என் மலர்
உலகம்
- கார் வெடி சம்பவத்தில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது.
- தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் வந்துள்ளார். பூட்டான் மன்னரின் 70-வது பிறந்த நாள் விழாவல் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
* இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன்.
* நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
* டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி.
* சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
* உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
* சதிச்செயலின் வேர் வரை சென்று விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடிப்போம்.
* கார் வெடி சம்பவத்தில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது.
* இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுடன் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன்.
* தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில், நமது முன்னோர்களின் உத்வேகம் வசுதைவ குடும்பகம், அதாவது உலகம் முழுவதும் ஒரே குடும்பம்... இந்த உணர்வுகளுடன், பூட்டானில் நடைபெறும் இந்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.
* இன்று, உலகெங்கிலும் உள்ள துறவிகள் உலக அமைதிக்காக ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்கிறார்கள், இதில் 1.4 பில்லியன் இந்தியர்களின் பிரார்த்தனைகளும் அடங்கும் என்றார்.
- பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
- இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.
எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.
- துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
- முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
- படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர்.
மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.
- இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.
- வரி பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இறக்குமதி வரிகள் தான் தனது வலிமையான பொருளாதார ஆயுதம் என்றும் இந்த கொள்கை அமெரிக்காவை வலிமையானதாகவும், செல்வந்தராகவும் மாற்றி உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார். மேலும், அவர் தனது வர்த்தக கொள்கைகளை எதர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. விரைவில் எனது நிர்வாகம் அதனை செலுத்த உள்ளது.
இந்த வருவாய் மூலம் அதிக வருமானம் உள்ளவர்களை தவிர அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் தலா 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம்) ஈவுத்தொகை வழங்கப்படும்.
தனது நிர்வாகம் அமெரிக்காவை மிகவும் பணக்கார நாடாகவும், மிகவும் மதிக்கத்தக்க நாடாகவும் மாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட பணவீக்கம் எதுவும் இல்லை. பங்கு சந்தை விலையில் சாதனை படைத்து இருக்கிறது.
எனது வரிக்கொள்கை உள்நாட்டு முதலீடு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. கட்டணங்களால் மட்டுமே அமெரிக்காவில் தொழில்கள் குவிகின்றன. வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர் இழந்தது.
- ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி அதில் இருந்த 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அதில் விமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்றனர்.
காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்துக்கு அருகே தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர் இழந்தது. இதனால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி அதில் இருந்த 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரஷிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரியை விதித்தார்.
- வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை மக்களுக்கே திரும்ப வழங்குவேன்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வரும் டிரம்ப் அந்நாட்டின் மீது அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். மேலும் பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை நாட்டு மக்களுக்கே திரும்ப வழங்குவதாக ஏற்கனவே அறிவித்தார்.
இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ரூ.1¾ லட்–சம் (2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என டிரம்ப் நேற்று அறிவித்தார். அவற்றை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை சமூக வலைதளமான ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது.
- கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
காபூல்:
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் மந்திரி நூருல்லா நூரி கூறியதாவது:
ஆப்கானியர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன்.
போர் வெடித்தால் ஆப்கானிஸ்தானின் மூத்த குடி மக்களும் இளைஞர்களும் போராடத் தயாராக இருப்பார்கள்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தனது நாட்டின் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவிதிகளில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
- இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக அந்நாட்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. பீல்டு மார்ஷல் உச்சபட்ச பதவி என்பதால் அதில் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய அந்நாட்டு அரசியலமைப்பில் இடமில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் , பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாக இது அமையும். நேற்று தாக்கலான அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
- ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு, சான்ரிகு கடற்கரைக்கு அருகில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தனது எக்ஸ் பக்கத்தில் "சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே தயவுசெய்து கடற்கரையிலிருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள். எதிர்பார்த்ததை விட பெரிய சுனாமி ஏற்படக்கூடும்" என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
- இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
- ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.






