search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் தலத்தின் சிறப்புகள்
    X

    அருணாசலேஸ்வரர் தலத்தின் சிறப்புகள்

    • எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

    பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத்தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்ற தலம்.

    ஐந்து முகமாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை மலையை சுற்றி வரும்போது முதலில் ஓர் முகமாக காட்சியளித்து இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும், அடுத்து இரண்டு முகமாக (அர்த்தநாரீஸ்வரராக) ஆண், பெண் சமமே என்ற தத் துவத்தையும் விளக்குகிறது. சூல முகமாக (மூன்று முகம்) காட்சி தந்து மும்மூர்த்தியாக விளங்கி படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சதுர்முக (நான்கு முகம்) மலையாக காட்சியளித்து வேதங்கள் நான்கு என்பதை விளக்குகிறது. பஞ்ச முகமாக தரிசனம் தந்து பஞ்ச பூதங்கள் கொண்ட மலை என்பதை உணர்த்தும் வகையில் அமைந் துள்ளது திருவண்ணமலை.

    பிரச்சினைகள் நீங்கும்

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலைப் பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    Next Story
    ×