search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arunachaleswarar"

    • எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

    பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத்தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்ற தலம்.

    ஐந்து முகமாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை மலையை சுற்றி வரும்போது முதலில் ஓர் முகமாக காட்சியளித்து இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும், அடுத்து இரண்டு முகமாக (அர்த்தநாரீஸ்வரராக) ஆண், பெண் சமமே என்ற தத் துவத்தையும் விளக்குகிறது. சூல முகமாக (மூன்று முகம்) காட்சி தந்து மும்மூர்த்தியாக விளங்கி படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சதுர்முக (நான்கு முகம்) மலையாக காட்சியளித்து வேதங்கள் நான்கு என்பதை விளக்குகிறது. பஞ்ச முகமாக தரிசனம் தந்து பஞ்ச பூதங்கள் கொண்ட மலை என்பதை உணர்த்தும் வகையில் அமைந் துள்ளது திருவண்ணமலை.

    பிரச்சினைகள் நீங்கும்

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலைப் பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    • தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதில் இருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

    முன்னதாக 9-ந் தேதியன்று மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனையும், பராசக்தி அம்மனையும் படத்தில் காணலாம்.

    நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்திலும், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் தனித்தனி வாகனத்தில் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    மஹோதய புண்ணிய காலத்தை முன்னிட்டு அய்யங்குளத்தில் நடந்த தீர்த்தவாரியில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் மற்றும் தீர்த்தவாரிகள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இங்கு தை அமாவாசை தினத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் அருணாசலேஸ்வரர் அய்யங்குளத்தில் எழுந்தருள்வார். தை அமாவாசை தினத்தில் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

    இந்த ஆண்டு தை அமாவாசையானது சோமவாரமான திங்கட்கிழமையில் வந்தது புனிதமாக கருதப்படுகிறது. இது மஹோதய புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும். அப்போது தீர்த்தவாரி நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் சாமியும் அம்மனும் திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அய்யங்குளத்தில் சிவாச்சாரியர்கள் மூலம் சாமி சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை கண்டு தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். தீபாராதனை காண்பித்ததும் அவர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

    அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மேலும் அய்யங்குளத்தின் அருகில் உள்ள அங்காளம்மன், பச்சையம்மன், ரேணுகாம்பாள் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவாக கொண்டு வரப்பட்டது.

    கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி இதேபோல் அய்யங்குளத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்களின் நெருக்கடியால் 4 பேர் குளத்திற்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர். எனவே அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அய்யங்குளத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பக்தர்கள் செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தீயணைப்பு வீரர்கள் சிறிய படகு மூலம் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அய்யங்குளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
    திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-
    அண்ணாமலையார் அக்னியில் இருந்து தோன்றியவர். தீ பிழம்பாக இருந்து பிறகு சிவனடியார்களின் நலனுக்காக மலையாக மாறியவர். இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலையில் எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் உற்சவமும் ஒன்று.

    மற்ற சிவாலயங்களில், சக்தி தலங்களில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரங்கள் செய்து மட்டுமே வழிபடுவார்கள்.

    ஆனால் திருவண்ணாமலையில் வீதிஉலா, தீர்த்தவாரி, வளைகாப்பு அலங்காரம் ஆகியவற்றோடு அன்று இரவு தீ மிதிக்கும் விழாவும் நடைபெறும். தமிழ்நாட்டில் வேறு எந்த பழமையான சிவாலயத்திலும் தீ மிதி விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இது திருவண்ணாமலை தலத்துக்கே உரிய தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

    ஆடி மாதத்தில் இந்த உற்சவத்தை 10 நாட்கள் கோலாகலமாக நடத்துவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்த உற்சவம் தொடங்குகிறது. 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் அஸ்திரதேவர் (சூலம்) எடுத்துச் செல்லப்பட்டு பராசக்தி வடிவில் மாடவீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் தினத்தன்று காலை முதல் நள்ளிரவு வரை திருவண்ணா மலை ஆலயமே கோலாகலமாக இருக்கும்.

    அன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் உச்சிகாலத்தில் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தீமிதித்தல் விழா நடைபெறும். உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு மிகப்பெரிய நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெறும். உண்ணாமுலை அம்மன் பராசக்தியாக வந்து தீ குண்டத்தில் எழுந்தருள்வாள்.

    இறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல இந்த தீ மிதி விழா நடைபெறும். இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-

    ஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார். இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது. ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது. உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.

    அதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார். பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார். அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார். காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.

    இதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார். அப்போது பார்வதியிடம் அவர், “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்” என்றார். அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்” என்று கூறினார். உடனே சிவபெருமான் காஞ்சீ புரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும். அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.

    அதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார். அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார். இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார். அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.



    இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணா மலைக்கு சென்று அடைந்தார். முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார். அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர். அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள். பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

    பார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். 8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர். அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர். அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது. விரைவில் இன்னொரு அத்தியாயத்தில் இதுபற்றி விரிவாக காணலாம்)

    பார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது. அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார். (இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.

    பார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார். பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார். பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார். அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர். அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.

    இரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள். ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை. ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம். ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.

    சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை. ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.

    இதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார். ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.

    சிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம். இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும். பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.

    நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள். பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும். அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள். அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார். அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது. இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, “தீ-விரத-சத்திநிபாதம்” என்று சொல்வார்கள்.

    உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7-8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள். அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.

    உண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.
    திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.
    தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த மலைகளில் மிகுந்த தனித்துவமும், சிறப்பிடமும் கொண்டது திருவண்ணாமலை. சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதால், சித்தப் புருஷர்களை அதிக அளவில் ஈர்க்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்கிறது. இதனால் தான் அண்ணாமலையை, ‘‘ஞானத் தபோவனரை வா என்று அழைக்கும் மலை’’ என்று குரு நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

    சித்தர்களின் தவ பூமியாகத் திகழும் இந்த மலையில் கண்ணுக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் ஈசனிடம் அருள்பெற்று, பக்தர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும் உண்டு. திருவண்ணாமலை மலை மட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் ஒளிதேகம் பெற்ற இடம் உள்ளது.

    அதுபோல மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முக்தி மண்டபத்தில் அருணாசலேஸ்வரர், யோகியாக சூட்சும வடிவில் இன்றைக்கும் சித்தர்களுக்கு தரிசனம் தருவதாக சொல்கிறார்கள். அந்த முக்தி மண்டபம் அருகே அமர்ந்து தியானம் செய்தால் சித்தர்களின் அருளைப் பெற முடியும்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரூப நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ‘கிரிவலம் செல்ல வேண்டும்’’ என்பதையே பிரதானமாக வலியுறுத்தினார்கள். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.

    கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்தார். அதை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார்.

    தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர்.

    ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி குகை நமசிவாயர் தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.

    அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்று சமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது, நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும்! என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம், சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு நன்கு காய்ச்சிய இரும்பை பிடித்து காட்டுங்கள்! என்றான்.

    அதற்கு நமசிவாயர், இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே என்று விரூபாட்சித் தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய விரூப்பாட்சிய தேவர் பழுக்கக் இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.

    சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார்.
    அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுல்லைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன.

    குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.

    அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.



    அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

    ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள்.

    இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்து வந்தான். கோவிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான்.

    இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீரோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின் நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் குகை நமசிவாயர் செய்தார்.

    ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்துள்ள குகை நமசிவாயர் நடத்திய சித்தாடல்கள் ஏராளம். ஒருதடவை இறந்து போன ஆட்டுக்கு உயிர் கொடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். உடனே சிலர் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்து, பாடையில் கட்டி குகை நமசிவாயரிடம் தூக்கிச் சென்றனர். ‘‘சாமீ இவன் செத்துப் போயிட்டான். ஆட்டுக்கு உயிர் கொடுத்தது போல இவனுக்கும் உயிர் கொடுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

    உடனே குகை நமசிவாயர், ‘‘ஆமா... .... இவன் செத்து போயிட்டான். கொண்டு போய் புதைத்து விடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் சிரித்தனர்.
    ‘‘டேய் எழுந்திருடா... சாமீ பொய் சொல்றாருடா...’’ என்றனர். ஆனால் பாடையில் படுத்து வந்தவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் விட்டான். இந்த சம்பவத்துக்குப் பிறகு திருவண்ணாமலையில் குகை நமசிவாயரை, அனைவரும் பயபக்தியுடன் நடத்தினார்கள்.

    குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது.

    எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது. குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

    ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.

    அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது.

    ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்று மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.

    மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. 500 ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். குகை நமசிவாயரின் 18-வது வாரிசுதாரர் தற்போது இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறார்.
    மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.
    திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் பிரமோற்சவங்களில் ஆனி மாதம் நடத்தப்படும் தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம் மிகவும் முக்கியமானது. இந்த பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். ஆதிகாலத்தில் திருவண்ணாமலையில் இந்த பிரமோற்சவம்தான் மிக மிக விமரிசையாக நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

    கார்த்திகை தீப திருவிழாவை விட ஆனி மாத தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம்தான் அதிக சிறப்பாக நடந்ததாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு கொண்ட தட்சிணாயண பிரமோற்சவம் இந்த ஆண்டு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. காலை-மாலை இரு நேரமும் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.

    நாளை (13-ந்தேதி) வெள்ளிக்கிழமை இந்த பிரமோற்சவத்தின் 7-ம் நாள் திருவிழா ஆகும். திங்கட்கிழமை (16-ந்தேதி) தட்சிணாயண பிரமோற்சவத்தின் 10-ம் நாள் திருவிழா நடைபெற உள்ளது. அன்று உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் அய்யங்குளத்துக்கு சென்று தீர்த்தவாரி செய்வார். இதையடுத்து அவரது வீதிஉலா நடைபெறும். மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்துவார்கள்.

    அதே தினத்தன்று மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடைபெற உள்ளது. நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலையில் தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது.

    திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்துள்ளனர். அவர்களில் மாணிக்கவாசகருக்கு தனி இடம் உள்ளது. அதற்கு காரணம் திருவண்ணாமலை தலத்தில் அவர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள்தான்.

    9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் மதுரை அருகே திருவாதவூரில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு திருவாதவூரார் என்றே பெயரிட்டனர். இளம்வயதிலேயே தமிழ் பக்தி இலக்கியத்தில் புலமை பெற்றிருந்த அவரது புகழ் நாடெங்கும் பரவியது. அந்த சமயத்தில் மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.

    அவன் திருவாதவூராரின் திறமையை அறிந்து அவரை அழைத்து தலைமை அமைச்சராக நியமித்தான். ஒரு தடவை சோழநாட்டில் குதிரைகள் வந்திருப்பதாக அறிந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அந்த குதிரைகளை வாங்குவதற்காக திருவாதவூராரிடம் நிறைய பொற்காசுகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.

    சோழ நாட்டுக்கு புறப்பட்டு சென்ற திருவாதவூரார் அறந்தாங்கி அருகே உள்ள திருபெருந்துறையை அடைந்ததும் அங்குள்ள ஒரு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குரு வடிவம் எடுத்து அமர்ந்து இருப்பதை கண்டார். உள்ளம் உருகிய திருவாதவூரார் தன் கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் அங்கு சிவாலயம் கட்டுவதற்கு செலவழித்தார். அதோடு சிவபெருமான் மீது நிறைய பாடல்களையும் பாடினார்.

    அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் அவரது பெயர் மாணிக்கவாசகர் என்று மாறியது. இதற்கிடையே குதிரை வாங்க சென்ற அமைச்சரை காணவில்லையே என்று படை வீரர்களை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அனுப்பி வைத்தான். அந்த படை வீரர்கள் திரும்பி வந்து திருவாதாவூரார் குதிரை வாங்கவில்லை, பொற்காசுகளை எல்லாம் சிவாலயம் கட்ட செலவழித்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதனால் கோபம் அடைந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை இழுத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி மாணிக்கவாசகர் மதுரைக்கு இழுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் சிவனை நோக்கி மனமுருக வேண்டினார். தனது பக்தன் கஷ்டப்படுவதை கண்ட சிவபெருமான் அவரை மீட்க திருவிளையாடல் நடத்தினார்.

    நிறைய நரிகளை பரி(குதிரை)களாக மாற்றி அனுப்பினார். அதை உண்மை என்று நம்பிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் உடனே மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். ஆனால் அன்று இரவே பரிகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறின. இதை கண்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன் கோபத்துடன் மாணிக்கவாசகரை தண்டித்தான். அப்போதும் சிவபெருமான் திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரை மீட்டார்.

    பிறகு மாணிக்கவாசகரிடம் இனி நீங்கள் ஆலயம் ஆலயமாக சென்று திருப்பணி செய்யும்படி சிவபெருமான் உத்தரவிட்டார். அதை ஏற்று மாணிக்கவாசகர் தல யாத்திரை புறப்பட்டார். அவர் எந்தெந்த ஆலயங்களுக்கு செல்கின்றாரோ அங்கெல்லாம் பாடல்கள் பாடினார்.

    1. நமச்சிவாய வாழ்க என தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4.குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து, 6. ஆசைப் பத்து, 7. வாழப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட்பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம்,14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம், 21. திருச்சதகம், 22. நீத்தல் விண்ணப்பம், 23. திருப்புலம்பன், 24. பிடித்த பத்து ஆகியவற்றை படைத்தார். இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் அனைத்தும் படித்து படித்து இன்புற தக்கவையாகும்.



    பாண்டிய நாடு, சோழ நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இந்த பாடல்களை அவர் பாடி இருந்தார். அங்கு தல யாத்திரை முடித்து விட்டு விருத்தாசலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார்.

    வைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.

    ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார்.

    அந்த பாடல்களை திருவண்ணாமலையில் உள்ள பெண்கள் பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில்தான் திருவண்ணாமலையில் தற்போது அவருக்கான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    அந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தந்த விழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆனி மாதம் மகம் நட்சத்திரம் நாளில் மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடத்தப்படுகிறது. அன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    இந்த ஆண்டுக்கான மாணிக்கவாசகர் குரு பூஜை வருகிற திங்கட்கிழமை (16-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாரதனை காட்டப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் அபரிமிதமான பலன்களை பெறலாம்.
    அன்றைய தினம் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையை அந்த தலத்தில் அமர்ந்து பாடி சிவனையும், பார்வதியையும் வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

    மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் வரிசையில் நால்வர்கள் சிலைகள் தனியாக உள்ளன. அங்கு இடம் பெற்றுள்ள மாணிக்கவாசகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அன்று காலை சிறப்பு ஆரத்தி நடைபெறும்.

    திருவண்ணாமலை தலத்தில் சில ஆண்டுகள் இருந்த பிறகு மீண்டும் தல யாத்திரையை தொடங்கிய மாணிக்கவாசகர் பல்வேறு ஆலயங்களுக்கு சென்றார். இறுதியில் அவர் தனது 32-வது வயதில் சிதம்பரத்தில் நடராஜருடன் ஐக்கியம் ஆகி விட்டார். ஞானநெறியை பின்பற்றிய மாணிக்கவாசகர் இறைவனுக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை.

    சிதம்பரத்தில் அவர் சொல்ல சொல்ல சிவபெருமானே ஓலைச் சுவடிகளில் பாடல்களை எழுதினார். அந்த பாடல்களின் முடிவில் “மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன்” என்று சிவபெருமான் கையெழுத்திட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவைதான் திருவாசகமும், திருக்கோவையுமாகும்.

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். அந்த மகிமையும் சிறப்பும் பெருமையும் மாணிக்கவாசகருக்கு உண்டு. மாணிக்கவாசகர் மொத்தம் 656 பாடல்கள் பாடினார். அந்த பாடல்களின் கூட்டு தொகை 8 ஆகும். அதனால்தான் என்னவோ திருமுறை நூல்களில் 8-ம் திருமுறையாக மாணிக்கவாசகரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன. எனவே மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.

    திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களில் 99 சதவீதம் பேர் மாணிக்கவாசகர் பற்றி தெரிந்தும், தெரியாதது போல, மாணிக்கவாசகர் ஆலயத்தை கடந்து சென்று விடுகிறார்கள். இனியாவது அண்ணாமலையார் புகழ் பாடிய மாணிக்கவாசகருக்கு மரியாதை செலுத்துங்கள்.
    பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
    ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
    அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

    அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

    அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
    அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

    ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

    சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
    தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

    இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

    குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

    அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

    பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

    அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

    இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.



    அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

    பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

    அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

    மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

    அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

    171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

    பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

    அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

    அம்மணி அம்மாள் பற்றிய கூடுதல் தகவல்களை 90421 40747 என்ற எண்ணில் ரமேஷ் என்பவரிடம் பெறலாம். 
    திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.
    திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

    அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

    1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
    3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
    7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
    9. மேற்கு கட்டை கோபுரம்.

    1. ராஜகோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

    ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

    கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

    தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

    கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

    அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    2. பேய்க்கோபுரம்

    ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

    இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

    3. திருமஞ்சன கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

    ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.



    4. வல்லாள மகாராஜா கோபுரம்

    இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

    இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    5. கிளி கோபுரம்

    திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

    6. தெற்கு கட்டை கோபுரம்

    திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

    7. மேற்கு கட்டை கோபுரம்

    பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

    8. வடக்கு கட்டை கோபுரம்

    அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

    9. அம்மணியம்மாள் கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது. 
    இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் எண்ண முடியாத அளவுக்கு எத்தனையோ சித்தர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சித்தர்கள் உறைந்து அருள்பாலிக்கும் இடங்கள்தான் நாளடைவில் மிகப்பெரும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களாக மாறி இருக்கின்றன.

    ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த வகையில் பதினெண் சித்தர்களாக கருதப்படும் 18 சித்தர்கள் உறைந்துள்ள 18 ஆலயங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலயத்துக்குள் எந்த பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இடைக்காடர் சமாதி திருவண்ணாமலை மலை உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    பொதுவாக சித்தர்கள் பல்வேறு வகையான சமாதி நிலைகளை எட்டுவது உண்டு.

    மறுபிறவியற்ற நிர்விகற்ப சமாதி, நன்மை, தீமை இரு நிலையுடன் கூடிய விகற்ப சமாதி, உடலுக்கும், மனதுக்கும் சஞ்சீவி தன்மை அளிக்கும் சஞ்சீவனி சமாதி, உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரைப் பிரிக்கும் காயகல்ப சமாதி, நீண்ட யோகா பயிற்சி மூலம் உடலை ஒளி உடலாக மாற்றிக் கொள்ளும் ஒளி சமாதி மற்றும் மகா சமாதி, விசார சமாதி, விதர்க்க சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி என்று பலவகைகள் உண்டு.

    இதில் இடைக்காடர் ஒளி சமாதி ஆகி இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரது ஒளி சமாதியாக கருதப்படும் இடமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தான் மக்கள் அந்த ஒளி சமாதியை தெரிந்து கொண்டு வழிபட தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு, இடைக்காடர் சித்தர் யார்? அவர் எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார்? திருவண்ணாமலை தலத்தில் என்னென்ன அற்புதங்களை செய்தார் என்பதை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரில்தான் இடைக்காடர் சித்தர் அவதரித்தார். கோனார் என்று அழைக்கப்படும் இடையர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இடைக்காடர் எப்போதும் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பார். பிறந்தது முதல் அவருக்கு இந்த சித்தி வாய்த் திருந்தது. ஆடுகளை மேய்ச்சலில் விடுவதற்காக காட்டுக்குள் அழைத்து செல்லும்போது அவர் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து சிவசிந்தனையில் ஏகாந்த நிலைக்கு சென்று விடுவார்.

    ஆடு மேய்ப்பது, பால் கறப்பது, புல்லாங்குழல் ஊதுவது, சிவசிந்தனையில் ஆழ்ந்து விடுவது.... இதுதான் இடைக்காடரின் தினசரி வாழ்வியல் வழக்கமாகும். தினமும் அவர் ஆடுகளை காட்டுக்கு அழைத்து சென்று மேய வைத்துவிட்டு வருவார். ஒருநாள் அப்படி அவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு மரத்தடியில் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    அப்போது வான்மார்க்கத்தில் போகர் சித்தர் சென்று கொண்டிருந்தார். அவர் சிவசிந்தனையில் ஆழ்ந்துள்ள இடைக்காடரை பார்த்ததும் வான் மண்டலத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதால் பால் தருமாறு கூறினார். உடனே இடைக்காடர் ஆட்டு பால் கொடுத்து போகரை உபசரித்தார்.



    இதனால் மகிழ்ச்சி அடைந்த போகர் வைத்திய, வாத, யோக, ஞானங்களை இடைக்காடருக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று கொடுத்தார். இதனால் இடைக்காடர் சாதாரண நிலையில் இருந்து சித்த புருஷராக மாறினார்.

    போகரை குருவாக ஏற்று அவர் செயல்பட்டார். கருவூராரும் அவருக்கு குருவாக இருந்ததாக சொல்வார்கள். இடைக்காடர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. சித்தர்களின் கால தொடக்கம் நான்காம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே அப்போது இடைக்காடர் வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    சித்தராக உயர்ந்த இடைக்காடர் நிறைய நூல்கள் எழுதினார். வைத்தியம் தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உயர்வானவை. அதுபோல முக்தி பெற அவர் பாடி உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நமது மனதை பண்படுத்தக்கூடியவை.

    ஜோதிடத்தில் அவர் எழுதிய கணிப்புகள் இன்று ஜோதிட உலகுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே இடைக்காடர் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்புகளை வைத்துதான் இப்போது ஆண்டு தோறும் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஆற்றல் கொண்ட இடைக்காடர் திருவண்ணாமலை தலம் உருவாகவும், புகழ் பெறவும் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதற்கான சான்றுகள் திருவண்ணாமலை தலம் முழுக்க உள்ளன. ஆனால் அண்ணாமலையாரை வழிபட செல்பவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே.
    இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆனால் போகர்தான் இவரை திருவண்ணாமலை தலத்துக்கு அனுப்பியதாக வரலாறு உள்ளது.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்த உலகில் விரைவில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதையும் பஞ்சம் சுமார் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும் தனது ஜோதிட திறமையால் உணர்ந்தார். தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தி அந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது ஆடுகளுக்கு எருக்கம் இலையை உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார். பொதுவாக எருக்கம் செடிகள் எந்த கொடிய வறட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. எனவேதான் அவர் அதை தனது ஆடுகளுக்கு உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார்.

    பிறகு 12 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வரகு எனும் தானியத்தை மண்ணோடு சேர்த்து சுவர்கள் எழுப்பி குடிசை கட்டினார். அவர் எதிர்ப்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. எல்லா உயிரினங்களும் பஞ்சத்தில் சிக்கி அழிந்தன. ஆனால் இடைக்காடருக்கும், அவர் வளர்த்த ஆடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது ஆடுகள் எருக்கம் இலையை தின்று உயிர் வாழ்ந்தன. இடைக்காடர் குடிசை வீட்டு சுவரில் பதிய வைத்திருந்த வரகு தானியத்தை தட்டி எடுத்து ஆட்டு பாலில் காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்தார்.

    இதைப் பார்த்த நவக்கிரகங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நாம் திட்டமிட்டு கிரக நிலைகள் மூலம் வறட்சியை ஏற்படுத்தினாலும் இடைக்காடர் மட்டும் எப்படி உயிர் தப்பினார் என்று யோசித்தனர். இதற்கு விடை காண்பதற்காக இடைக்காடர் வாழும் குடிசைக்கு நவக்கிரகங்கள் வந்தனர். நவக்கிரகங்களை வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு உணவு தானியத்தையும், ஆட்டு பாலையும் கொடுத்து உபசரித்தார். ஆட்டு பாலில் சமைத்த உணவை சாப்பிட்டதால் நவக்கிரகங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது. அவர்கள் அப்படியே தூங்கிப் போனார்கள்.



    கிரகங்கள் மாற்றத்தால் தான் மழை பெய்யவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த இடைக்காடர் மழை பெய்ய வைக்கும் வகையில் நவக்கிரகங்களின் நிலைகளை மாற்றிப் படுக்க வைத்தார். அடுத்த கணமே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. உலகம் முழுக்க உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. தொடர் மழை காரணமாக உலகமே குளிர்ந்தது.

    தங்களை சுற்றி திடீரென குளிர்ச்சி தன்மை உருவாகி இருப்பதை உணர்ந்த நவக்கிரகங்கள் விழித்து எழுந்தனர். உலகில் பஞ்சம் நீங்கி எங்கு பார்த்தாலும் தண்ணீர் வளம் அதிகமாகி குளிர்ச்சி பெற்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இடைக்காடர் மூலம்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    இடைக்காடரை இதற்காக பாராட்டினார்கள். அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து விட்டு சென்றனர். திருவண்ணாமலை தலத்தில் நடந்த இந்த அதிசயம் உலகம் முழுக்க பரவியது. இதற்கு என்ன சான்று இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். திருவண்ணாமலை தலத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

    திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருவண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருவண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    திருவண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

    கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துக்கள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
    இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும். 
    நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.
    நாம் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே தீர்த்து விடுவது நல்லது. இல்லையெனில் அந்த பாவங்கள் மூட்டையாக சேர்ந்து அடுத்தப்பிறவியிலும் தொடரக்கூடும்.

    அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சரி.... இந்த ஜென்மத்து பாவங்களையும், கடந்த பிறவிகளில் செய்த பாவங்களையும் எப்படி போக்குவது? இதற்காக நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக, மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைவதே அந்த எளிய வழி.

    திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது.

    அந்த வரலாறுகளை எல்லாம் சைவ எல்லப்ப நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலில் பாவம் தீர்த்த சருக்கம் எனும் பகுதியில் மிக விளக்கமாக எழுதியுள்ளார். அதை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் எளிய தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.

    ஒரு தடவை பிரம்மனிடம் சென்ற அஷ்ட வசுக்கள், தாங்கள் தவம் இருந்து வரம் பெற்றது பற்றி பெருமையாகப் பேசினார்கள். அதைக் கேட்டதும் பிரம்மனுக்கு கோபம் வந்து விட்டது. “உங்களை துன்பம் பிடிக்கும்” என்று சாபமிட்டார். இதனால் வேதனை அடைந்த அஷ்ட வசுக்கள், தங்கள் மீதான இந்த சாபம் எப்போது தீரும் என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, “சிவபெருமானால் உங்கள் சாபம் தீரும்” என்றார்.

    இதையடுத்து அஷ்ட வசுக்கள் கங்கை கரைக்கு சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவர்கள் முன்பு தோன்றிய சிவபெருமான், “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அஷ்ட வசுக்கள் தங்களுக்கு பிரம்மன் விதித்த சாபம் பற்றி கூறினார்கள். உடனே சிவபெருமான் அவர்களிடம், “திருவண்ணாமலைக்கு செல்லுங்கள். அங்குள்ள மலையின் மீது ஆளுக்கொரு பக்கமாக 8 திசைகளிலும் அமர்ந்து தவம் செய்யுங்கள். ஒருநாள் உங்களுக்கு அந்த மலை 8 முக வடிவத்துடன் காட்சித் தரும். அந்த காட்சியைப் பார்த்ததும் உங்கள் சாபம், பாவம் எல்லாம் தீர்ந்து விடும்” என்றார்.

    அதன்படி அஷ்ட வசுக்கள் திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்து தங்களது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். பிரம்மனிடம், ஒரு தடவை இந்திரன் ஒரு வேண்டுகோள் வைத்தான். உலகில் உள்ள எல்லா அழகான பெண்களையும் ஒன்று சேர்த்து மிகவும் பேரழகு வாய்ந்த பெண்ணை படைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    அதன்படி பேரழகு வாய்ந்த பெண்ணை பிரம்மன் படைத்தான். அந்த பெண்ணுக்கு “திலோத்தமை” என்று பெயரிட்டனர். அவளது அழகைப் பார்த்து, படைத்த பிரமமனுக்கே ஆசை வந்து விட்டது. காமத்தில் மூழ்கிய பிரம்மன் தனது அறிவை இழந்தார். திலோத்தமையை விரட்டினார். பிரம்மனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினாள். ஆனால் பிரம்மன் விடாமல் துரத்தினார். இதனால் திலோத்தமை வேறு, வேறு வடிவம் எடுத்து பிரம்மன் பார்வையில் இருந்து தப்பினாள்.

    ஒரு கட்டத்தில் அவள் மான் வடிவம் எடுத்து துள்ளி, துள்ளி ஓடினாள். அவளை கண்டு கொண்ட பிரம்மா, கலைமான் வடிவம் எடுத்து பின் தொடர்ந்தார். இதையடுத்து திலோத்தமை கிளியாக மாறிப் பறந்தார். உடனே பிரம்மாவும் ஆண் கிளியாக மாறிப் பின்னே பறந்தார். இதனால் அவள் தவித்தாள். அடுத்து என்ன வடிவம் எடுப்பது என்று திலோத்தமை யோசித்தப் போது, அவள் கண்ணில் திருவண்ணாமலை மலை தெரிந்தது.



    “அண்ணாமலையாரே.... காப்பாற்றும்” என்று தஞ்சம் அடைந்தாள். அடுத்த நிமிடம், மலை வெடித்தது. உள்ளே இருந்து ஈசன் வெளியில் வந்தார். வில் ஏந்திய கோலத்தில் வேடன் போன்று நின்ற அண்ணா மலையாரை சுற்றி வந்து திலோத்தமை சரண் அடைந்தாள். அவளை விரட்டி வந்த பிரம்மன், திடீரென தன் எதிரே ஈசன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.

    திலோத்தமை மீது கொண்ட மையல் அவரிடம் இருந்து நீங்கியது. அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது சிவபெருமான் அவரிடம், “நீ படைத்த பெண் மீது நீயே மையல் கொண்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். கற்ப கோடி காலம் தாண்டினாலும் அந்த பாவம் தீராது. ஆனாலும் இந்த மலையை வணங்கியதால் உன் பாவம் நீங்கியது” என்று அருளினார்.

    இதே போன்றுதான் ஒரு தடவை விஷ்ணுவின் பாவத்தையும் அண்ணாமலையார் நீக்கினார். ஊழிக்காலம் முடிந்து இருள் நீங்கிய பிறகு அனைவரும் சிவபெருமான் ஒளியால் உறக்கத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் விஷ்ணு மட்டும் உறக்கத்தில் இருந்து எழாமல் இருந்தார். அவர் எழுந்து பிரம்மனை படைத்தால்தான் உலகைப் படைக்க முடியும். அதை செய்யாமல் தூங்கி விட்டதால், தன்னை பாவம் பிடித்து விட்டதாக விஷ்ணு கருதினார்.

    அந்த பாவத்தை போக்குவதற்காக அண்ணாமலையாரை நினைத்தார். அடுத்த வினாடி வெண்ணிற எருதின் மீது சிவபெருமான் தோன்றினார். திருவண்ணாமலைக்கு சென்று வழிபடும்படி கூறினார்.அதை ஏற்று விஷ்ணு திருவண்ணாமலைக்கு வந்து பூஜைகள் செய்து தன் மீதான வினைகளைத் தீர்த்துக் கொண்டார்.

    சந்திரன் 27 நட்சத்திரங்களையும் திருமணம் செய்தார். அந்த 27 பேரில் ரோகிணி மீது மட்டும் அவர் மிக, மிக விருப்பம் உடையவராக இருந்தார். இதனால் மற்ற 26 நட்சத்திரங்களும் வேதனை அடைந்தன. இது சந்திரனுக்கு பாவமாக மாறியது. அது மட்டுமின்றி தச்சன் கொடுத்த சாபமும் பலித்தது. அந்த சாபத்தால் சந்திரன் 15 நாள் வளர்வதாகவும், 15 நாள் தேய்வதாகவும் இருந்தான்.

    திருவண்ணாமலைக்கு வந்து வழிபட்ட பிறகே தன் மீதான சாபத்தையும், பாவத்தையும் சந்திரனால் போக்கிக் கொள்ள முடிந்தது. ஒரு தடவை சூரிய பகவான் தனது தேரை திருவண்ணாமலை நேர் விண்ணில் செலுத்திக் கொண்டிருந்தான். அப்போது அண்ணாமலையார் கோபத்தில் மலையை வெடித்துக் கொண்டு வெளியில் வந்தார். இதனால் சூரிய பகவானின் தேர் எரிந்து சாம்பலானது.

    அதன் பிறகே சூரிய பகவானுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. ஈசன் தலை உச்சி மீது தேரை செலுத்தியதால் பாவம் ஏற்பட்டதாக உணர்ந்தான். திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் செய்து தனது பாவத்தை போக்கினார். அன்று முதல் சூரியன் அண்ணாமலையார் உச்சி மீது வருவதில்லை. சுற்றியே செல்கிறார்.

    இப்படி திருவண்ணாமலை தலத்துக்கு வந்து தங்களது பாவத்தை தீர்த்துக் கொண்டவர்கள் ஏராளம். தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் மட்டுமல்ல சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். பதினென் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் வாழ்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். அதோடு இன்றும் அவர் அங்கேயே உறைந்துள்ளார். 
    தப்பு செய்தால்... அண்ணாமலையார் நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
    திருவண்ணாமலை தலம் சிவபெருமானே விரும்பி வந்து அமர்ந்துள்ள தலமாகும். அங்குள்ள மலையை வெறும் கல்லும், மண்ணும், மரமுமாக பார்க்காதீர்கள். அந்த மலைதான் சிவபெருமான். இதை சிவபெருமானே பலருக்கு பல தடவை உணர்த்தி உள்ளார்.

    உலகில் வேறு எந்த ஒரு மலைக்கும் இந்த சிறப்பு கிடையாது. ஈசன் உறைந்து இருப்பதாக கூறப்படும் இமயமலைக்கு கூட திருவண்ணாமலைக்கு நிகரான மகத்துவங்கள் இல்லை. எனவேதான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அருள் ஒளி வீசி பக்தர்களை அழைத்து அரவணைக்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    திருவண்ணாமலைக்கு செல்பவர்களில் பலர் நல்லது செய்கிறார்கள். சிவனடியார்களுக்கு தானம் செய்கிறார்கள். புண்ணியத்தை சேகரித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். சிவன் சொத்து குலம் நாசம் என்று சொல்வார்கள். என்றாலும் ஈசனுக்கு உரியதை தங்களுக்கு உரியதாக நினைத்து மனம் துணிந்து அதர்மமாக செயல்படுகிறார்கள்.

    நீங்கள் திருவண்ணாமலையில் நல்லது செய்தால் அண்ணாமலையார் உங்களை அன்போடு அரும் மழையில் நனையச் செய்து, தமது காலடி நிழலில் ஓய்வு எடுக்கச் செய்யும் வகையில் ஆசி வழங்குவார். தப்பு செய்தாலோ... நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை.

    காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தவன் பிரதத்த மன்னன். இவனது பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மன்னர்கள் அலறினார்கள். அந்த அளவுக்கு அவன் படைபலம் மிக்கவனாக இருந்தான். ஒரு தடவை அவன் தென்நாடு நோக்கி யாத்திரை வந்தான். நிறைய ஆலயங்களுக்கு சென்றுவிட்டு திருவண்ணா மலை தலத்துக்கு வந்தான். அண்ணாமலை யாரை பார்த்ததும் அவன் மனம் அமைதி அடைந்தது. திருவண்ணாமலையில் தங்கியிருந்து விதம் விதமாக மலர்களை சமர்ப்பித்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வழிபட்டு வந்தான்.

    ஒருநாள் அவன் அண்ணாமலையாரை வழிபட சென்றபோது  ஆலயத்தில் பாட்டுபாடி ஆடும் இளம் தாசிப்பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். இனிமையான குரலில் அண்ணாமலையாரை புகழ்ந்து அவள் பாடிய பாடல் அனைவரையும் சொக்க வைத்தது. பிரதத்த மன்னனும் சொக்கி போனான். அந்த தாசிப் பெண்ணின் அழகும், அறிவும் பிரதத்த மன்னனின் மனதை பாடாய் படுத்தியது. அவளை தனது அந்தபுரத்தில் ஒருத்தியாக வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டான். அந்த பெண்ணிடம் சென்று, “என்னோடு நீ காசிக்கு வந்துவிடு. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்” என்றான்.

    அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் என்னை அழைப்பது நியாயமல்ல என்று அந்த பெண் மறுத்தாள். என்றாலும் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல மன்னன் முயற்சி செய்தான். அப்போது அண்ணாமலையார் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை மன்னனுக்கு அளித்தார். பிரதத்த மன்னனின் முகம் குரங்கு முகம்போல் மாறிப் போனது. ஆலயத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மன்னனை பார்த்து கேலி செய்தனர்.

    செய்வதறியாது  திகைத்து போன மன்னன் தனது தவறை உணர்ந்தான். அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் பெண்ணை கவர முயன்றதுதான் தன் முக மாற்றத்துக்கு காரணம் என்பது தெரிந்து துடித்தான். அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த பொருளையும் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்ல முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டான்.

    தனது தவறுக்கு பிராயசித்தம் தேட முடிவு செய்தான். மகான்களிடம் சென்று நடந்ததை கூறி, என்ன செய்தால் ஈசன் என்னை மன்னிப்பார் என்று கேட்டான். அவனுக்கு வழிபாடு வழிவகைகளை மகான்கள் சொல்லி கொடுத்தனர். அதன்படி தனது யானை படை, குதிரை படை அத்தனையையும் அவன் அண்ணாமலையார் கோவிலுக்கு ஒப்படைத்தான்.

    அவனது தேர் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த தேரையும் அண்ணாமலையாருக்கு கொடுத்தான். பிறகு அண்ணாமலையாரே கதி என்று கோவிலிலேயே கிடந்தான். இடைவிடாமல் அண்ணாமலையாரை வணங்கினான். தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு அண்ணாமலை யாருக்கு மலர்மாலைகள் சாத்தி வழிபட்டான். அவனது உண்மையான பக்தியையும், வழிபாடுகளையும் கண்டு சிவபெருமான் இரக்கம் கொண்டார். மன்னனுக்கு நேரில் காட்சி கொடுத்தார். அதோடு அவனது குரங்கு முகத்தை மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.

    அண்ணாமலையாரின் இந்த  திருவிளையாடலால் மனம் நெகிழ்ந்த பிரதத்த மன்னன் அனைத்து பொருட்களையும் திருவண்ணாமலை ஆலயத்துக்கு காணிக்கை ஆக்கிவிட்டு காசிக்கு புறப்பட்டு சென்றான். அன்று முதல் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த ஒரு பொருளை யார் களவாடினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோரது மனதிலும் நிலை கொண்டது. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எமலோகத்துக்கு போய் அக்கினி குழியில் விழுந்து அவஸ்தை படுவார்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது.



    அதுமட்டுமின்றி இருள் நிறைந்த 28 கோடி நரகங்களிலும் விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு மறுபிறவி கிடைக்கும்போது பூமியில் புழுவாய் பிறப்பார்கள். அவர்களது தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும் என்று சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    திருவண்ணா மலை ஆலயத்தில் திருட வேண்டும் என்று மனதால் நினைத்தாலே போதுமாம், அவர்களை மரணம் விடாது துரத்தும். நிழல் போல தொடரும். திருவண்ணா மலைக்கு வரும் சிவ பக்தர்களுடைய பொருட்களை திருடினால் அவர்களுக்கு  அந்த கணத்திலேயே தண்டனை உண்டு என்றும் அருணாசல புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.

    சில சமயம் அண்ணாமலையார் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் கூட தவறு செய்வதுண்டு. அவர்களுக்கும் தண்டனை கொடுக்க அண்ணாமலையார் தவறியதில்லை. அதற்கும் ஒரு கதை இருக்கிறது.

    புளகாதிபன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு நினைத்த நேரத்தில் நினைத்தபடி உருவம் எடுக்கும் சக்தி இருந்தது. ஒருநாள் அவன் புனுகுப் பூனையாக வடிவம் எடுத்தான்.திருவண்ணாமலை மலை மீது பூனை வடிவில் அவன் உலவினான். அப்போது மலை முழுக்க அந்த பூனையில் இருந்து புனுகு சிதறியது.
    புனுகின் வாசனையால் அண்ணாமலை முழுவதும் வாசனை யாக மாறியது.

    இதன் காரணமாக அண்ணா மலையாரின் அருளை புளகாதிபன் அசுரன் பெற்றான். இதனால் அவனுக்கு கூடுதல் பலம் கிடைத்தது. அந்த பலம் அவனுக்குள் ஆணவத்தை யும், அகந்தையை யும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவன் திருவண்ணா மலையில் இருந்த முனிவர் களையும், மகான் களையும்  மிகவும் கஷ்டப் படுத்தினான். அவனது தொல்லை தாங்காமல் சிவனடியார்கள் கதறினார்கள்.

    ஒருநாள் அந்த சிவனடியார்கள் ஈசனிடம் புளகாதிபன் அசுரன் செய்யும் தொல்லைகளை சொல்லி அழுதனர். இதனால் அண்ணாமலையார் இந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தார்.

    அருணாசல மலையில் புளகாதிபன் அசுரன் புனுகு பூனையாக  அலைந்தபோது நிறைய புனுகை சிதற வைத்து வாசனை ஏற்படுத்தியதால் அவனை எளிதில் அழிக்க முடியாது. எனவே அவனுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறேன்  என்று அண்ணாமலையார் தெரிவித்தார். புளகாதிபனை அழைத்த அண்ணாமலையார், “அசுரனே உனது பிறவி முடிந்தது. உனக்கு மோட்சம் அளிக்க உள்ளேன். எனவே உனது உயிரை விட்டுவிடு” என்றார். அதை கேட்ட அசுரன் ஒரே ஒரு வேண்டுகோளை அண்ணாமலையாரிடம் தெரிவித்தான். பூனைகளிடம் இருந்து கிடைக்கும் புனுகை அணிந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும். அதோடு உங்களுக்கு “புனுகணி ஈசன்” என்ற பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    அண்ணாமலையார் அவனது கோரிக்கையை ஏற்றார். இதையடுத்து அந்த அசுரன் தனது உயிரை விட்டு அண்ணா மலையாரின் திருவடிகளை சென்று அடைந்தான். இதன் மூலம் தனக்கு பணிவிடை செய்பவர்கள் அசுரனாக இருந்தாலும் அவர்களுக்கு ஈசன் மோட்சம் அளிப்பது தெரிய வருகிறது.
    அதுமட்டுல்ல திருவண்ணாமலையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அண்ணாமலையாரின் அருள் ஆசி கிடைக்கும். ஒரு தடவை திருவண்ணாமலை ஆலய பலிபீடத்தில் இருந்த நைவேத்தியத்தை ஒரு காக்கை எடுத்து உண்டது. அப்போது அந்த காக்கை தனது சிறகுகளை மிக வேகமாக அடித்தது.

    இதன் காரணமாக பலிபீடத்தில் இருந்த அழுக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதை பார்த்த அண்ணாமலையார் மகிழ்ச்சி அடைந்தார். பலிபீடத்தை சுத்தப்படுத்திய காக்கைக்கு  இந்திர பதவி வழங்கி அருள் புரிந்தார்.

    மற்றொரு தடவை ஒரு சிலந்தி வலை பின்னியது. அதை பார்த்த அண்ணாமலையார் நமக்கு அந்த சிலந்தி ஆடை தயாரிப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். உடனே அந்த சிலந்தியை அரசனாக பிறக்க செய்து ஆசி வழங்கினார். அதுபோல  ஒரு தடவை பெருச்சாளிக்கு மோட்சம் அண்ணாமலையார் வழங்கி அருள் புரிந்தார்.

    திருவண்ணாமலையை வலம் வந்தாலே நம்மை பிடித்த பாவங்கள், தோஷங்கள் உடனடியாக விலகி விடும். இது திருவண்ணாமலை தலத்தில் எப்போது சிவபெருமான் அடிமுடி காண முடியாத அளவுக்கு அருள்பாலித்து மலையாக அமர்ந்தாரோ அன்று முதல் நடந்து வருகிறது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், எண் வசுக்கள் உள்பட பலர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் பாவத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார்கள். 
    ×