண்டு போயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீா் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளி யேறத் தொடங்கியுள்ளன.

    அதன்படி தமிழக எல்லைக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.

    உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:- வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன. அங்கும் நீா்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீா்வு கிடைக்கும் என்றனா்.

    • கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
    • காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    கவுண்டம்பாளையம்:

    கோவையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. சில நாட்களாக கோவையில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகள், வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரையும், அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வருகிறது.

    வனவிலங்குகளின் தாகத்தை போக்குவதற்காக வனத்துறை சார்பில் வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் தாகத்திற்காக தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளனர்.

    அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை ஊர் பொதுமக்கள் நிரப்பி வைத்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அந்த தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு சென்று வருகின்றன.

    நேற்று மாலை குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    அந்த யானைகள் ஊர் எல்லையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஆனந்தத்துடன் அதனை நோக்கி ஓடி வந்தன. பின்னர் யானைகள் தண்ணீரை குடித்ததுடன், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்து கொண்டது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது.
    • யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் 9/6 சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் என்பதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது. சில நேரம் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை-மூணாறு சாலை பகுதிக்கு வருகின்றன. யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும். பின்னர் வாகன ஓட்டிகள் சென்றுவிடலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.

    இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.
    • வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்துவருகின்றன.மேலும் இந்த வனப்பகுதியில் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் கார், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த வனப்பகுதி வழியாக சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதே போல் அந்தியூர் பர்கூர் வனப்பகுதி பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வறண்டு வருகிறது. மேலும் வெயிலினால் மரம், செடிகள் காய்ந்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியேறும் யானைகள் ரோட்டில் உலா வருகிறது. இந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    மேலும் பர்கூர் வனப்பகுதி வனவிலங்குகள் வனப்பகுதிகளுக்குள் உள்ள வனக்குட்டையில் தண்ணீரை குடித்தும், யானைகள் தண்ணீரை மேலே தெளித்தும் வெயிலின் வெப்பத்தை தனித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வனக்குட்டைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் நிலையும் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் ஆங்காங்கே உள்ள வனக் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தையும் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று தன்னல ஆர்வலர்களும், பொது மக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே போல் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், சிறுத்தை, புலி, மான், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தாளவாடி, தலமலை வனப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகின்றன. மேலும் யானைகள் அருகே உள்ள வன கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்புகள் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் ரோட்டில் சுற்றிதிரியும் யானைகளை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும் வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.

    எனவே வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தெந்தரவு செய்ய கூடாது. மேலும் ரோட்டில் திரியும் வன விலங்குகளை செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானையின் கால்பந்து விளையாட்டை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர்.
    • வீடியோவை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    யானை ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டின் சகுலியா பகுதியில் யானை ஒன்று சாலையில் நடந்து செல்கிறது.

    ராம்லால் என்று அன்புடன் அழைக்கப்படும் அந்த யானை கால்பந்தை உதைத்து விளையாடுவதும், தும்பிக்கையால் பந்தை தூக்கி வீசுவது, பின்னர் அந்த பந்தை எடுத்து விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    மேலும் யானையின் கால்பந்து விளையாட்டை அப்பகுதி பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன.
    • யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதேப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கொளந்தையப்ப கவுண்டர் மகன் மாதையன் (வயது 60). விவசாய கூலித்தொழிலாளி.

    இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

    அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.

    இந்த நிலையில் மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கி உள்ளது. இதனால் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே பலியாகினார்.

    இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும், போலீசாருக்கும் நேற்று 4 மணி அளவில் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மாதையன் சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை.

    எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

    பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
    • இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அந்த மாநிலத்தின் பாரம்பரியமாக உள்ளது. இதற்காக மாநிலத்தின் பெரும்பாலான கோவில் வளாகங்களிலேயே பிரத்யேகமாக யானைகள் வளா்க்கப்படுகிறது.

    இதற்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்தபடி இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு கோவில் விழாக்கள் உள்பட எந்த சடங்குகளிலும் இனி யானை உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என மாநிலத்தில் முதல் முறையாக திருச்சூா் மாவட்டம் இரிஞ்சாடப் பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா் கோவில் நிா்வாகம் முடிவெடுத்தது.

    அதன்படி அந்த கோவில் விழாக்களில் கடந்த ஆண்டு முதல் இயந்திர யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 2-ஆவது கோவிலாக கொச்சி திருக்கயில் மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

    கோவில் நிா்வாகத்தின் அந்த முடிவை பாராட்டும் விதமாக, கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து பரிசளித்துள்ளனா். 'மகாதேவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர யானை, இனி கோவில் விழாக்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாதேவன் இயந்திர யானை, கோவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து நடிகை பிரியாமணி, 'தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நமது கலாசார நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்தலாம்' என்றாா்.

    இது குறித்து மாகதேவர் கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'மனிதா்கள் போல் தங்கள் குடும்பத்துடன் இணைந்து சுதந்திரமாக வாழவே எல்லா விலங்குகளையும் கடவுள் படைத்தாா். அந்த வகையில், கோவில் விழாக்களில் இயந்திர யானையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சிதான்' என்றனா்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
    • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

    கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×